திருமங்கலம் முதல் ஈரோடு கிழக்கு ஃபார்முலா வரை.. தமிழகம் சந்தித்த இடைத் தேர்தல் சர்ச்சைகள்
சென்னை: விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சமயத்தில் இடைத் தேர்தல்களில் இதுவரை நடந்த சம்பவங்கள் என்ன? திருமங்கலம் ஃபார்முலா முதல் 20 ரூபாய் டோக்கன் விநியோகம் வரை நடந்த ஜனநாயக கேலிக்கூத்துகளைப் பற்றி கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாம். .
விக்கிரவாண்டி தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானதை அடுத்து, இந்தத் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மக்களவைத் தேர்தலை ஒட்டி, இந்தச் சட்டமன்றத் தொகுதிக்குச் சேர்த்துத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்காக அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை.
இந்நிலையில் இன்று தேர்தல் ஆணையம் 10.07.2024 அன்று விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி கடந்த 8 ஆண்டுகளில் 2முறை இடைத்தேர்தல்களைச் சந்தித்துள்ளது. மறைந்த திமுக எம்.எல்.ஏ. நா. புகழேந்தி 2011இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 93,730 வாக்குகளைப் பெற்று திமுகவுக்கு வெற்றிக்கனியைப் பறித்துத் தந்தார்.
திமுக அரசு 4 ஆண்டுகளை நிறைவு செய்து சாதனையைக் கொண்டாடப்போகும் தருணத்தில், உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த இவர், இயற்கை எய்தினார்.
இதேபோல் 2011 தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டு திமுக சட்டமன்ற உறுப்பினரான கு. ராதாமணி 2019 ஆம் ஆண்டு மறைந்தார்.
இந்தத் தொகுதியில் ஆட்சிக்காலத்திலேயே தனது 2 சட்டமன்ற உறுப்பினர்களை இழந்துள்ளது திமுக என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய செய்தியாக உள்ளது.
திமுக எதிர்க்கட்சியாகவும் அதிமுக ஆட்சி அதிகாரத்திலும் உட்கார்வதற்கு உறுதுணையாக இருந்த 2016இல் சட்டமன்றத் தேர்தலில் கூட, அதிமுகவினால் விக்கிரவாண்டியைக் கைப்பற்ற முடியவில்லை. அந்தளவுக்கு இத்தொகுதி செல்வாக்கு மிக்கதாக இருந்து வருகிறது.
இந்த விக்கிரவாண்டி தொகுதியில் திமுக மற்றும் அதிமுக தாண்டி சிபிஐ (எம்) சார்பில் 2011 ஆர். ராமமூர்த்தி வெற்றி பெற்றுள்ளார். இத்தொகுதி வடதமிழ் நாட்டுக்கு உட்பட்டுள்ளதால், பாமக இங்கே பலமாக உள்ளது. அதே போல தேமுதிகவுக்கும் நல்ல தொண்டர் பலம் உள்ளது.
திமுக ஆட்சிக் காலத்தில் இடைத் தேர்தல் என்றாலே அது திருமங்கலம் தேர்தலைத்தான் ஞாபகப்படுத்தும். 2009இல் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா கரைபுரண்டு ஓடியது.
அதனையொட்டி 'திருமங்கலம் ஃபார்முலா' என்று சொல்லும் அளவுக்கு அந்தத் தேர்தல் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி ஆட்சிக்காலத்திற்கு ஒரு கரும்புள்ளியாக அமைந்தது.
அந்தத் தேர்தலுக்குப் பொறுப்பை திமுக தென் மண்டல பொறுப்பாளராகக் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி நியமிக்கப்பட்டார். ஆகவே, இதன் சூத்திரதாரியாக அவர் முகம் முன்வைக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வென்றது.
இப்படி ஒரு நடைமுறை செயல்பாட்டுக்கு வந்த பிறகு, இடைத் தேர்தல் என்றாலே ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் என்பது எழுதப்படாத விதியாக அமைந்துவிட்டது.
ஆகவே, அதிமுக கூட திமுக ஆட்சியில் நடைபெற்ற இடைத்தேர்தல்களைப் புறக்கணிக்கவே செய்தது.
திமுக முதன்முதலாக ஆட்சிக்கு வந்த 1967இல் இதே திருமங்கலம் தொகுதியில் மட்டும் தேர்தல் நிறுத்தப்பட்டது. இத்தொகுதியில் சுதந்திராக் கட்சி வேட்பாளராகக் களம் கண்ட முத்து ராம தேவர் திடீரென்று மாரடைப்பால் மரணமடைந்ததால், அங்கு மட்டும் ஒரு மாதத்திற்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் நடந்த தேர்தலில் திமுக அதிக இடங்களைப் பெற்று அண்ணாதுரை முதல்வரானார்.
அதன்பின்னர் ஒரு மாதம் கழித்து நடந்த தேர்தலில் காங் வேட்பாளர் ரத்தினசாமி தேவர் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். ஆகவே, காங் வேட்பாளராக என்.எஸ்.வி.சித்தன் அறிவிக்கப்பட்டார். அத்தேர்தலில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார். அது திமுகவுக்குப் பேரிடியாக அமைந்தது.
இந்த ஃபார்முலாவை எல்லாம் மிஞ்சும் விதமாக அமைந்தது 14 ஆண்டுகள் கழித்து ஸ்டாலின் தலைமையிலான ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத் தேர்தல்.
வாக்காளர்கள் பலரை மண்டபத்தில் அடைத்து, அவர்களுக்கு மூன்று வேலை சாப்பாடு, பொழுது போக்கு அம்சங்களுடன் தங்கும் வசதிகளை ஆளும் கட்சி செய்து கொடுத்ததாகப் புகார் எழுந்தது.
இடைத்தேர்தல் முடியும் வரை பண மழை பொழிந்தது. அங்கே மது பானங்கள், பிரியாணி பொட்டலங்கள் கணக்கு வழக்கு இல்லாமல் விநியோகிக்கப்பட்டன. இதனால் திருமங்கலம் ஃபார்முலாவை விஞ்சிவிட்டது ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் ஃபார்முலா என பல கட்சியினர் புகாரளித்தனர்.
திருமங்கலம் ஃபார்முலாவை அழகிரி உருவாக்கினார் என்றால், ஈரோடு கிழக்கு ஃபார்முலாவை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உருவாக்கினார். ஆகவே, அவரை குறித்தது மத்திய பாஜக அரசு. அவர் மீதான வழக்கை விரைவுபடுத்தி சிறையில் அடைத்தது என்ற ஒரு கருத்தும் நிலவி வருகின்றது.
இந்த இடைத்தேர்தல் ஃபார்முலா என்பது ஏதோ திமுகவுக்கு மட்டுமே சொந்தமானதில்லை. கடந்த 2017இல் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வேட்பாளராகக் களம் இறங்கினார் டிடிவி தினகரன். அவருக்குக் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது. அவர் இந்தத் தேர்தலில் 89013 ஓட்டுகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

தேர்தல் ஆணையம் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்ததால் டிடிவி தினகரன் உட்பட யாராலும் பணப்பட்டுவாடா செய்ய முடியவில்லை. ஆகவே வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்வதற்கான புதிய ஃபார்முலாவை தினகரன் செயல்படுத்தியதாகப் பேச்சுகள் அடிப்பட்டன. அவர் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து அதன் மூலம் வாக்குகளைப் பெற்றதாக, தேர்தல் வெற்றிக்குப் பிறகு புகார்கள் எழுந்தன.
ஆனால், அதை தினகரன் திட்டவட்டமாக மறுத்தார்.
எம்.ஜி.ஆர் ஆட்சியிலிருந்த காலத்தில் திமுக இடைத் தேர்தலில் தோற்றது. அப்போது மு.கருணாநிதி எழுதிய கவிதை மிகவும் பிரபலமானது. 'இடி அமீன் ஆட்சியிலே இடைத்தேர்தல் எண்ணம் எள் அளவும் வேண்டாம்' என்று அவர் பாடிய கவிதையில் எம்.ஜி.ராமச்சந்திரனை ஸ்ரீ ராமச்சந்திரனுடன் ஒப்பிட்டு பகடி செய்திருப்பார்.
ஆனால், அவரது திமுக ஆட்சியிலும் இடைத் தேர்தல் என்பது ஜனநாயகமாக நடத்தப்படவில்லை. பண நாயகம்தான் அங்கே தலைவிரித்து ஆடியது என்பது வரலாற்று முரண்!












Click it and Unblock the Notifications