சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா?
சென்னை: உலகளாவிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான கேப்ஜெமினி, சென்னையின் சிறுசேரி SIPCOT பகுதியில் தனது அலுவலக வளாகத்தை மேலும் விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. இந்த விரிவாக்கத்துக்காக ரூ.1,000 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இத்திட்டம் மூலம் 5,500 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏஐ மூலம் உலகம் முழுவதும் பணிநீக்கம் செய்யப்படும் வேளையில், கேப்ஜெமினி தனது அலுவலகத்தை விரிவாக்கம் செய்வது மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டு டெக் ஊழியர்களை அதிகளவில் நம்பி இந்த மாபெரும் விரிவாக்கத்தை செய்து வருகிறது.

சிறுசேரி SIPCOT
சென்னையின் முக்கிய ஐடி பகுதிகளில் ஒன்றான சிறுசேரி SIPCOT பகுதியில் கேப்ஜெமினி ஏற்கனவே செயல்பட்டு வரும் நிலையில், இப்போது கூடுதல் 10 லட்சம் சதுர அடி (1 Million Sq.ft) அலுவலக இடத்தை உருவாக்கும் திட்டம் துவங்கப்பட்டு தற்போது கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த விரிவாக்கம் நிறுவனத்தின் தற்போதைய செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் புதிய விரிவாக்கத் திட்டம் மூலம் 5,500 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும். தமிழ்நாட்டில் ஐடி துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்களுக்கு இது பெரும் நம்பிக்கையை அளிக்கும். குறிப்பாக, சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வரும் இளம் தொழில் வல்லுநர்களுக்கு இந்த விரிவாக்கம் முக்கிய வாய்ப்பாக அமையும்.
சென்னை
கேப்ஜெமினி, சென்னையை தனது முக்கிய மையங்களில் ஒன்றாக வளர்த்து வருகிறது. தற்போது சென்னையில் மட்டும் 14,600க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டுள்ள இந்நிறுவனம், இந்தியாவில் உள்ள தனது மொத்த ஊழியர்களில் சுமார் 6 சதவீதத்தை சென்னையில் வைத்துள்ளது. குறிப்பாக உலகளாவிய நிதி சேவைத் துறைக்கு (Financial Services) சென்னை ஒரு முக்கிய மையமாக திகழ்கிறது.
சென்னையில் கேப்ஜெமினியின் 4 கேம்பஸ்கள்
கேப்ஜெமினி சென்னையில் நான்கு முக்கிய அலுவலக கேம்பஸ்-ஐ இயக்கி வருகிறது. இவற்றில் மிகப் பெரியது செங்கல்பட்டில் உள்ள மஹிந்திரா வேர்ல்ட் சிட்டியில் (MIPL) அமைந்துள்ள 39 ஏக்கர் பரப்பளவிலான சொந்த கேம்பஸ் ஆகும்.
இரண்டாவது பெரிய வளாகம் சிறுசேரியில் உள்ள SIPCOT ஐடி பார்க் ஆகும். பழைய மஹாபலிபுரம் சாலையில் (OMR) அமைந்துள்ளது
மூன்றாவது, கரப்பாக்கத்தில் உள்ள Prestige Cyber Towers (PCT) ஆகும். ஐடி காரிடாரில் அமைந்துள்ள நீண்ட கால குத்தகை ஒப்பந்தத்தில் இயங்கும் ஒரு அலுவலகம்.
நான்காவது, துரைப்பாக்கத்தில் உள்ள ASV Chandilya Towers ஆகும்.
சிறுசேரி அலுவலக கட்டுமானம் முடிந்தால் 4 அலுவலகத்தை ஒன்றிணைக்கவும் வாய்ப்புள்ளது. இதை பல நிறுவனங்கள் சென்னையில் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை - கேப்ஜெமினிக்கு முக்கிய ஹப்
கேப்ஜெமினியின் இந்திய ஊழியர் எண்ணிக்கை சுமார் 2.3 லட்சம். இதில் சென்னை 14,600க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. உலக அளவில் கேப்ஜெமினியின் மொத்த ஊழியர் எண்ணிக்கை 4.2 லட்சம். இதில் இந்திய ஊழியர்கள் சுமார் 55 சதவீதம் ஆகும்.
பெங்களூரு, மும்பை, புனே போன்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது சென்னை சற்று சிறிய டெலிவரி மையமாக இருந்தாலும், நிதி சேவைத் துறைக்கான முக்கிய மையமாக வளர்ந்து வருகிறது.












Click it and Unblock the Notifications