பாஜகவுடன் கூட்டணி முறிவு: அதிமுகவின் இறுதி முடிவாக பார்க்கவில்லை.. திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: பாஜகவுடன் தற்போதைக்கு கூட்டணி இல்லை என்று ஜெயக்குமார் கூறியிருக்கும் நிலையில், இதனை அதிமுகவின் இறுதி முடிவாக பார்க்கவில்லை என்றும், ஜெயக்குமார் பேசியிருக்கலாமே தவிர எடப்பாடி பழனிசாமி பேசுவாரா என்று எனக்கு தெரியவில்லை என திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதற்கு அதிமுக தலைவர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜகவுடன் தற்போதைக்கு கூட்டணி இல்லை என்றும் தேர்தல் காலத்தில் தான் முடிவு செய்யப்படும் என்று அதிரடியாக அறிவித்தார்.

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக கூறியிருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த நிலையில், அதிமுக பாஜக கூட்டணி முறிவு குறித்து திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது:- தேர்தல் களத்தில் பாஜக என்பது புதிய அறிமுகமே தவிர செல்வாக்கு மிக்க கட்சி இல்லை. அதிமுகவின் தோளில் ஏறி சவாரி செய்து 4 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறார்களே தவிர மகக்ள் ஆதரவு பாஜகவிற்கு அறவே கிடையாது.
இங்கே உள்ள தலைவர்களை தவறாக பேசுவது, அவதூறாக பேசுவது என்றால் யார் ஏற்றுக்கொள்ள முடியும். அதைத்தான் பாஜக செய்து வருகிறது. அதற்கான பலனை பாஜக அனுபவிக்கும். அதிமுக அதிகாரப்பூர்வமாக இதை செய்து இருக்கிறதா என்று தெரியவில்லை. ஜெயக்குமாருடைய பேச்சு இருக்கிறதே தவிர எடப்பாடி பழனிசாமி என்ன சொல்ல போகிறார் என்று பொருத்து இருந்து பார்க்க வேண்டும்.
முத்துராமலிங்க தேவர் பெரிய பக்திமான். திமுக ஒரு பக்தி இயக்கம் இல்லை.சில நேரங்களில் முரண்பாடான கருத்தை சொல்லியிருக்கலாம். ஆனால் ஒன்றை இவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவருடைய பார்வார்டு பிளாக் கட்சி 1962, 67,71 ஆகிய தேர்தல்களில் திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்ட கட்சி. இப்போது வரை தொடர்ந்து அவர்கள் கூட்டணி வைத்து இருக்கிறார்கள். எனவே திமுகவோடு இல்லை.
திமுகவுக்கு முரன்பட்ட கட்சியாக எந்த காலத்திலும் இல்லை. அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்ட மக்கள் கோவில் நுழைவு போராட்டத்தில் முத்துராமலிங்க தேவர் தீவிரமாக ஆர்வம் காட்டியவர். பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கான போராட்டத்தை அவர் தொடர்ந்து செய்து வந்து இருக்கிறார். அவர்கள் நலனுக்காக பாடுபட்டு இருக்கிறார். அண்ணாவை பொறுத்தவரை திமுகவை உருவாக்கி வளர்த்தவர்.
அதிமுக என்பது அண்ணாவின் மறைவுக்கு பிறகு இவர்கள் அண்ணாவின் பெயரை வைத்துக் கொண்டு எம்.ஜி.ஆர் ஒரு கட்சியை ஆரம்பித்தார். பெயர் தான் அண்ணாவே தவிர அண்ணாவிற்கும் அந்த கட்சிக்கும் தொடர்பு இல்லை. அண்ணாவின் எல்லா கொள்கைகளையும் பாஜக எதிர்க்கிறது. எல்லாவற்றையும் ஆதரித்து விட்டு அண்ணாவை பற்றி சொல்லும் போது வேறு வழியில்லாமல் மக்களிடம் அச்சம் கொண்டு, மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால் ஜெயக்குமார் இந்த அறிக்கையை இந்த தகவலை சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
பொறுத்து இருந்து பார்க்க வேண்டும். அண்ணா மிகப்பெரிய தலைவர். திராவிட இயக்கத்தில் பெரியாரின் சீடராக இருந்த தலைவர். 1967 ஆட்சி அமைந்தவுடன் இந்த ஆட்சியே பெரியாருக்கு அர்ப்பணம் என்று சொன்னவர். வரக்கூடிய தேர்தலில் மும்முனை போட்டி இருக்குமா என்று கேட்கிறீர்கள். பாஜக மூன்றாவது அணியில் இருந்து போட்டி போடக்கூடிய அளவுக்கு பெரிய கட்சி இல்லை.
பாஜகவிற்கு பிரதமர் வேட்பாளர் இருப்பதால் அவர்கள் மக்களுக்கு செய்த துரோகங்கள் எல்லாம் மக்கள் மறந்து விடுவார்களா? ஏழைகளில் வயிற்றில் அடிப்பது போல பெட்ரோல், டீசல் விலையை பல மடங்கு ஏற்றிவிட்டு பணக்காரரக்ளுக்கு தள்ளுபடி செய்கிறார்கள். பாஜக பணக்காரர்களுக்கான கட்சியாக உள்ளது. இதைத்தான் முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று குறிப்பிட்டு பேசினார்.
அதிமுகவின் இறுதி முடிவாக இதை பார்க்க முடியவில்லை. பாஜகவிற்கு அச்சப்பட்டு அடிமைப்பட்டு இருக்கிற கட்சி அதிமுக. ஜெயக்குமார் பேசியிருக்கலாமே தவிர எடப்பாடி பேசுவாரா என்று எனக்கு தெரியவில்லை. பார்க்கவ் வேண்டும். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகும் என்ற நம்பிக்கை இல்லை. காரணம் விலகினால் பாதிபேருக்கு மேல் சிறைக்கு செல்ல வேண்டிய சூழல் உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications