மதுராந்தகம், தாராபுரம் மாதிரி ஆகக்கூடாது! கட்சி தாவியவர்களுக்கு இனி சீட் இல்லை? விஜய் முக்கிய முடிவு
சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. மதுராந்தகத்தில் 85 சதவீதத்திற்கும் அதிகமாகவும், தாராபுரத்தில் 80 சதவீதத்திற்கும் மேலாகவும் பதிவான கடுமையான வாக்குப்பதிவு அரசியல் கட்சிகளின் நெஞ்சில் திக் திக் எகிற வைத்துள்ளது.
பொதுவாக ஆளும் கட்சிக்கு இடைத்தேர்தல் என்பது எளிதான களமாக இருக்கும். ஆனால், இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்காக முதலமைச்சர் விஜய் பட்ட பாடும், கொடுத்த உழைப்பும் தமிழக அரசியலையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வயலில் இறங்கி டிராக்டர் ஓட்டுவது, மாட்டு வண்டி ஓட்டுவது, கிராமத்து டீக்கடைகளில் அமர்ந்து டீ குடிப்பது என இதுவரை விஜய் செய்திராத அளவுக்கான அசாத்திய களப்பணிகளை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு அவரைத் தள்ளியது எது? "கட்சி தாவி வந்த வேட்பாளர்கள் மீதான மக்களின் கடும் அதிருப்திதான்" என்கிறார்கள் அரசியல் கள ஆய்வாளர்கள்.

வேட்பாளர்கள் மீது மக்கள் காட்டிய அதிருப்தி
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), பி. சத்யபாமா (தாராபுரம்) ஆகியோருக்கே தவெக சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால், களத்தில் இந்த முடிவு தவெகவுக்கு சாதகமாக அமையவில்லை.
"ஜெயித்த கட்சியை விட்டுவிட்டு, ஆட்சிக்கு வந்த கட்சிக்கு உடனே தாவிவிட்டார்களே... இவர்களுக்கு மக்கள் சேவையை விட பதவிதான் முக்கியமா?" என்ற கடுமையான சலிப்பும் கோபமும் தொகுதி மக்களிடையே அடிமட்டத்தில் அப்பட்டமாக எதிரொலித்தது. ஆரம்பத்தில் அமைதியாக இருந்த மக்கள், பிரச்சாரத்திற்கு வந்த வேட்பாளர்களைக் கிராமங்களுக்குள் கேள்வி கேட்கும் அளவுக்கு நிலைமை தீவிரமானது. தவெகவின் சொந்தக் கட்சித் தொண்டர்களே கட்சி தாவியவர்களுக்கு சீட் கொடுத்ததை முழுமனதாக ஏற்காமல் உள்ளடி வேலைகளில் ஈடுபட்டதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவித்தன.
விஜய்யை ஓடவிட்ட தேர்தல் களம்
வேட்பாளர்கள் மீது மக்கள் காட்டிய இந்த எதிர்ப்புதான், முதலமைச்சர் விஜய்யை வழக்கத்திற்கு மாறாகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்ய வைத்தது. பொதுத்தேர்தலின் போதே மேடைகளில் சில நிமிடங்கள் மட்டுமே பேசிவிட்டுச் சென்றவர், இந்த இரண்டு தொகுதிகளுக்காகத் தனது வழக்கமான ஞாயிற்றுக்கிழமை ஓய்வைக் கூட ரத்து செய்துவிட்டு மாரத்தான் ரோட்ஷோ நடத்தினார்.
அமைச்சரவை மொத்தத்தையும் தொகுதியிலேயே அடைத்து வைத்து, முதல்வரே கிராமம் கிராமமாக மாட்டு வண்டி ஓட்டி வாக்கு சேகரிக்க வேண்டிய அளவுக்குப் போனது, அந்தத் தொகுதிகள் தவெகவுக்கு எவ்வளவு கடுமையான சவாலாக மாறியிருந்தது என்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டியது. வேட்பாளர்களின் செல்வாக்கு படுத்துவிட்டதால், தனது சொந்த செல்வாக்கை மட்டுமே அடகு வைத்து வாக்குகளை இழுக்க விஜய் கடுமையாகப் போராட வேண்டியதாயிற்று.
அடுத்த 4 தொகுதிகளில் கட்சி தாவியவர்களுக்கு கல்தாவா?
அதிமுகவிலிருந்து தவெக பக்கம் வந்த மற்ற எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகள் உட்பட, இன்னும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட வேண்டியுள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளின் நிலைமைதான் இப்போது தவெக தலைமையின் மிகப்பெரிய கவலையாக மாறியுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், மரகதம் குமாரவேல், எஸ். ஜெயகுமார், பி. சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகிய 6 முக்கிய எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இதில் அதிமுகவைச் சேர்ந்த சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ். ஜெயகுமார், இசக்கி சுப்பையா ஆகிய 4 பேரின் தொகுதிகள் காலியாகவே உள்ளன.
மதுராந்தகம் மற்றும் தாராபுர அனுபவங்கள் விஜய்க்கு ஒரு கசப்பான பாடத்தைக் கொடுத்துள்ளன. கட்சி தாவி வந்தவர்களுக்கு மீண்டும் சீட் கொடுத்தால், மக்கள் அவர்களைத் துரோகிகளாகப் பார்க்கிறார்களே தவிர, மாற்றத்திற்கான தலைவர்களாக ஏற்க மறுக்கிறார்கள் என்பதை விஜய் நேரடியாக உணர்ந்துள்ளார்.
இதன் காரணமாக, அடுத்து வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் அதிமுகவிலிருந்து தாவியவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்க தவெக தலைமை முற்றிலும் தயங்குவதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "அதிமுகவிலிருந்து வந்தவர்களுக்கு சீட் கொடுத்து, அதற்காக முதல்வர் வீதி வீதியாக இறங்கி அவதிப்படுவதை விட, தவெகவின் தீவிர விசுவாசிகளான உள்ளூர் நிர்வாகிகளுக்கே சீட் கொடுப்பதுதான் பாதுகாப்பானது" என்ற முடிவுக்கு விஜய் வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
காத்திருக்கும் வாக்கு எண்ணிக்கை முடிவு
கட்சி மாறியவர்களுக்கு மீண்டும் சீட் கொடுத்து, அதற்காக முதலமைச்சரே ஓவர்-டைம் வேலை செய்து வியர்வை சிந்திய இந்த வியூகம் பலன் கொடுத்ததா அல்லது தொகுதி மக்களின் எதிர்ப்பு வாக்குப்பெட்டியில் பலத்த அடியாக விழுந்துள்ளதா என்பது அக்டோபர் 9 அன்று வாக்குகள் எண்ணப்படும் போது தெரிந்துவிடும்.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்; மதுராந்தகமும் தாராபுரமும் கொடுத்த கடும் நெருக்கடிக்குப் பிறகு, "கட்சி தாவியவர்களை வைத்து தனிப் பெரும்பான்மை பெறலாம்" என்ற தவெகவின் எளிதான கணக்கு இனி அடுத்தடுத்த இடைத்தேர்தல்களில் நிச்சயம் தொடராது என்றே தெரிகிறது.


Click it and Unblock the Notifications
