மை வைத்த பிறகு வாக்களிக்க மறுக்கலாமா? ரூ.2 சவால் வாக்கு பற்றி தெரியுமா? வாக்காளர் அறிய வேண்டிய தகவல்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஜனநாயக திருவிழாவான இந்த தேர்தலில் வாக்காளர்கள் தவறாமல் பங்கேற்பது ஒவ்வொருவரின் ஜனநாயக கடமையாகும். வாக்காளர்களுக்கான உரிமைகள் என்ன? வாக்களிப்பது தொடர்பான தேர்தல் ஆணைய விதிகள் குறித்து வாக்காளர்கள் பலருக்கும் தெரியாத சில சுவாரசிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.
குறிப்பாக வாக்குச் சாவடிக்குள் சென்ற பிறகு, நம் கைகளில் மை வைத்த பின்னர் வாக்களிக்க மறுக்க முடியுமா? ரூ.2 சவால் வாக்கு என்றால் என்ன? என்பது பற்றி இங்கு காணலாம்.

மை வைத்த பிறகு வாக்கு செலுத்த மறுக்க விதிகள் உள்ளதா?
வாக்குச்சாவாடிக்குள் சென்றதும் பூத் சிலிப், அடையாள அட்டை ஆகியவற்றை பரிசோதித்த பிறகு அங்குள்ள அலுவலர் இடது கை ஆள்காட்டி விரலில் மை வைப்பார். ஒருவர் ஒன்றிற்கு மேற்பட்ட வாக்குகளை செலுத்துவதை தடுப்பதற்காக இந்த விதி கடைபிடிக்கப்படுகிறது.
ஒரு வாக்காளர் வாக்கு செலுத்திவிட்டார் என்பதற்கான அடையாளமாக இந்த 'மை'யே உள்ளது. வாக்குச்சாவடிக்குள் சென்று மை வைத்த பிறகு வாக்களிக்க விரும்பாவிட்டால் வாக்காளர் வாக்களிக்காமல் வர முடியுமா? என்றால், ஆம்.. வர முடியும்.. என்பதே இதற்கு பதிலாகும். அதாவது வாக்களிக்க விரும்பாவிட்டால் 49-O விதியின்படி ஒரு வாக்காளர் வாக்களிக்க மறுக்கலாம்.
இதுபோன்ற சூழலில், தேர்தல் நடத்தும் அலுவலர் (PO), 17A பதிவேட்டில் 'வாக்களிக்காமல் வெளியேறினார்' (Left Without Voting) என்று குறிப்பிட்டு, வாக்காளரிடம் முறையாக கையெழுத்து பெற்று அவரை மையத்தில் உள்ள அதிகாரி அனுப்பி வைப்பார்.
2 ரூபாய் சவால் வாக்கு
வாக்குச்சாவடிக்குள் கட்சி சார்பாக முகவர்களும் அமர்ந்து இருப்பார்கள். வாக்காளரின் அடையாளத்தை முகவர்கள் ஆட்சேபம் தெரிவித்தால், ரூ.2 செலுத்தி குறிப்பிட்ட அந்த வாக்காளர் உண்மையிலேயே இவர்தானா என்று சவால் விடுக்க முடியும்.
விஏஓ மற்றும் போலீஸ் விசாரணைக்கு பிறகு முகவர் சந்தேகம் எழுப்பிய நபரின் அடையாளம் உறுதி செய்யப்பட்ட பிறகு வாக்களிக்க அனுமதிக்கப்படுவார். முகவர் செலுத்திய 2 ரூபாய் அரசு கணக்கில் சேர்க்கப்படும். முகவர் சந்தேகப்பட்டது போல வாக்காளர் போலியானவராக இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
விவிஎம் இயந்திரம் மீது சந்தேகம் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
வாக்காளர்களுக்கு தாங்கள் வாக்கு செலுத்திய வாக்குப்பதிவு இயந்திரம் மீது சந்தேகம் ஏற்பட்டால் அதாவது புகார் தெரிவித்தால் அவருக்கு ஒரு டெஸ்ட் வாக்கு செலுத்த வாய்ப்பு உண்டு. இதற்காக அந்த வாக்காளர் உறுதி மொழிப்பத்திரம் அளிக்க வேண்டும். வாக்காளர் கூறிய தகவல் உண்மை என்றால் உடனடியாக வாக்குப்பதிவு நிறுத்தப்படும். ஒருவேளை பொய்யான தகவலை கூறினால் அந்த வாக்காளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
49 ஓ: நோட்டா
வாக்காளர்கள் தங்கள் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்றால் நோட்டாவிற்கு வாக்கு செலுத்த முடியும். இந்த நோட்டாவிற்கு தனியாக பார்ம் அளிக்க வேண்டியிருந்தது. ஆனால், கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து வாக்கு இயந்திரத்திலேயே ஒரு நோட்டாவுக்கு என தனியாக ஒரு பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாளர்:
மாற்றுத்திறனாளி வாக்காளராக இருந்தால் அவர் தங்களுக்கு உதவியாக ஒருவரை அழைத்து வரலாம். 18 வயது நிரம்பியவராக அந்த நபர் இருப்பது அவசியம். உதவியாளராக வருபவர் 14 ஏ என்ற படிவத்தில் ரகசியம் காக்கப்படும் என்று உறுதி மொழி கொடுக்க வேண்டும். அதன்பிறகு அவர் உதவியாக வாக்கு செலுத்தலாம். உதவியாளராக வருபவருக்கு வலது கை ஆள் காட்டி விரலில் மை வைக்கப்படும்.
வாக்கை வேறு ஒருவர் செலுத்திவிட்டால்..
வாக்காளர்கள் ஒருவர் வாக்களிக்கும் முன்பாக அவரது வாக்கை வேறு ஒருவர் செலுத்திவிட்டார் என்றால் அந்த உண்மையான வாக்காளர் வாக்களிக்க முடியும். 49பி (49 p) டெண்டர் வாக்கு முறையில் அவர் வாக்கு செலுத்தலாம். ஆனால், இவிஎம் மெஷினில் வாக்கு செலுத்த முடியாது. அவருக்கு தனியாக வாக்குச்சீட்டு வழங்கப்படும். இந்த வாக்குகள் இயந்திர வாக்குகளுடன் எண்ணப்படாது. வெற்றி தோல்வி குறைந்த வித்தியாசத்தில் வந்தால் இந்த வாக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்












Click it and Unblock the Notifications