வீட்டுக்கொரு ஓட்டு..ஒட்டுமொத்தமாய் 2.5 கோடி! கிச்சுகிச்சு மூட்டும் TVK! ஒருவேளை இருந்தால் என்னாகும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய்க்கு 2.5 கோடி வாக்குகள் இருப்பதாக கூறி அதிர வைத்திருக்கிறார் தமிழக வெற்றி கழகத்தின் ஆதவ் அர்ஜுனா. மேலும், விஜய்க்கு 40 சதவீத வாக்குகள் இருப்பதாக கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். உண்மையை சொல்லப்போனால் தமிழகத்தில் தனித்து இரண்டு கோடி வாக்குகள் எந்த கட்சிக்குமே இல்லை என்பது தான் கடந்த கால வரலாறு. அதிமுக - திமுகவுக்கு கூட கடந்த 2016, 2021,2014 தேர்தல்களில் இவ்வளவு வாக்குகள் இல்லை என்பதுதான் உண்மை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் குறித்த அரசியல் விமர்சனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதற்கெல்லாம் காரணம் அந்த கட்சி தலைவர்கள் நாளுக்குநாள் சொல்லி வரும் கணிப்புகளும், ஓட்டு சதவீதம் குறித்த பேச்சுகளும் தான்.

சமீபத்தில் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய விஜய், கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் தங்கள் கட்சி தனித்து நின்றே வெற்றி பெறும் என பேசினார். திமுக, அதிமுக போன்ற பல தசாப்த அனுபவம் கொண்ட கட்சிகளே கூட்டணி அரசியலில் சிக்கிக் கொண்டிருக்கும் சூழலில், தனித்து ஆட்சி அமைப்போம் என்ற விஜய்யின் பேச்சு பலருக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Vijay TVK Tamil Nadu Assembly Election 2026

விஜய் தவெக வாக்குகள்

இந்த சந்தேகத்தை மேலும் தீவிரப்படுத்தியது தவெக தலைவர்கள் வெளியிட்ட வாக்கு கணிப்புகள். கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தமிழகத்தில் உள்ள 2.25 கோடி வீடுகள் ஒவ்வொன்றிலும் குறைந்தது ஒரு வாக்கு விஜய்க்கு இருப்பதாக கூறினார். இதன் மூலம் கடந்த தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற மொத்த வாக்குகளையும் தாங்கள் ஏற்கனவே கடந்துவிட்டதாக கூறி அதிர வைத்தார். இதே கூட்டத்தில் பேசிய நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டுக்கு வந்து தவெக-க்கு வாக்களிக்கத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.

2.5 கோடி வாக்குகள்

ஆனால், இந்த கணிப்புகளை தமிழக தேர்தல் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஆராய்ந்தால், பல இடங்களில் முரண்பாடுகள் தென்படுகின்றன. தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் சுமார் 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இந்த நிலையில், தவெக தலைவர்கள் ஒரே மேடையில் 23 சதவீதம், பின்னர் 26 சதவீதம், அதன் பின் 34 சதவீதம் என மாறி மாறி வாக்கு சதவீதங்களை கூறியது, கட்சிக்குள் கூட தெளிவான கணக்கு இல்லையா என்ற கேள்வியை எழுப்புகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல்

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலை எடுத்துக்கொண்டால், திமுக தனித்து பெற்ற வாக்குகள் சுமார் 1.74 கோடி. அதிமுக பெற்றது சுமார் 1.53 கோடி. திமுக கூட்டணி மொத்தமாக பெற்ற வாக்குகளே 2.09 கோடியை மட்டுமே எட்டின. அதேபோல், 2024 மக்களவைத் தேர்தலிலும் எந்தக் கட்சியும் தனித்து 2 கோடி வாக்குகளை கடந்ததாக உறுதியான தரவுகள் இல்லை. அதிமுக, பாஜக, நாதக போன்ற கட்சிகள் பெற்ற வாக்குகளை சேர்த்துப் பார்த்தால், தமிழக அரசியல் வாக்குகள் பல தளங்களில் பிரிந்து கிடப்பது தெளிவாகிறது.

தவெக தனித்து ஆட்சி

இந்த நிலையில், தவெக தனித்து 2.25 கோடி வாக்குகளை பெற்றுவிட்டதாக அல்லது பெறக்கூடிய நிலையில் இருப்பதாக கூறுவது, தற்போதைய அரசியல் கள நிலவரத்துடன் முழுமையாக பொருந்தவில்லை என்றே அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சமூக ஊடகங்களில் விஜய்க்கு இருக்கும் ஆதரவு, ரசிகர் அடிப்படையிலான ஈர்ப்பு, இளைஞர்களிடையே உருவாகியுள்ள எதிர்பார்ப்பு ஆகியவை உண்மையானவைதான். ஆனால், அந்த ஆதரவு தேர்தல் நாளில் முழுமையாக வாக்குகளாக மாறுமா என்பது இன்னும் உறுதியற்றது.

தமிழக அரசியல்

கிராமப்புற அரசியல், சாதி அரசியல், கூட்டணி கணக்குகள் போன்றவை தமிழக தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த அடிப்படை காரணிகளை தவெக எவ்வளவு திறம்பட கையாளுகிறது என்பதே, அதன் உண்மையான வாக்கு வலிமையை தீர்மானிக்கும். ஆகவே, 2.25 கோடி வாக்குகள் என்ற கணிப்பு தற்போது ஒரு அரசியல் இலக்காகவோ அல்லது உற்சாகத்தை தூண்டும் பேச்சாகவோ பார்க்கப்படலாம். ஆனால், எதிர்காலத்தில் அந்த கணிப்பு உண்மையாகி, தவெக 2 கோடிக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றால், அது தமிழக அரசியலில் முற்றிலும் புதிய திருப்பமாக அமைவது மட்டும் உறுதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+