இஸ்லாமியர்கள் வசித்த பகுதியில் ஸ்வீப் அடித்த திமுக.. ஐயூஎம்எல் இல்லனாலும்.. எம்.எம்.அப்துல்லா பதிவு!
சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் திமுக அதிக வாக்குகளை கைப்பற்றி இருப்பதாக திமுக முன்னாள் எம்பி எம்.எம்.அப்துல்லா தெரிவித்துள்ளார். திமுகவின் உண்மையான பலம் சிறுபான்மையினர் என்று கூறியுள்ள அப்துல்லா, சிறுபான்மை சமூக மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் தவெக வெற்றி பெற்றுள்ளது. தவெக எதிர்பார்த்த அளவிற்கு பிரம்மாண்ட வெற்றி இல்லை என்பதால், அக்கட்சியினர் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆட்சிக்கு எதிரான மனநிலை 4 மாதத்திலேயே உருவாகிவிட்டதை தவெகவினரும் உணர்ந்து கொண்டுள்ளனர்.

மறுபக்கம் இரு தொகுதிகளிலும் திமுக 2வது இடத்தை பிடித்ததோடு மட்டுமல்லாமல், சட்டசபைத் தேர்தலில் பெற்ற வாக்கு வங்கியை அப்படியே தக்க வைத்து கொண்டுள்ளது. காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் விலகிய போதும், திமுக மீண்டும் அதே அளவிலான வாக்குகளை பெற்று 3வது இடத்திற்கு வந்திருப்பது திமுகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே கூட்டணி கட்சிகள் இல்லாமல் திமுகவால் டெபாசிட் கூட வாங்க முடியாது என்று பேசி வந்தனர். ஆனால் பெரியளவில் எந்தக் கூட்டணி கட்சியும் இல்லாமல் திமுக தனித்தே சுமார் 30% வாக்குகளை தங்கள் வசம் கொண்டுள்ளது உறுதியாகி இருக்கிறது. அதேபோல் ஐயூஎம்எல் இல்லாததால் சிறுபான்மை வாக்குகள் திமுகவுக்கு கிடைக்காது என்று அக்கட்சியினர் பேசி வந்தனர்.
ஆனால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் திமுக அதிக வாக்குகளை கைப்பற்றி இருக்கிறது. இதுதொடர்பான திமுக முன்னாள் எம்பி எம்.எம்.அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில், தாராபுரம் மற்றும் மதுராந்தகத்தில் சிறுபான்மையினர்கள் செறிவாக வாழும் பகுதிகளில் உள்ள பூத்துகளில் கிட்டத்தட்ட ஸ்வீப் அடித்துள்ளது திமுக!!
நாங்கள் தான் இஸ்லாமியர்களுக்கு அத்தாரிட்டி என சொல்லிக் கொண்டும், திமுகவோடு ஒட்டிக் கொண்டும், திமுகவில் இருக்கும் இஸ்லாமியர்களின் வாய்ப்புகளை ஒட்டுண்ணி போல உறுஞ்சிக் கொண்டும் இருந்தவர்களின் உண்மையான பலம் இப்போது வெளிப்படையாக தெரிய வந்ததில் மகிழ்ச்சி.
"திமுகவின் உண்மையான பலம் சிறுபான்மையினர்.. சிறுபான்மையினர் கட்சிகள் அல்ல" என நிரூபித்த சிறுபான்மை சமூக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என்று பதிவிட்டுள்ளார். விஜய் அலைக்கு பின் நடந்த இடைத்தேர்தலிலும் கூட திமுக தனது வாக்கு வங்கியை தக்க வைத்து கொண்டிருப்பது திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் மத்தியில் விவாதமாகி இருக்கிறது.


Click it and Unblock the Notifications
