இந்தப் பக்கம் சிபிஐ.. அந்த பக்கம் சென்சார்! மத்தளமாய் அடி வாங்கும் விஜய்! சைலண்டாய் பாஜகவின் மெசேஜ்!
சென்னை: நடிகர் விஜயின் ஜனநாயகன் படம் சென்சார் சான்றிதழ் பிரச்சனையால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. மறுபுறம் கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணையை துரிதப்படுத்தி உள்ள சிபிஐ விஜயை டெல்லிக்கு வர சம்மன் அனுப்பி உள்ளது. ஒரே நேரத்தில் இரு பிரச்சனைகளை கிளப்பி உள்ள பாஜக விஜய்க்கு இதனை ஒரு வார்னிங்காகவே கொடுத்துள்ளதாகவும், இப்படியும் அழுத்தம் கொடுக்க முடியும் என அவருக்கு கொடுக்கப்பட்ட மெசேஜ் தான் சிபிஐ, சென்சார் பிரச்சனை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
2026 சட்டமன்ற தேர்தலையொட்டி நாளுக்கு நாள் பரபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழக அரசியல் சூழலில், திமுக ஆட்சியை எப்படியாவது அகற்ற வேண்டும் என்ற உறுதியுடன் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா தொடர்ந்து பல்வேறு அஸ்திரங்களை பயன்படுத்தி வருகிறது.
அந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தங்கள் கூட்டணிக்குள் வர வேண்டும் என்பதையும் பாஜக முக்கிய டார்க்கெட்டாக வைத்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

2026 சட்டமன்ற தேர்தல்
விஜய் தொடர்ந்து திமுக தான் அரசியல் எதிரி, பாஜக தான் கொள்கை எதிரி என்று வெளிப்படையாகக் கூறி வருகிறார். ஆனாலும், அவரை பாஜக சாஃப்ட் டீல் செய்து வருவதாக ஒரு விமர்சனமும் முன் வைக்கப்படுகிறதான். இதனால் தான் விஜய் பாஜக - அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும் என பாஜக தரப்பில் இருந்து அவருக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் அழுத்தங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
காங்கிரஸ் தமிழக அரசியல்
விஜய் தனியாக நின்றால் வெற்றி கடினம். பொதுவான எதிரியை ஒன்றாக எதிர்த்தால் அரசியல் பலம் கூடும் என நயினார், தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள் ஒரே கருத்தை விஜயை நோக்கி சொல்லி வருகின்றன. இந்த அணுகுமுறையின் பின்னணியில், திமுகவை வீழ்த்துவது மட்டுமல்லாமல், தமிழகத்தில் காங்கிரஸின் செல்வாக்கை குறைப்பதும் பாஜகவின் முக்கிய திட்டமாக இருப்பதாக கூறப்படுகிறது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் போதே, பாஜக மற்றும் அதிமுக இரு தரப்பும் தவெக-வுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது அரசியல் கவனத்தை ஈர்த்தது.
பாஜக அழுத்தம்
அதிமுக தரப்பில் விஜய் இனி நம்மோடு வரமாட்டார் என்ற முடிவுக்கு ஏற்கனவே வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், பாஜக மட்டும் இன்னும் விஜய் உடன் கூட்டணி என்ற ஆப்ஷனை விட்டு விடாமல் காத்திருக்கிறது. இந்த காத்திருப்புக்குப் பின்னால், 2026 சட்டசபை தேர்தல் கணக்குகள் மட்டுமல்ல, காங்கிரஸை தமிழக அரசியலில் ஓரங்கட்டும் நீண்டகால ராஜதந்திரமும் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். திமுக கூட்டணியில் விஜயை மையமாக வைத்து காங்கிரஸ் குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாக பாஜக கருதுகிறது.
காங்கிரஸ் - திமுக
ஆனாலும், வரும் தேர்தலில் காங்கிரஸுக்கு திமுக எதிர்பார்க்கும் அளவிலான இடங்கள் கிடைக்காது என்பதே பாஜக-வின் கணிப்பு. அப்படி நடந்தால், காங்கிரஸ் தவெக பக்கம் திரும்பும் வாய்ப்பு அதிகம் என்றும், 70 தொகுதிகள் வரை தரவும், ஆட்சியில் பங்கு வழங்கவும் தவெக தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்ற மாநிலங்களில் காங்கிரஸை பலவீனப்படுத்திய பாஜக, அதே திட்டத்தை தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த விரும்புகிறது.
கரூர் சம்பவம் விசாரணை
இந்த அரசியல் கணக்குகளை மனதில் வைத்தே, பாஜக இரண்டு முக்கிய அஸ்திரங்களை கையில் எடுத்துள்ளதாக பேசப்படுகிறது. ஒன்று, கரூர் சம்பவம். மற்றொன்று, விஜய்யின் 'ஜனநாயகன். கரூர் விவகாரத்தில், மற்ற தலைவர்களை கரூருக்கு அழைத்து விசாரித்த சிபிஐ, விஜயை மட்டும் டெல்லிக்கே அழைத்துள்ளது அரசியல் தான் என்கின்றனர். விஜயை டெல்லிக்கு அழைத்தால் விசாரணை அரசியல் என்ற விமர்சனம் வரக்கூடாது என்பதற்காக, ஆதவ் அர்ஜூனா, ஆனந்த் உள்ளிட்ட தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்களை முன்கூட்டியே டெல்லிக்கு அழைத்து இரண்டு நாட்கள் விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
ஜனநாயகன் - சென்சார்
இந்த விசாரணையின் போக்கை வைத்தே, தவெக மீது அழுத்தம் கொடுக்கவும் அல்லது அரசியல் திசையை மாற்றவும் முடியும் என்பதே பாஜகவின் கணக்காக சொல்லப்படுகிறது. அதேபோல், 'ஜனநாயகன்' பட ரிலீஸ் விவகாரத்திலும், மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் காட்டும் தாமதம் விஜய்க்கு ஒரு அரசியல் எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. 500 கோடி முதலீடு என்று படக்குழு கவலை தெரிவித்தாலும், அவசரப்பட முடியாது என்ற மத்திய அமைப்புகளின் அணுகுமுறை, இப்படியும் சிக்கல் உருவாக்க முடியும் என்ற மறைமுக செய்தியை விஜய்க்கு அனுப்பியதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
அமித் ஷா அரசியல் கணக்கு
இதையெல்லாம் சேர்த்து பார்த்தால், தமிழக அரசியல் களம் மெதுவாக ஆனால் உறுதியான மாற்றத்தின் திசையில் நகர்கிறது. விஜய் எடுக்கும் அடுத்த முடிவு, திமுக, பாஜக, காங்கிரஸ் ஆகிய மூன்று முக்கிய அரசியல் சக்திகளின் கணக்கையும் மாற்றக்கூடியதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனால் விஜய் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications