முக அழகிரியின் மகன் தயாநிதி அழகிரிக்கு மனநல பரிசோதனை.. ஈடி தொடர்ந்த வழக்கில் சிபிஐ கோர்ட் அதிரடி!
மதுரை: ரூ.256 கோடி சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகனும், கலைஞர் கருணாநிதியின் பேரனுமான தயாநிதி அழகிரிக்கு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் புதியதாக மனநல மற்றும் உடல் தகுதிப் பரிசோதனை நடத்த மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நேரில் பார்த்தது மற்றும் தேர்தலில் வாக்களித்ததை சுட்டிக்காட்டி அமலாக்கத்துறை தொடர்ந்த மனுவை ஏற்று நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மதுரை கீழவளவு காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், அமலாக்கத்துறையால் தொடரப்பட்ட சுமார் ரூ.256.44 கோடி மதிப்பிலான சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனைத் தடைச்சட்ட வழக்கில் 3-வது குற்றவாளியாக முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகன் தயாநிதி சேர்க்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே நரம்பியல் குறைபாடு மற்றும் பக்கவாதம் காரணமாகத் தான் விசாரணையை எதிர்கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக தயாநிதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னை அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை அளித்த மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், 3-வது குற்றவாளிக்கான வழக்கு தனியாகப் பிரிக்கப்பட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு வந்தது.
அமலாக்கத்துறை
இந்நிலையில், அமலாக்கத்துறை சார்பில் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர், தயாநிதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டுகளித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. மேலும், நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அவர் வாக்களித்து, அது தொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். இதிலிருந்து அவர் நலமுடன் இருப்பது தெரியவருவதால், புதுச்சேரி ஜிப்மர் அல்லது எய்ம்ஸ் மருத்துவக் குழு மூலம் அவருக்கு மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை சிறப்பு வழக்கறிஞர் வாதாடினார்.
தயாநிதி அழகிரி
தயாநிதி தரப்பு வழக்கறிஞர் வாதிடும்போது நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மனநலக் குறைபாடு ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சமூக வலைதளப் படங்களை வைத்து மீண்டும் மருத்துவப் பரிசோதனைக்கு உத்தரவிட முடியாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட மதுரை கூடுதல் மாவட்ட மற்றும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி S. சண்முகவேல் உத்தரவினை பிறப்பித்தார்.
ஜிப்மர் மருத்துவமனை
அதில், கிரிக்கெட் போட்டியை நேரில் சென்று பார்ப்பதும், தேர்தலில் வாக்களிப்பதும் சாத்தியப்படும்போது, நீதிமன்றத்தில் ஆஜராகி விசாரணையை எதிர்கொள்வதில் என்ன தடை இருக்க முடியும் எனக் கேள்வியெழுப்பினார். மேலும் தயாநிதியின் தற்போதைய மனநிலை, புரிந்துகொள்ளும் திறன் மற்றும் உடல் தகுதியை ஆய்வு செய்ய புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மனநல மருத்துவர்
ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர், முதன்மை மனநல மருத்துவர் (Chief Psychiatrist), கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் மற்றும் முதன்மை நரம்பியல் வல்லுநர் (Chief Neurologist) அடங்கிய சிறப்பு மருத்துவக் குழுவை அமைத்து தயாநிதியை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். தேவைப்பட்டால் தயாநிதியை மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதித்து ஆய்வு செய்யும் அதிகாரமும் ஜிப்மர் இயக்குநருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
மருத்துவப் பரிசோதனை
மேலும் மருத்துவப் பரிசோதனைக்குப் பின், அதன் அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்திற்கு நேரடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அமலாக்கத்துறையின் இந்த மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, ஜிப்மர் மருத்துவக் குழுவின் பரிசோதனைக்கு தயாநிதி அழகிரி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
