நாம் தமிழர் + விஜய் + அதிமுக சேர்ந்தால்.. திமுக கூட்டணியை வீழ்த்த முடியுமா? நம்பர்ஸ் சொல்வது என்ன?
சென்னை: தமிழ்நாட்டில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணி வைத்தால் அவர்களால் திமுக கூட்டணியை வீழ்த்த முடியுமா என்ற கேள்வி உள்ளது.
2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடந்தது. தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 இடங்களில் 40லும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

இதில் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் தவிர மற்ற எல்லா கட்சிகளும் கிட்டத்தட்ட இந்த தேர்தலில் டெபாசிட் இழந்துள்ளது. அதிலும் முதல்முறையாக ஒரு தேர்தலில் அதிமுக 7 இடங்களில் டெபாசிட் இழந்தது.
கூட்டணி: தமிழ்நாட்டில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணி வைத்தால் அவர்களால் திமுக கூட்டணியை வீழ்த்த முடியுமா என்ற கேள்வி உள்ளது. இதற்கு தர்க்க அடிப்படையில் பார்க்காமல் சதவிகித அடிப்படையில் என்ன நிலவரம் என்று பார்க்கலாம்.
கடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி வென்ற வாக்குகள் 46.97 சதவிகிதம் .
தனியாக திமுக வென்ற வாக்குகள் 26.93 சதவிகிதம் .
அதிமுக கூட்டணி வென்ற வாக்குகள் 23.05 சதவிகிதம் .
தனியாக அதிமுக வென்ற வாக்குகள் 20.46 சதவிகிதம் .
நாம் தமிழர் தனியாக வென்ற வாக்குகள் 8.20 சதவிகிதம்.
கூட்டணி: இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் + அதிமுக + நாம் தமிழர் கூட்டணி உருவாகலாம் என்று அதிமுக ஆதரவு ஆலோசகர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக நாம் தமிழரை கூட்டணிக்கு அழைக்கலாம். இதன் மூலம் திமுக கூட்டணிக்கு பதிலடி கொடுக்கலாம் என்று அதிமுக ஆதரவு ஆலோசகர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர்.
கணக்குப்படி பார்த்தால் கடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி வென்ற வாக்குகள் 46.97 சதவிகிதம். இது சட்டசபை தேர்தலில் குறைந்தால் கூட 43 வரை செல்கிறது என்று வைத்துக்கொள்வோம்.
எதிர் பக்கம் அதிமுக கூட்டணிக்கு 25 சதவிகிதம் வரை வரலாம். நாம் தமிழர் அவர்களோடு சேரும் பட்சத்தில் அது 33 ஆக உயரும் வாய்ப்புகள் உள்ளன.
இதில் இனி விஜய்யின் வாக்கு சதவிகிதம் தான் சந்தேகம். பொதுவாக தமிழ்நாட்டில் புதிதாக நடிகர்கள் கட்சி தொடங்கினால் வாக்கு சதவிகிதம் முதல் தேர்தலில் 5 வரை இருக்கும். முறையான கட்டமைப்பு இருந்த தேமுதிகவிற்கே 5 சதவிகிதம்தான் இருந்தது.
இப்படிப்பட்ட நிலையில் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு அதிகபட்சம் 7 கொடுத்தால் கூட.. அவர்கள் அதிமுக உடன் கூட்டணி வைக்கும் பட்சத்தில் அது 40 ஆகவே இருக்கும்.
பாமக உள்ளிட்ட பாஜக கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைந்தால் ஒழிய திமுக கூட்டணியின் நம்பரை.. நாம் தமிழர்- அதிமுக - விஜய் கூட்டணி எடுக்க வாய்ப்பு இல்லை. மிகப்பெரிய அரசியல் மாற்றம் வந்தால் ஒழிய இந்த நம்பரில் மாற்றங்கள் நடக்க வாய்ப்புகள் குறைவு என்றுதான் கூற வேண்டும்.












Click it and Unblock the Notifications