போயஸ் கார்டனில் அந்த சத்தம்.. எடப்பாடிக்கு எதிராக இறங்கும் பிரபலம்.. அவங்களும் வர்றாங்களே.. பரபரப்பு
சென்னை: லோக்சபா தேர்தலில், அதிமுக படுதோல்வி அடைந்த நிலையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வியூகம் ஒன்று மீண்டும் கிளம்பியிருக்கிறது.
எப்போதுமே அதிரடி அரசியலுக்கு பெயர் போனவர் விகே சசிகலா.. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் 30 வருடம் லாபி செய்தவருக்கு, அதிமுகவை எப்போதோ கட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும்.. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் எப்போதோ வழிக்கு கொண்டுவந்திருக்க முடியும்..

ஆனாலும், ஏதோ ஒரு காரணத்துக்காக மென்மை போக்கை முன்னெடுத்து வருவதாக தெரிகிறது.. எனினும், சசிகலாவின் தற்போதைய அரசியல் எந்தவிதத்திலுமே அவருக்கு கைகொடுக்கவில்லை என்றேதான் சொல்ல வேண்டும். சிறையில் இருந்து வெளியே வந்து இத்தனை வருட காலமாகியும், அதிமுகவை எடப்பாடியிடமிருந்து அவரால் மீட்க முடியவில்லை.
வியூகங்கள்: அனைத்து வியூகங்களும், ஆன்மீக சுற்றுப்பயணங்களும் அவருக்கு தோல்வியடைந்த நிலையில், லோக்சபா தேர்தலே நடந்து முடிந்துவிட்டது.. இதைப்பற்றி கேட்டால், 2026- தேர்தல் தேதிதான் நம்முடைய இலக்கு என்று தன்னுடைய ஆதரவாளர்களிடம் சொல்லி வருகிறாராம் விகே சசிகலா. இதையடுத்துதான், "கழக தொண்டர்கள் அனைவருக்கும் என சொல்லி அதிமுகவினருக்கு ஒரு விண்ணப்ப படிவத்தை கடந்த மாதம் அனுப்பியிருந்தார் சசிகலா. ஆனால், அது உறுப்பினர் சேர்க்கை போலிருப்பதாக சொலகிறார்கள்.
அதிமுகவில் எந்த பிடிப்பும் இல்லாத நிலையில், தினகரனும் தன்னை ஒதுக்கிவிட்ட நிலையில், பாஜகவும் தன்னை புறக்கணித்து விட்ட நிலையில், இப்படியொரு புதுமுயற்சியை சசிகலா கையில் எடுக்க போவதாக கூறுகிறார்கள்.
டிடிவி தினகரன்: "எனது தலைமையில் அ.தி.மு.க. ஒன்றுபட்டு செயல்படும்" என்று சொல்லிவருகிறாரே தவிர அது எப்போது என்று சொல்லவில்லை.. ஒருவேளை அதிமுகவை மீட்க சசிகலா ரகசிய திட்டம் வைத்துள்ளாரோ? என்ற சந்தேகம் அனைவருக்குமே எழுந்து வருகிறதாம். லோக்சபா தேர்தல் முடிந்தும்கூட, டிடிவி தினகரன், ஓபிஎஸ் என யாருடனும் சேராமல் தனியாகவே அறிக்கை வாயிலாக அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
அதிமுக தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் தனித்தனியாக விண்ணப்ப படிவம் போன்ற கடிதத்தையும் அவர் அனுப்பி வைத்திருந்த நிலையில், இதனை உறுதிப்படுத்தும் வகையில் சசிகலா நாளை மறுநாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை தொண்டர்களை சந்தித்து பேச உள்ளார்.. இதுதான் அதிமுக, அமமுகவுக்குள் பரபரப்பை தந்து வருகிறத..
பரபரப்பு: சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து சசிகலாவின் ஆதரவாளர்கள் சென்னை வர உள்ளனர்.
இந்த சந்திப்பு எத்தகைய மாற்றத்தை தரப்போகிறது என்று தெரியவில்லை.. சசிகலா, எடப்பாடி பழனிசாமியை மட்டும் எதிர்க்கிறாரா? அல்லது டிடிவி தினகரன், ஓபிஎஸ்ஸையும் சேர்த்து எதிர்க்க போகிறாரா? அல்லது ஒன்றிணைந்து செயல்பட போகிறாரா? அல்லது தனி அணியை உருவாக்குவாரா? என்று தெரியவில்லை..
சத்தம்: ஆனால், கடந்த ஜனவரி 24ம் தேதி முதல் இந்த வீடு கட்டி இப்போதுதான் முதல்முறையாக அரசியல் சந்திப்பு நடக்க போகிறது.. இதுநாள் வரை இல்லாத அளவுக்கு போயஸ் கார்டன் வீட்டில் புதிதாக "அரசியல் பேச்சு" அடிபட துவங்கியிருக்கிறதாம்.. ஆனால், எவ்வளவுதான் முட்டிமோதினாலும், அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமியையும் தன்பக்கம் சசிகலாவால் ஒருபோதும் 'சாய்க்க' முடியாது என்றே அதிமுக நிர்வாகிகள் சொல்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்..












Click it and Unblock the Notifications