2 தொகுதி இடைத்தேர்தல்.. திமுக போட்டி! ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு.. பின்னணி என்ன?
சென்னை: மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக இடைத்தேர்தலில் போட்டியிடுமா? அல்லது புறக்கணிக்கப்போகிறதா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் நிலவி வந்தது. இந்த நிலையில் முதல் கட்சியாக இரு தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது திமுக.
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் தனது இல்லத்தில் இன்று முக்கிய ஆலோசனை நடத்திய நிலையில் வெற்றியோ தோல்வியோ களத்தில் இறங்கனும் எனவும், தவெகவுக்கு இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும் எனவும் வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.

2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் 6 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். மதுராந்தகம் (மரகதம் குமாரவேல்), தாராபுரம் (பி. சத்யபாமா), பெருந்துறை (எஸ். ஜெயக்குமார்), அம்பாசமுத்திரம் (எஸ். இசக்கி சுப்பையா), விராலிமலை (சி. விஜயபாஸ்கர்), கரூர் (எம்.ஆர் விஜயபாஸ்கர்) ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதுபோக விஜய் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால், 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. ஆனால், வழக்குகள் காரணமாக மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வரும் அக்டோபர் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
வெற்றி பெறுவது கட்டாயம்
இந்த இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்று அறிவித்து விருப்ப மனு பெறத் தொடங்கியுள்ளது. தவெகவை பொறுத்தவரை இரண்டு தொகுதிகளிலும் ஏற்கனவே வென்ற மரகதம் குமாரவேல், பி சத்யபாமா ஆகியோரே களமிறங்குவார்கள் என்று தெரிகிறது. இடைத்தேர்தலில் தவெகவை வீழ்த்தி அக்கட்சிக்கு செக் வைக்க அதிமுக, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருக்கின்றன. அதேநேரத்தில், தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையிலும் நிலையான ஆட்சியை கொடுக்கவும் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெறுவது கட்டாயம் என்பதால் தவெகவும் தீவிரம் காட்டி வருகிறது.
தவெகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்றும் திமுகவும் வியூகம் வகுத்து வரும் நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடலாமா? அல்லது புறக்கணிப்பா? என்பது குறித்து திமுக இன்று முக்கிய ஆலோசனை நடத்தியது.. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுகவின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வேட்பாளர்களை அறிவித்த திமுக
இந்தக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின், எவ வேலு, டிஆர் பாலு என திமுகவின் உயர்மட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இடைத்தேர்தலை புறக்கணிக்க வேண்டாம்.. வெற்றியோ தோல்வியோ திமுக தேர்தல் களத்தில் வலிமையாக நிற்கும் கட்சி என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்று நிர்வாகிகள் தரப்பில் கூறியதாக சொல்லப்படுகிறது.
அதேபோல, திமுகவை கடுமையாக விமர்சித்து வரக்கூடிய முதல்வர் விஜய்க்கு இடைத்தேர்தலில் பாடம் கற்பிக்க வேண்டும் என்பதில் திமுக தலைமை உறுதியாக இருந்ததாலும் இந்த முடிவு எட்டப்பட்டதாக தெரிகிறது. தேர்தலில் போட்டி என முடிவு எடுத்ததோடு, வேட்பாளர்களையும் அறிவித்து அதிரடி காட்டியுள்ளது திமுக. மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் சுகன்யாவும் போட்டியிடுவார்கள் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
யார் இந்த பரந்தாமன்
2021 தேர்தலில் எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட பரந்தாமனுக்கு மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக சட்டத் துறை இணைச் செயலரும் ஆவார். இதே போன்று தாராபுரம் தொகுதிக்கு சுகன்யாவை வேட்பாளராக அறிவித்துள்ளது திமுக. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இருவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த ஆலோசனையில், சம்மந்தப்பட்ட இரண்டு தொகுதிகள் அடங்கியிருக்கும் மாவட்டங்களின் திமுக நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
இந்த இரண்டு தொகுதிகளும் அதிமுக வென்ற தொகுதிகள் என்பதால், திமுகவின் வெற்றி வாய்ப்பு எப்படி? வாக்குகள் பிரிவதால் தவெகவிற்கு சாதகமாக அமையுமா? என்பது பற்றி ஆலோசித்து முடிவு செய்யப்பட்டது. பொதுத்தேர்தலில் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக முதலிடமும் தவெக இரண்டாம் இடமும், திமுக மூன்றாம் இடத்திற்கும் தள்ளப்பட்டது. தாராபுரம் தொகுதியை பொருத்தவரை அதிமுக வெற்றி பெற்றது. திமுக இரண்டாம் இடமும், தவெக மூன்றாம் இடத்திற்கும் தள்ளப்பட்டது.


Click it and Unblock the Notifications
