ஹார்முஸில் கால் வைத்தால் பணம் தரணும்.. அதிபர் டிரம்ப் தடாலடி! மீண்டும் உச்சக்கட்ட பதற்றம்

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: நீண்ட காலத்திற்குப் பிறகு இப்போது தான் மத்திய கிழக்கில் அமைதி திரும்பியுள்ளது. ஆனால், அதற்குள் மீண்டும் பதற்றம் வெடிக்கும் ஒரு சூழல் உருவாகியுள்ளது. ஒரு பக்கம் ஹார்முஸை மூடப்போவதாக ஈரான் மிரட்டியுள்ள நிலையில், மற்றொரு பக்கம் டிரம்பும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது அடுத்த 60 நாட்களில் நிரந்தர அமைதி ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்றால் அமெரிக்காவே அந்தப் பகுதியில் சொந்த சுங்கக் கட்டணத்தை விதிக்கும் என்று கூறியுள்ளார்.

உலக பொருளாதாரத்தில் மிக முக்கியமான கடல் வழிப்பாதையாக உள்ளது ஹார்முஸ் ஜலசந்தி. சர்வதேச அளவில் அதிகளவில் கச்சா எண்ணெய் இந்தப் பாதை வழியாகத்தான் கப்பல்களில் கொண்டு செல்லப்படுகிறது. தற்போது இந்தப் பகுதியை மையமாக வைத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trump

அமெரிக்கா சுங்க கட்டணம்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஒரு தற்காலிக அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்படி, அடுத்த 60 நாட்களுக்கு ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு எந்தவிதமான சுங்கக் கட்டணமும் வசூலிக்கப்படாது. ஆனால், இந்த 60 நாட்களுக்குள் ஒரு நிரந்தர அமைதி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், அமெரிக்காவே அந்தப் பகுதியில் தனது சொந்த சுங்கக் கட்டணத்தை விதிக்கும் என்று அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

மேற்கு ஆசிய நாடுகளில் அமைதியைப் பேணவும், கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அமெரிக்க ராணுவம் ஒரு பாதுகாவலன் போலச் செயல்படுவதாக டிரம்ப் கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில், "நாங்கள் இவ்வளவு காலம் பாதுகாப்பு வழங்கியதற்கான செலவுகளையும், இனி வழங்கப்போகும் பாதுகாப்பிற்கான செலவுகளையும் ஈடுகட்ட இந்தக் கட்டணம் அவசியம்.. ஈரானை எந்தக் கட்டணமும் வசூலிக்க அனுமதிக்க முடியாது. வசூலித்தால் அது அமெரிக்காவிற்குத்தான் சேர வேண்டும்" என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

ஈரான் மறுப்பு

மறுபுறம், ஈரான் இந்த ஒப்பந்தத்தை ஏற்க மறுப்பதாகத் தெரிகிறது. லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைக் காரணம் காட்டி, ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் ராணுவம் மிரட்டல் விடுத்துள்ளது. அமெரிக்கா தனது வாக்குறுதிகளை மீறிவிட்டதாக ஈரான் குற்றம் சாட்டுகிறது. இருப்பினும், அமெரிக்காவின் மத்திய கட்டளைப் பிரிவு, கப்பல் போக்குவரத்து தடையின்றி நடப்பதாகவும், அமெரிக்கக் கடற்படை அதைக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தை

இந்த இக்கட்டான சூழலைச் சரிசெய்ய சுவிட்சர்லாந்தில் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளன. பாகிஸ்தான் மற்றும் கத்தார் நாடுகள் இந்தப் பேச்சுவார்த்தையை முன்னின்று நடத்துகின்றன. அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் ஆகியோர் இதில் பங்கேற்கின்றனர். ஒரு முழுமையான அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதும், பிராந்திய மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதுமே இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமாகும்.

சர்வதேச சந்தை

இந்த மோதல் போக்கு உலக சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையே ஒப்பந்தம் எட்டப்பட்ட செய்தியால், கச்சா எண்ணெய் விலை சுமார் 5% வரை சரிந்தது. இது நுகர்வோருக்குச் சாதகமான விஷயம். அதேநேரம் சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள், கடல் போக்குவரத்தில் புதிய கட்டணங்கள் விதிக்கப்படுவதை விரும்பவில்லை. இது சுதந்திரமான வணிகத்தை பாதிக்கும் என்று அவை கருதுகின்றன.

பதற்றம்

டிரம்ப்பின் இந்த சுங்கக் கட்டண மிரட்டல் ஒருபுறம், ஈரானின் ஹார்முஸ் மூடல் எச்சரிக்கை மறுபுறம் என ஹார்முஸ் தற்போது மீண்டும் போர்க்களமாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. அடுத்த 60 நாட்களில் சுவிட்சர்லாந்தில் நடக்கும் பேச்சுவார்த்தையில் ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்குமா அல்லது உலக பொருளாதாரம் மீண்டும் ஒரு நெருக்கடியைச் சந்திக்குமா என்பதையே உலக நாடுகள் உற்றுக் கவனித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+