கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை தீபாவளிக்கு முன் திறக்க முடியுமா? கள நிலவரம் என்ன?
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்னைக்கு வெகுதொலைவில் இருந்தாலும் ரயில் நிலையத்துடன் அமைந்திருப்பது அடுத்த 30 வருடங்களுக்கு சிறப்பானது ஆகும். ஏனெனில் 30 கிமீ தள்ளி தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இனி ஒவ்வொரு 15 வருடத்திற்கு ஒரு முறை தள்ளிப்போட வேண்டிய அவசியமும் ஏற்படாது. கிளாம்பாக்கம் ரயில் நிலையம் வரும் தீபாவளிக்கு முன்னர் திறக்கப்படலாம் என்று அதிகாரிகள் நம்பிக்கை தருகிறார்கள். ஆனால் தீபாவளிக்கு முன்பு பணிகள் முடிந்து திறப்பு விழாவிற்கு வாய்ப்பு இல்லை என்றே கள நிலவரங்கள் சொல்கின்றன. எப்போது கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது என்பதை பார்ப்போம்.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமானதால், 2003ம் ஆண்டு கோயம்பேடு பேருந்து நிலையம் கட்டப்பட்டது. அடுத்ததாக அங்கும் நெரிசல் அதிகமானதால், சரியாக 15 வருடங்கள் கழித்து 2018ல் கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்கலாம் என அதிமுக அரசு திட்டமிட்டது. கிளாம்பாக்கம் என்பது கேளம்பாக்கம் வண்டலூர் சாலை, காஞ்சிபுரம் சாலை, மீஞ்சூர் வெளிவட்ட சாலை, தாம்பரம் சாலை, செங்கல்பட்டு சாலை என எல்லாமே சந்திக்கும் இடமாகும்.

வண்டலூர் உயிரியல் பூங்காவும் அங்குதான் உள்ளது. எனவே இங்கு புதிய பேருந்து நிலையம் அமைத்தால் நகருக்கு வெளியே நெரிசல் இல்லாமல் மக்கள் பயணிப்பார்கள் என்று தான் அரசு வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையத்தை கட்டியதுடன், கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பரில் திறந்து வைத்தது. இப்பேருந்து நிலையத்தின் அருகில், தாம்பரம் - செங்கல்பட்டு ரயில் பாதை அமைந்துள்ளது. ஆனால் ரயில் நிலையம் இல்லை. இதனால் இங்கு மின்சார, விரைவு ரயில்களை நிறுத்த முடியாத நிலை இருக்கிறது. இங்கு ரயில் நிலையம் அமைக்க பயணிகள் தரப்பில் கோரிக்கை வைத்தார்கள். ரயில் நிலையத்தை கட்டிவிட்டு திறந்து இருக்கலாம் என்று கடும் எதிர்ப்பும் எழுந்தது.
இந்த சூழலில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் வண்டலூர் - ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கப்படுவதற்கு தெற்கு ரயில்வே சென்னை ரயில்வே கோட்டம் கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபரில் டெண்டர் கோரியது. இதையடுத்து, ஒப்பந்தம் வழங்கப்பட்டு, ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் தொடங்கிகள் வேகமாக நடந்தன. அனைத்து பணிகளும் தற்போது நிறைவடைந்துவிட்டன. இந்த நடைப்பாலத்தில் பயணிகளின் வசதிக்காக, இருபுறமும் மின்தூக்கிகள் அமைக்கப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்தப் பணிகளும் தீபாவளிக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுபற்றி ரயில்வே வட்டாரங்கள் கூறும் போது, கிளாம்பாககம் ரயில் நிலைய பணிகள் நிறைவடைந்துள்ளன. அதாவது ரயில்வே தரப்பில் அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிட்டன. மாநில அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் பணி நடைபெறுகிறது புதிய ரயில் நிலையத்தையும் ஜிஎஸ்டி சாலையின் மறுபுறம் அமைந்துள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தையும் இணைக்கும் வகையில், பிரம்மாண்ட ஆகாய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில், 3 கட்டங்களாக நடந்து வருகிறது.
அதேபோல் கிளம்பாக்கம் ரயில் நிலையத்தை பராமரிப்பது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பராமரிக்கும் நிறுவனத்திடமே ஒப்படைக்க ரயில்வே விரும்புகிறது. அவர்களே அந்த ரயில் நிலையத்தையும் சேர்த்து எடுத்துக்கொண்டால் தரமான சேவை வழங்க முடியும் என்று ரயில்வே நினைக்கிறது.. இது தொடர்பாக மாநில அரசோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக ஆலோசனை நடைபெறுகிறது, கிளம்பாக்கம் ரயில் நிலையம், பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் ஜிஎஸ்டி சாலையில் ஆகாய நடைபாதை பணிகள் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது
தற்போதைய நிலையில், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தோடு இணைக்க வேண்டிய பணிகள் மீதம் உள்ளன. பராமரிப்பு பணிக்காக மாநில அரசு தொகை ஒதுக்கீடு செய்து அளித்திருக்கிறது. நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் முடிவடைந்த உடன் தீபாவளிக்கு முன்னர் அல்லது பின்னர் மக்கள் பயன்பாட்டிற்கு கிளாம்பாக்கம் ரயில் நிலையம் கொண்டு வரப்படும். கிளாம்பாக்கம் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் இடையே நடை மேம்பாலத்தை தமிழ்நாடு அரசு பராமரிக்க வேண்டும். அதற்குரிய இறுதிப் பணிகளும் நடந்து வருகிறது என ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன.
நடைமுறையில் நடந்துள்ள பணிகளை பார்க்கும் போது, தீபாவளிக்கு முன்பு மேம்பால பணிகள் முடிந்து, கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறக்கப்பட வாய்ப்பு இல்லை.. அனேகமாக பொங்கலுக்குள் தான் திறக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக களநிலவரங்கள் கூறுகின்றன. நடைமேம்பாலம் முடியாமல் கிளம்பாக்கம் ரயில் நிலையத்தை திறக்க வேண்டாம் என்பதில் ரயில்வே உறுதியாக உள்ளதாக தெரிகிறது. எனவே பணிகள் ரயில் நிலையத்தில் முடிந்த போதிலும், ஆகாய நடைமேம்பால பணிகள் முடிந்தால் மட்டுமே ரயில் நிலையம் திறக்கப்படும் என தெரிகிறது. ஆனால் அதற்கு தீபாவளி பின்னரே விடை கிடைக்கும்.


Click it and Unblock the Notifications
