கிளைமாக்ஸை நெருங்கும் ராமஜெயம் கொலை வழக்கு.. புழல் சிறையில் முக்கிய ரவுடியிடம் வருண்குமார் விசாரணை!
சென்னை: அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக புழல் சிறையில் உள்ள ரவுடி மண்ணச்சநல்லூர் குணாவிடம் சிபிசிஐடி டி.ஐ.ஜி வருண் குமார் நேரில் விசாரணை நடத்தி உள்ளார்.
திமுக முதன்மைச் செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேருவின் தம்பி ராமஜெயம். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி அதிமுக ஆட்சி காலத்தில் தனது வீட்டில் இருந்து அதிகாலை வாக்கிங் சென்ற போது மர்ம நபர்களால் கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு காவிரி ஆற்றின் கரையில் இருந்து அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் துப்புத் துலக்க முடியாமல் போலீசார் திணறினர். இந்த கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ வரை விசாரித்தும் கொலையாளிகளைப் பிடிக்க முடியாமல் விசாரணை நீண்டு வருகிறது. பல ஆண்டுகளாகியும் கொலையாளியின் நிழலைக் கூட நெருங்க முடியவில்லை.
இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்ட போதிலும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க தமிழக போலீஸ் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன் திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் தஞ்சாவூர் எஸ்.பி. ராஜாராம் ஆகியோரை உயர்நீதிமன்றம் விசாரணை அதிகாரிகளாக நியமித்தது.
ராமஜெயம் கொலை வழக்கு தொடர்ந்து பல மர்மங்கள் நீடித்து வரும் நிலையில், சிறப்பு புலனாய்வு பிரிவு, தங்களுடைய விசாரணை வளையத்தில் 13 ரவுடிகளை சந்தேகத்தின் அடிப்படையில் உண்மைதன்மை கண்டறியும் சோதனையை நடத்தினர். இப்படியாக தொடர்ச்சியாக விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி டிஐஜி வருண்குமார் புழல் சிறையில் உள்ள மண்ணச்சநல்லூர் குணாவிடம் விசாரணை நடத்தி உள்ளார்.
ராமஜெயம் கொலை வழக்கு நீண்ட நாட்களாக விடை கிடைக்காத நிலையில் கொலை வழக்கில் தண்டனை பெற்று பாளையங்கோட்டையில் சிறைவாசியாக உள்ள சுடலை முத்துவிடம் விசாரணை நடத்தி உள்ளனர் டிஐஜி வருண்குமார் தலைமையிலான விசாரணைக் குழுவினர்.
தண்டனை கைதியான சுடலை முத்து திருச்சி ராமஜெயத்தின் கொலை நடந்த காலகட்டத்தில் தொழிற்பயிற்சிக்காக திருச்சி சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் தன்னுடன் இருந்த மற்றொரு கைதியுடன் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து, சென்னை புழல் சிறைக்கு டிஐஜி வருண்குமார் தலைமையிலான போலீசார் நேற்று வந்தனர். புழல் சிறையில் உள்ள மண்ணச்சநல்லூர் குணாவிடம் நேற்று மாலை 4 மணியளவில் விசாரணையை தொடங்கி, சுமார் இரண்டரை மணிநேரம் விசாரணை நடத்திவிட்டு வருண்குமார் வெளியே வந்தார்.
கொலையாளி குறித்த துப்பு கிடைக்காமல் நீண்ட நாளாக இழுத்துக் கொண்டிருக்கும் ராமஜெயம் கொலை வழக்கை முடிப்பதற்கான இறுதிக்கட்டத்தை டிஐஜி வருண்குமார் நெருங்கியுள்ளார் என காவல்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது. இந்த வழக்கிற்கு ஒரு முடிவு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications