திமுக ஜெயிக்காவிட்டாலும் ஸ்டாலினுக்கு லாபமா? விஜய் கூட்டணிக்குள் மாற்றத்தை ஏற்படுத்துமா 35% கணக்கு?
சென்னை: விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறவுள்ள அடுத்தகட்ட இடைத்தேர்தல்கள் தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளன. காலியாக உள்ள 5 தொகுதிகளில் திமுகவால் வெற்றி பெற முடியுமா? ஆளுங்கட்சியாக இருக்கும் தவெகவை எதிர்த்து திமுகவுக்கு இருக்கும் பலம் என்ன? அதிமுகவின் வாக்குகள் யாருக்குச் செல்லும்? இந்தக் கேள்விகளுக்கான பதில்தான் இப்போது அரசியல் களத்தில் பேசப்படுகிறது.
முதலில் திமுகவுக்கு சாதகமாக அமைந்துள்ள ஒரு விஷயத்தைப் பார்க்க வேண்டும். மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் தவெக வெற்றி பெற்றாலும், 2 தொகுதிகளிலும் திமுக 2 இடத்தைப் பிடித்தது. அதிமுக 3வது இடத்துக்கு சென்றது.

இது திமுகவுக்கு ஒரு முக்கியமான அரசியல் செய்தி. ஆட்சி மாறிய உடனேயே திமுகவின் வாக்கு வங்கி முழுமையாக காணாமல் போய்விடவில்லை. தவெக ஆளுங்கட்சியாக இருந்தும், அந்த 2 தொகுதிகளிலும் திமுகவை முந்துவது அதிமுகவுக்கு முடியவில்லை.
ஆனால், இதை வைத்து அடுத்த 5 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால், இந்த 5 தொகுதிகளின் அரசியல் சூழலும் ஒரே மாதிரியானது அல்ல.
திருச்சி கிழக்கில் திமுக பலம்? ?
இந்த 5 தொகுதிகளில் திருச்சி கிழக்கு தொகுதி முக்கியமானது. இங்கு விஜய் வெற்றி பெற்றிருந்தாலும், திமுகவுக்கு வலுவான வாக்கு வங்கியும் கட்சி அமைப்பும் இருப்பதாக மூத்த அரசியல் விமர்சகர் ரங்கராஜ் பாண்டே ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.. அதாவது திமுக முழு வீச்சில் களமிறங்கினால் ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுக்க முடியும், வாக்கு வித்தியாசத்தையும் குறைக்க முடியும் என்பது அவரது கணிப்பு.
அன்பில் மகேஷ் கைது விவகாரத்தையும் இடைத்தேர்தலுடன் நேரடியாக இணைத்து அவர் பார்க்கவில்லை. புதிய அரசு அமைந்த தொடக்கத்திலிருந்தே பள்ளித் தாளாளர்கள் சங்கத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வந்ததாகவும், அதன் தொடர்ச்சியாகவே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
ரங்கராஜ் பாண்டே சொல்லும் இந்த கருத்து மிக முக்கியமானது... ஏனென்றால், திருச்சி கிழக்கில் திமுகவுக்கு இருக்கும் கட்சி அமைப்பும் உள்ளூர் செல்வாக்கும் தேர்தலில் உதவக்கூடும். அதே நேரத்தில், அன்பில் மகேஷ் கைது விவகாரம் திமுகவின் தேர்தல் பணிகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் பார்க்க வேண்டும்.
விஜய்யிடம் 4 மாஜி அதிமுக எம்எல்ஏக்கள்
ஆனால், திருச்சி கிழக்கில் திமுகவுக்கு இருக்கும் பலத்தை வைத்து மற்ற 4 தொகுதிகளையும் கணக்குப் போட்டுவிட முடியாது. அங்கு விஜய் தரப்புக்கு இருக்கும் பலமும் கவனிக்க வேண்டியது.
கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய 4 தொகுதிகளிலும் கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர்கள் இப்போது தவெகவில் இணைந்துள்ளனர். கரூரில் எம்.ஆர். விஜயபாஸ்கர், விராலிமலையில் விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரத்தில் எஸ். ரகுபதி, பெருந்துறையில் ஜெயக்குமார் என நான்கு முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களும் விஜய் பக்கம் இருப்பது தவெகவுக்கு ஒரு பலம்.
இவர்கள் ஏற்கெனவே அந்தந்தத் தொகுதிகளில் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்றவர்கள். சிலருக்கு உள்ளூர் அளவில் தனிப்பட்ட செல்வாக்கும் இருக்கிறது. எனவே, அந்தச் செல்வாக்கு இப்போது தவெகவுக்கு எந்த அளவுக்குக் கைகொடுக்கும் என்பதும் இந்த இடைத்தேர்தலில் முக்கியமான கேள்வி.
ஆனால், இவர்கள் முன்பு பெற்ற வாக்குகள் அனைத்தும் இப்போதும் இவர்களுக்குக் கிடைத்துவிடும் என்று சொல்ல முடியாது. அதிமுகவின் பெயரிலும் சின்னத்திலும் கிடைத்த வாக்குகளையும், இவர்களுடைய தனிப்பட்ட செல்வாக்கால் கிடைத்த வாக்குகளையும் பிரித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.
ஸ்டாலினின் 35 சதவீத வாக்கு கணக்கு
"35 விழுக்காடு ஸ்டாலின் எடுத்தாலே விஜய் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஸ்டாலினை பெரிய தலைவராக மதிக்க ஆரம்பித்து விடுவார்கள்" என்று மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி நேற்றைய தினம் ஒரு சேனலுக்கு அளிதத் பேட்டியில் கூறுகிறார்.
அதாவது, இந்த 5 தொகுதிகளிலும் திமுக 35 சதவீத வாக்குகளைப் பெற்றுவிட்டால், அது சாதாரண தேர்தல் வெற்றி கணக்காக மட்டும் இருக்காது. விஜய் அணியிலுள்ள கட்சிகளே ஸ்டாலினின் அரசியல் பலத்தை மறுபடியும் கணக்கிட வேண்டிய நிலை உருவாகும் என்பதுதான் அவரது கருத்து. குறிப்பாக, 2029 மக்களவை தேர்தலுக்கான கூட்டணி முடிவுகளிலும் இந்த வாக்கு சதவீதம் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதே அவரது பார்வை.
அதிமுகவின் வாக்குகள் யாருக்கு?
அதேசமயம், இந்த 5 தொகுதிகளில் திமுகவின் வெற்றி வாய்ப்பைக் கணக்கிடும்போது அதிமுகவை ஒதுக்கிவிட முடியாது. 4 தொகுதிகளில் முன்பு அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர்கள் இப்போது தவெகவில் இருப்பதால், அந்த கட்சியின் வாக்குகள் எந்தப் பக்கம் செல்லும் என்ற கேள்வி எழுகிறது.
அதிமுக தனித்துப் போட்டியிட்டால், அதன் பழைய வாக்கு வங்கி எந்த அளவுக்கு கட்சியுடன் நிற்கிறது என்பது தெரியவரும். அந்த வாக்குகள் தவெகவுக்கு செல்கிறதா, அதிமுகவுடனேயே தொடர்கிறதா, அல்லது திமுகவுக்கு ஆதரவாக மாறுகிறதா என்பதுதான் தேர்தல் கணக்கில் முக்கியமானது.
தவெகவை பொறுத்தவரை, முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களின் தனிப்பட்ட செல்வாக்கைத் தாண்டி, அந்த தொகுதிகளில் கட்சிக்கான ஆதரவை உருவாக்க வேண்டிய சவாலும் இருக்கிறது. அதிமுகவை பொறுத்தவரை, தங்கள் கட்சியிலிருந்து சென்ற முன்னாள் எம்.எல்.ஏக்கள் போட்டியிடும் தொகுதிகளில் வாக்குகளைத் தக்கவைக்க வேண்டிய நிலைமை உள்ளது.
திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு?
திமுகவுக்கு இந்த 5 தொகுதிகளிலும் வாய்ப்பை உருவாக்கும் அம்சங்கள் இருக்கின்றன. மதுராந்தகம், தாராபுரத்தில் கிடைத்த 2வது இடம், திருச்சி கிழக்கில் இருப்பதாகக் கூறப்படும் கட்சி அமைப்பு பலம் ஆகியவை திமுகவுக்கு நம்பிக்கை அளிக்கலாம்.
ஒவ்வொரு தொகுதியிலும் திமுகவின் உள்ளூர் பலம், தவெகவின் புதிய ஆதரவு, அதிமுகவின் வாக்கு நிலை ஆகிய மூன்றுமே எப்படி செயல்படுகின்றன என்பதுதான் முடிவைத் தீர்மானிக்கும்.
இந்த 5 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறுகிறதா என்பதைவிட, எவ்வளவு வாக்குகளை பெறுகிறது என்பதும் முக்கியமான அரசியல் கணக்காக மாறியிருக்கிறது. அதுதான் ரவீந்திரன் துரைசாமி குறிப்பிட்ட 35 சதவீத வாக்கு கணிப்பின் பின்னணியும் கூட... பொறுத்திருந்து பார்ப்போம்...!!


Click it and Unblock the Notifications
