அஸ்திவாரமே போடலை..பால் காய்ச்ச முடியுமா? விஜய் செய்த மிகப் பெரிய தவறு.. தேர்தலில் காத்திருக்கும் அடி
சென்னை: நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் 2026 தேர்தலில் தங்கள் கட்சி மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார். ஆனால் உண்மையில் கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பான மாநகர், நகர், ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் இதுவரை நியமனம் செய்யப்படவில்லை. மாணவரணி, மகளிரணி என மாவட்ட நிர்வாகிகளை அறிவித்து வரும் விஜய் கட்சியின் அடிப்படையான ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளை நிரப்பாமல் தேர்தலில் எதுவுமே செய்ய முடியாது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
வரவிருக்கும் 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல், கடந்த தேர்தல்களை விட மிகக் கடுமையான அரசியல் போட்டியாக அமைந்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. இந்த முறை கூட்டணியே வெற்றியை தீர்மானிக்கப் போகிறது என்பதில் அரசியல் வல்லுநர்கள் ஒருமித்த கருத்தில் உள்ளனர்.
ஆனால், ஆளும் திமுக ஏற்கனவே மிகப்பெரிய கூட்டணியை கட்டமைத்திருக்கிறது. ஆட்சி அதிகாரம், வலுவான கட்டமைப்பு, பூத் அளவிலான தொண்டர்கள் என திமுக 2026 தேர்தலைப் பொருத்தவரையில் மற்ற கட்சிகளை விட பெரும் முன்னிலை பெற்றிருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

2026 சட்டமன்ற தேர்தல்
அதே நேரத்தில், முயற்சிகளில் எப்போதும் பின்வாங்காத அதிமுகவும் தன்னுடைய அடிப்படை கட்டமைப்பை உறுதி செய்து வருகிறது. குறிப்பாக பாஜகவுடன் கூட்டணி உடன்படிக்கையை உறுதி செய்துள்ள அதிமுக, 2026-ல் திமுகக்கு வலுவான சவால் விடுக்கும் நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த இரு பெரிய கட்சிகளுக்கிடையில், இந்த முறை மேலும் இரண்டு அரசியல் கட்சிகள் களமிறங்குவதால் நான்கு முனைப் போட்டியாகத் தேர்தல் அமையப் போகிறது. அதில் ஒன்று நாம் தமிழர் கட்சி. சீமான் இந்தத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து இருக்கிறார்.
விஜய் அரசியல் திட்டம்
மற்றொரு பக்கம் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்து வருகிறது. 'நான் தான் முதலமைச்சர் வேட்பாளர்' என வெளிப்படையாக அறிவித்து தன்னுடைய தலைமையில் கூட்டணி அமைப்பதற்கும் விஜய் முயற்சிகளைத் தொடங்கி இருக்கிறார். எனினும், அவர் தனித்து போட்டியிடுவாரா அல்லது சில கட்சிகளுடன் கை கோர்ப்பாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை. இந்நிலையில் தனது கட்சியை தேர்தல் களத்துக்கு தயார் செய்ய விஜய் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மாவட்ட செயலாளர்கள் நியமனத்தை முடித்துள்ள அவர், இன்னும் நகர்ப்புறம் மற்றும் ஊரக கட்டமைப்புகளை முழுமையாக நிரப்பவில்லை.
தவெக கட்டமைப்பு பிரச்சனை
மாநகர், நகர், ஒன்றியம், ஊராட்சி, கிளை நிர்வாகிகள் நியமனம் நடைபெறாததால் களத்தில் உழைத்த ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே மாவட்ட செயலாளர் நியமனத்திலேயே விமர்சனங்கள் எழுந்தன. நீண்ட காலம் ரசிகர் மன்றத்தில் உழைத்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்து பலர் விலகியிருந்தனர். இந்த சூழலில், தற்போது மீண்டும் தவெகவில், உலாவும் சில தகவல்கள் கட்சிக்குள் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பூத் ஏஜென்ட்களை நியமித்ததாக மேலிடத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தவெக பூத் ஏஜெண்ட்
ஆனால் உண்மையில் பட்டியல் ஆராய்ந்த போது அதிர்ச்சி தகவல்கள் வெளியானதாக கூறப்படுகிறது. கிராமப்புறப் பகுதிகளுக்கான பூத் ஏஜெண்ட்களாக, நகர்ப்புற இளைஞர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், பல இடங்களில் நகர், மாநகர், ஒன்றிய அளவிலான நிர்வாகிகளே இன்னும் நியமிக்கப்படாதது தெரியவந்துள்ளது. இதனால் கோபமடைந்த விஜய் மாநில நிர்வாகிகளிடம் கடுமையாக நடந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக அதிமுக
திமுக அதிமுகவுக்கு மாற்று என பேசி வரும் விஜய் அடிப்படை கட்டமைப்பிலேயே கோட்டை விட்டு விட்டு நிலையில் தேர்தலை எப்படி சந்திக்கப் போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உதாரணத்திற்கு ஒரு சட்டமன்ற தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படுகிறார் என்றால், அப்பகுதியில் மாநகர, நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள் தான் முதலில் தேர்தல் பணிகளை துவக்குவார்கள். மேலும் துணைச் செயலாளர்கள், கிளைக் கழக நிர்வாகிகள் தான் அந்த வேட்பாளரை மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள்.
அடிப்படை நிர்வாகிகள் இல்லை
விஜய் தரப்பில் 60 ஆயிரம் பூத் ஏஜென்ட்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டாலும் பொதுமக்களிடம் வாக்கு கேட்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. சின்னம் வரைவது தொடங்கி, போஸ்டர் ஒட்டுவது வரை வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள் தான் அந்த பணிகளை மேற்கொள்வார்கள். தற்போது விஜய் மாவட்ட அளவில் மகளிரணி, தொண்டர் அணி, இளைஞரணி நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். ஆனால் இன்னும் அடுத்தகட்ட நிர்வாகிகளை நியமனம் செய்யவில்லை. இது தேர்தல் நேரத்தில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வரும் பின்னடைவாக இருக்கும் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications