ரயிலை கண்டதும் ஓடிய மகன்.. விடாமல் பிடித்த தாய்.. தினமும் ரூ.1000.. மீண்டும் தலைதூக்குதா கந்துவட்டி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தினமும் ரூ.1,000 வட்டி கட்ட வேண்டும் என்றால் ஒரு சாதாரண குடும்பத்தால் அதை எப்படி சமாளிக்க முடியும்? ஒரு நாள் பணம் கொடுக்க முடியாவிட்டால், மறுநாளும் வட்டி சேர்ந்து கொண்டே போனால் என்ன செய்வது? விருதுநகரில் நடந்த தாய், மகன் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் கந்துவட்டி கொடுமை மீண்டும் தலைதூக்குகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

விருதுநகரை சேர்ந்த பாண்டிச்செல்விக்கு ஏற்கெனவே திருமணமாகி இருந்தது. முதல் கணவரை பிரிந்து சில ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார். முதல் திருமணத்தில் பிறந்த 10 வயது பிரதீப், 15 வயது மகள் என 2 பிள்ளைகளையும் வளர்த்து வந்தார். பின்னர் முத்துக்குமாரை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார்.

Usury Harassment

தினமும் ரூ.1,000 வட்டி

இந்நிலையில், கணவரின் வெங்காய வியாபாரத்துக்கு, அந்த பகுதியில் வட்டிக்கு பணம் வாங்கியிருக்கிறார் பாண்டிச்செல்வி.. ஆனால், அந்த கடனை தர முடியவில்லை.. அத்துடன் பாண்டிச்செல்வியிடம் தினமும் ரூ.1,000 கந்துவட்டி வசூலிக்கப்பட்டதாகவும், இதனால் பாண்டிச்செல்வி மன உளைச்சலிலும் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது.

நேற்று கணவருக்கு கடைசியாக அவர் அனுப்பிய வீடியோவில், "தினமும் ரூ.1,000 கொடுக்க முடியவில்லை, கடனை அடைக்க முடியவில்லை. கடன்காரர்கள் பேசும் வார்த்தைகள் தாங்க முடியவில்லை. கடனுக்கு பயந்து பயந்து ஓடி வாழ முடியவில்லை" என்று கண்ணீருடன் பேசியிருக்கிறார்.

மகன் பிரதீப்பை பள்ளியிலிருந்து அழைத்து வந்த பாண்டிச்செல்வி, மதியம் 3.30 மணியளவில் ரயில்வே தண்டவாளத்துக்குச் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் வந்துள்ளது. ரயில் வருவதைக் கண்ட பிரதீப் அங்கிருந்து ஓட முயன்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், பாண்டிச்செல்வி மீண்டும் அவரைப் பிடித்து தண்டவாளத்துக்கு கொண்டுசென்றதாகவும், ரயில் மோதியதில் இருவரும் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஒரு குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்திய இந்தச் சம்பவம், அதிக வட்டி வசூலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது.

மீண்டும் தலைதூக்குகிறதா கந்துவட்டி கொடுமை?

கந்துவட்டி, மீட்டர் வட்டி, தண்டல் போன்ற அதிகப்படியான வட்டி முறைகளை தடுக்க தமிழகத்தில் 2003-ம் ஆண்டே சட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தின் பெயர் "தமிழ்நாடு அதீத வட்டிவசூல் தடைச் சட்டம் 2003"

இந்த சட்டத்தின்படி, ஒருவர் கொடுக்கும் கடனுக்கு அளவுக்கு அதிகமான வட்டி வசூலிக்கக் கூடாது. கடனை திருப்பி கேட்பதற்காகக் கடன் வாங்கியவரை மிரட்டுவதும், தொல்லை கொடுப்பதும் குற்றம். இதை மீறுபவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.30,000 வரை அபராதமும் விதிக்கலாம்.

கடன் தொல்லையும் மன அழுத்தமும்

ஆனால், சட்டம் இருந்தும் கந்துவட்டி புகார்கள் தொடர்ந்து வருகின்றன. வங்கிகளில் எளிதாகக் கடன் கிடைக்காத ஏழை, நடுத்தர மக்கள் அவசரத் தேவைக்காக தனியாரிடம் கடன் வாங்குகிறார்கள். சிலர் கடன் கொடுக்கும்போதே வெற்றுப் பத்திரம், காசோலை போன்றவற்றை வாங்கிக்கொள்கிறார்கள் என்று புகார்கள் உள்ளன.

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டாலோ, வருமானம் குறைந்தாலோ தினமும் வட்டி கட்ட முடியாமல் போகிறது. அப்போது பழைய கடனை அடைக்க இன்னொரு கடன் வாங்கும் நிலை உருவாகிறது. ஒரு கட்டத்தில் அசல் தொகையைவிட வட்டியே அதிகமாகிவிடுகிறது. இதனால் குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் போகிறது. கடன் கொடுத்தவர்கள் மிரட்டினால், அவமானத்துக்கு பயந்து சிலர் போலீசில் புகார் கொடுக்கவும் தயங்குகிறார்கள்.

சட்டம் இருந்தும் புகார் தர தயக்கம்

கடன் வாங்கியவர்கள் மிரட்டலுக்கு பயந்து அமைதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. கந்துவட்டி வசூல், மிரட்டல், தொல்லை போன்றவை இருந்தால் அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷ்னில் புகார் கொடுக்கலாம். கடன் வாங்கியதற்கான ஆவணங்கள், பணம் கொடுத்ததற்கான ரசீதுகள், வட்டி செலுத்திய விவரங்கள், மிரட்டல் அழைப்புகள் போன்ற ஆதாரங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

ஆனால், தமிழகத்தில் 2025-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிதி நிறுவனங்கள் தொடர்பான புதிய சட்டமும் முக்கியமானது. இந்தச் சட்டத்தின்படி, பணம் கடன் கொடுக்கும் நிறுவனங்கள் பதிவு செய்திருக்க வேண்டும். கடன் வசூலிப்பதாக கூறி கடன் வாங்கியவரையோ அவரது குடும்பத்தினரையோ மிரட்டுவது, அவமானப்படுத்துவது, தொடர்ந்து பின்தொடர்வது போன்ற செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கலாம்.

புகார் கொடுக்கலாம்

எனவே, கடன் தொல்லை தொடர்பாக உள்ளூர் போலீசிலோ, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பதிவு அதிகாரியிடமும் புகார் அளிக்கலாம். சிவில் பிரச்சினைகளுக்கு நியமிக்கப்பட்ட குறைதீர்ப்பு அதிகாரியையும் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக அணுகலாம்.

விருதுநகர் சம்பவத்தில் கடன் தொல்லை குறித்த தகவல்கள் விசாரணையில் உள்ளன. ஆனால், சட்டங்கள் இருந்தும் அதிக வட்டி வசூல் புகார்கள் ஏன் தொடர்கின்றன? கடன் வாங்கியவர்களைப் பாதுகாக்கும் வகையில் சட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகின்றனவா? கடன் கொடுப்பவர்களின் அத்துமீறல்களை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? இதற்கான பதிலை அரசு உறுதி செய்ய வேண்டிய நேரம் இது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+