தைலாபுரத்துக்கு கேட்டுச்சா.. திமுகவை மட்டுமல்ல.. விசிகவையும் நெருங்கி வருகிறது பாமக: ஆளூர் ஷாநவாஸ்
விசிக ஆளூர் ஷாநவாஸ் பாமக கூட்டணி குறித்து பேட்டி தந்துள்ளார்
சென்னை: திமுகவை நோக்கி மட்டுமல்ல, விசிகவையும் நோக்கித்தான், பாமக நகர்ந்து வருகிறது என்று விசிகவின் ஆளூர் ஷாநவாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
விசிக மாநில துணை பொதுச்செயலாளரும், அக்கட்சியின் எம்எல்ஏவுமான ஆளூர் ஷா நவாஸ், நம் ஒன் இந்தியா தமிழுக்கு ஒரு பேட்டி தந்துள்ளார்.
அப்போது, திமுக கூட்டணியில் பாமக இடம்பெற நேருவதாக ஒரு பேச்சு உள்ளதே.. அப்படி கூட்டணியில் பாமக இடம்பெற்றால், விசிகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று கேள்வியை நாம் முன்வைத்தோம்.அதற்கு ஆளூர் ஷாநவாஸ் சொன்ன பதில்தான் இது:

பழசுங்க
இது ரொம்ப பழசுங்க.. 2019 தேர்தலிலும் இந்த கூட்டணி பற்றி பேசப்பட்டது.. 2021லும் பேசப்பட்டது... இப்போது மீண்டும் பேசுபொருளாகி உள்ளது.. பாமக திமுக கூட்டணிக்கு வந்தால், விசிக என்ன செய்ய போறாங்க என்று கேட்கிறார்கள்.. பாமக வந்தால் திமுக கூட்டணியில் இருக்க மாட்டோம் என்று சொல்வது விசிகதான்.. நாங்கள் கூட்டணியிலேயே நீடிப்போம் என்றால்தான், நாங்கள் என்ன செய்ய போகிறோம் என்று நீங்கள் கேள்வி எழுப்ப முடியும்.. நாங்கள்தான் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்கிறோமே.. நிலைப்பாட்டை யார் எடுக்கிறார்கள் என்றால், கூட்டணி தலைமையோ, பாமகவோ முடிவு செய்யவில்லை.. விசிக முடிவு செய்கிறது..

ஓவர் நெருக்கடி
பாமக வந்தால் நாங்கள் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்று சொல்வது விசிகதான்.. பாமக எங்காவது அப்படி சொல்லி இருக்கா? நாங்கள் உள்ளே வந்தால் விசிக வெளியே போக வேண்டும் என்று பாமகவும் சொல்லவில்லை.. பாமக கூட்டணிக்குள் வந்தால், விசிகவை வெளியே தள்ளிவிடுவோம் என்று திமுக என்றைக்காவது சொல்லி இருக்கா? இப்போதுவரை அந்த பேச்சு இல்லை.. அப்படியானால், விசிகவுக்கு, பாமகவும், திமுகவும் எந்தவிதமான நெருக்கடியையும் தரவில்லை.. கூட்டணியில் இருப்பதா, வேண்டாமா என முடிவு செய்து விசிகதான்.. முடிவில் உறுதியாக இருப்பது விசிக..

நஷ்டமாயிடுச்சா
பாமகவை பற்றியோ, அவர்கள் கூட்டணிக்கு வந்தால் என்ன ஆகும் என்று கவலைப்படும் இடத்திலோ விசிக இல்லை.. முடிவெடுக்க வேண்டிய இடத்தில் விசிக உள்ளது.. பாமக கூட்டணிக்குள் வருவதை திமுகவே திரும்பவில்லை.. இதுதான் உண்மை.. திமுக விரும்பியிருந்தால், 2019 தேர்தலிலேயே அந்த கூட்டணியை வைத்திருக்குமே? 2021-லேயே அந்த கூட்டணி வந்திருக்குமே? அப்படி பாமக கூட்டணிக்கு வராமல்போய், ஏதாவது இழப்பு என்றால் திமுக அதை பற்றி பரிசீலிக்கும்.. இதுவரை அப்படி ஏதாவது திமுகவுக்கு இழப்பு இருக்கிறதா? அப்படி எதுவும் இல்லை.. விசிக திமுக கூட்டணிக்குள் இருந்ததினால், ஏதாவது இழப்பு ஏற்பட்டுள்ளதா? அப்படி எதுவும் இல்லை..

திருமாவளவன்
கூட்டணி என்ற பேச்சுவார்த்தை எப்போதும் தேர்தல் சமயங்களில் அடிபடத்தான் செய்யும்.. அப்படியானால், பரிதாபத்துக்குரியது பாமகதான்.. திமுகவை நோக்கி மட்டுமல்ல, பாமகவினர் விசிகவையும் நோக்கியும்தான் நகர்கிறார்கள்.. இப்போதெல்லாம் விசிகவை எங்கேயாவது பாமகவினர் விமர்சிக்கிறார்களா? கிடையாது.. 10 வருஷத்துக்கு முன்னாடி எவ்வளவு அவதூறுகளை விசிக மீது பாமகவினர் பேசினார்கள்.. குற்றவாளி போல எங்களை சித்தரித்தார்களே? இன்னைக்கு அதெல்லாம் எங்கே போச்சு? எங்களது பேச்சையே பாமக எடுப்பதில்லையே..

கிட்ட கிட்ட
ஆக, திமுகவையும் பாமக விமர்சிப்பது இல்லை, விசிகவையும் விமர்சிப்பதில்லை.. கூட்டணியில் எப்படியாவது இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதால், விசிகவையும் நெருங்கி வரும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.. திமுகவில் விசிக பலமாகவே உள்ளது.. எங்கள் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்குதான் கூட்டணி பற்றி அடிக்கடி ஒரு சலசலப்பு வருகிறது.. ஆனால், எந்தவித ஒரு மாற்றும் கருத்தும் இல்லாமல் கொள்கைப்பூர்வமாக திமுகவுடன் உடன்பட்டு நிற்கிறது விசிக... அது மொழிக்கொள்கையாக இருந்தாலும்சரி, இடஒதுக்கீடு கொள்கையாக இருந்தாலும் சரி, கல்விக்கொள்கையாக இருந்தாலும் சரி, சமூக நீதிக்கொள்கையாக இருந்தாலும், எல்லாவற்றிலும் உடன்பட்டு திமுகவுடன் ஒன்றாக நிற்கிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications