காரில் இருந்து இறங்கி திடீரென பைக்கில் வந்த அமைச்சர் புஸ்சி ஆனந்த்.. பின்னாலேயே ஓடி வந்த நிர்வாகிகள்
சென்னை: சென்னை கோயம்பேடு அருகே பாடிக்குப்பம் பகுதியில் கூவம் ஆற்றை தூர்வாரும் பணியை தொடங்கி வைப்பதற்காக வந்த அமைச்சர் புஸ்சி ஆனந்த், டிராபிக்கில் சிக்கிக் கொண்டதால் பைக்கிலேயே வந்து பணியை தொடங்கி வைத்தார். புஸ்சி ஆனந்த்.. பைக்கில் வந்ததால் நிர்வாகிகள் அதிகாரிகள், பாதுகாவலர்கள் பின்னாடியே ஓடி வந்தனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
சென்னை கோயம்பேடு பாடிக்குப்பம் கூவம் பகுதியில் தூர்வாரும் பணிகள் இன்று தொடங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பங்கேற்று பணிகளை அமைச்சர் புஸ்சி ஆனந்த் துவங்கி வைப்பதாக இருந்தது. இந்த நிகழ்ச்சிக்காக வந்த அமைச்சர் புஸ்சி ஆனந்த் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டார்.

பைக்கில் வந்த புஸ்ஸி ஆனந்த்
இதையடுத்து தவெக நிர்வாகி ஒருவரின் பைக்கை வாங்கிய புஸ்சி ஆனந்த் அதை தானே ஓட்டி வந்தார். தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்த புஸ்ஸி ஆனந்தை அதை பார்வையிட்டார். சுமார் 400 கோடி மதிப்பீட்டில் இந்த பணிகள் நடைபெற உள்ளன. கூவம் ஆற்று பகுதியில் 71 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்த பணிகள் நடைபெறுகின்றன.
கூவம், அடையாறு, கொசஸ்தலை போன்ற ஆறுகளும் பக்கிங்கம் கால்வாய், ஒக்கியம் மடுவு போன்ற வடிகால்களும் தூர்வாரப்படுகின்றன. ஆகாயத்தாமரை, ஆக்கிரமிப்பு உள்ளிட்டவற்றால் நீர்வரத்து பாதிக்கப்படுவதால் அதை சீர் செய்யும் வகையில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பருவமழைக்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட உள்ளது.
கலாய்த்த நெட்டிசன்ஸ்
நீர்வளத்துறை, சென்னை மாநகராட்சி, தனியார் அமைப்புகள் இணைந்து இந்த பணிகள் நடைபெறுகின்றன. கூவம் ஆற்றில் நீர் இல்லாத பகுதியில் இறங்கி அமைச்சர் புஸ்சி ஆனநத் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது தவெக எம்.எல்.ஏக்கள் ரேவந்த் சரண் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான புஸ்சி ஆனந்த் அமைச்சர் என்ற போதிலும் பந்தா எதுவும் இன்றி எளிமையாக பைக்கில் நிகழ்ச்சிக்கு வந்தது அங்கிருந்தர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. புஸ்சி ஆனந்தை பொறுத்தவரை தவெக கட்சி நிகழ்ச்சிகளின் போதும் அவ்வப்போது திடீரென பைக்கில் சென்று வருவார். எங்கு போகிறார். எதற்காக போகிறார் என்றே தெரியவில்லை ஆனால் பைக்கில் போகிறார் என்று கூட நெட்டிசன்கள் சிலர் கலாய்த்தும் பதிவிட்டு வருவார்கள்.
பின்னாடியே ஓடி வந்த நிர்வாகிகள்
தற்போது அமைச்சரான நிலையிலும் புஸ்சி ஆனந்த் டிராபிக் சிக்னலில் மாட்டிக்கொள்ளாமல் தவிர்க்க பைக்கில் வந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன. புஸ்சி ஆனந்த்.. பைக்கில் வந்ததால் நிர்வாகிகள் அதிகாரிகள், பாதுகாவலர்கள் பின்னாடியே ஓடி வந்தனர். எளிமையாக இருக்கிறேன் என்ற பெயரில் பைக்கில் வந்ததோடு, உடன் இருப்பவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதா? என்றும் சமூக வலைத்தளங்க்ளில் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.


Click it and Unblock the Notifications
