காட்டிக் கொடுத்த குட்டி செல்போன்! யார் இந்த அருள்? ஆம்ஸ்ட்ராங்கை குறிவைத்த 4 பிரபல ரவுடிகள்
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் அருள் என்பவர் யார்? அவருக்கும் ஆற்காடு சுரேஷுக்கும் என்ன தொடர்பு? திருநின்றவூரில் தலைமறைவாக இருந்த பாலுவை காவல்துறை நெருங்கியது எப்படி?
கடந்த 5ஆம் தேதியன்று சென்னை பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள வீட்டில் ஆம்ஸ்ட்ராங் இருந்த போது அவரை 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இச்சம்பவம் தொடர்பாகப் பிரபல ரௌடிவு ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உட்பட 8 பேர் அன்று இரவே கைது செய்யப்பட்டனர்.

மேலும் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆக மொத்தம் இப்போது வரை இந்தக் கொலை தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டு, பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதான இந்த 11 பேரையும் 5 நாட்கள் போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இப்போது இந்தக் கொலை சம்பவத்தின் மூளையாகச் செயல்பட்டவர் என்று போலீஸார் வழக்கறிஞர் அருள் என்பவரை கைது செய்துள்ளனர். யார் இந்த அருள்?
ஆரம்பக்காலங்களில் ஆம்ஸ்ட்ராங் மீது சில வழக்குள் போடப்பட்டிருந்தன. அதனை சட்டரீதியாக எதிர்கொண்ட இவர், அனைத்து வழக்குகளிலிருந்தும் முறையாக விடுதலை பெற்றார். ஆகவே, ஆம்ஸ்ட்ராங் மீது இருந்த காவல்துறை தொடர்பான பதிவேடுகள் அழிக்கப்பட்டன. அதன்பின்னர் அவர் எந்த இடையூறுகளும் இல்லாமல் அரசியல் கட்சியில் ஈடுபட்டுச் செயலாற்றி வந்தார்.
ஆம்ஸ்ட்ராங் வடசென்னை பகுதியில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் முறையாக இளம் வயதிலிருந்தே கரேதே, குத்துச்சண்டை எனப் பல தற்காப்புக் கலைகளைக் கற்று வைத்துக் கொண்டார். பொதுவான விழாக்களில் கலந்து கொள்ளும்போது கூட ஆம்ஸ்ட்ராங் தனது நண்பர்களுடன் விளையாட்டாக பாக்சிங் செய்யும் காட்சிகள் கூட வீடியோக்கள் அவரது மறைவுக்குப் பிறகு வெளியாகி வருகின்றன.
என்னதான் தற்காப்புக் கலையில் வல்லவராக இருந்தாலும், ஒரே நேரத்தில் பல ரவுடிகளை சமாளிக்க வேண்டும் என்பதாலும், எந்தப் பக்கத்திலிருந்து தனக்கு ஆபத்து வரும் என்பது ஊகிக்க முடியாததாலும் முறையாக சட்டப்படி அவர் தனது பாதுகாப்புக்காக வேண்டி கைத்துப்பாக்கி வங்கி வைத்துக் கொண்டார். பகுஜன் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்து வந்த ஆம்ஸ்ட்ராங், தனது கட்சிக்காரர்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தலையிட்டு பஞ்சாயத்து செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். வடசென்னை வட்டாரத்தில் அசைக்க முடியாத ஒரு அரசியல் சக்தியாகவும் அவர் வலம் வர ஆரம்பித்தார்.
குறிப்பாக ஆருத்ரா கோல்டு கம்பெனி விவகாரத்தில் அதன் உரிமையாளர் சிவக்குமாருக்கு இவர் மிரட்டல் விடுத்து வந்ததாகக் கூட ஒரு குற்றச்சாட்டு முன்பு எழுந்தது. பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை மீட்டுத் தருவதற்கான முயற்சியில் இந்த மிரட்டல் நடந்ததாகச் சொல்லப்பட்டது. அப்போதுதான் ஆருத்ரா நிறுவன உரிமையாளருக்கு ஆதரவாக ஆற்காடு சுரேஷ் களம் இறங்கியதாகச் சொல்லப்பட்டது. இதனால் ஆம்ஸ்ட்ராங் மற்றும் சுரேஷ் இடையே ஒரு மோதல் உருவானது.
இந்த விவகாரம் தொடர்பான மோதலில் பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளரும் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பருமான பாம் சரவணனின் தம்பி தென்னரசு என்பவரைக் கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் கூட்ரோடு அருகே வைத்து அவரது குடும்பத்தினர் கண் எதிரே ஆற்காடு சுரேஷ் தரப்பு கொலை செய்தது. கிட்டத்தட்ட 15 முறை மேலாகக் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட புளியந்தோப்பைச் சேர்ந்தவர்தான் பிரபல கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ்.
இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி பட்டினப்பாக்கம் சர்வீஸ் சாலையில் வைத்து தென்னரசு கொலைக்கு ஒரு கும்பல் பழிவாங்கியது. இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பலுக்கு ஆம்ஸ்ட்ராங்தான் நிதியுதவி அளித்தாகவும் கொலையாளிகள் தங்குவதற்கு இடமளித்ததாகவும் ஆற்காடு சுரேஷ் ஆதரவாளர்கள் நம்பிவந்தனர்.
இதற்கு ரிவேஞ் எடுக்கும் வகையில்தான் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு காவல்துறையில் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறை தரப்பிலிருந்து செய்தி வெளியானது. ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக இதுவரை 15 பேர் கைதாகியுள்ளனர். இவர்களை முறைப்படி காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
என்னதான் கொலையாளிகள் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டாலும், காவல்துறை இதற்குப் பின்னால் வேறு யாரேனும் உள்ளனரா ? என்ற கோணத்தில் காவல்துறை விசாரித்து வருகிறது. பொதுவாக ஒரு கொலையின் விசாரணையை முடிப்பதற்கு காவல்துறைக்கு 50 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படும்.
இந்தக் கொலை விவகாரத்தில் சீசிங் ராஜா, சைதை சுகு, ரவுடி நாகேந்திரன், நெட்டூர் கண்ணன், திண்டுக்கல் மோகன் ராம், தூத்துக்குடியைச் சேர்ந்த பாயசம் என்கின்ற பரமசிவம், ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதில் மோகன் ராம் என்பவருக்கு அதிமுகவுடன் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பட்டியலில் உள்ள சீசிங் ராஜாவுக்கு ஆற்காடு சுரேஷ் நெருங்கிய நண்பர். இந்த திண்டுக்கல் மோகன் ராமுக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் ரியல் எஸ்டேட் தொடர்பாக சில தகராறுகள் இருந்துள்ளன. இந்த மோகன் ராம் நம்பர் ஒன் ரவுகள் பட்டியலில் உள்ளவன். இவரது சிஷ்யன் தான் சீர்காழி சத்யா. இவனைச் சமீபத்தில் செங்கல்பட்டு காவல்துறை கைது செய்துள்ளது. நெட்டூர் கண்ணனும் பாயசம் பரமசிவமும் கூலிப்படை ஆட்கள். பணம் கொடுத்தால் கொலை செய்யும் ரவுடிகள்.
ஆக, அனைவரும் தங்களின் தனிப்பட்ட வேறுவேறு காரணங்களுக்காக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டம் போட்டு வந்துள்ளனர். அப்படித்தான் இந்த ரவுடிகளுக்குள் ஒருமித்த கருத்து எழுந்துள்ளது. கொலையைச் செய்ய வந்தவர்கள் யாரும் தங்களது சொந்த வாகனத்தில் வரவில்லை என்பதையும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. வாகனங்களின் ஆவணங்களைச் சேகரித்த காவல்துறை உண்மையான உரிமையாளர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளது.
இந்த வழக்கில் கைதாகி உள்ள திருநின்றவூரை சேர்ந்த வழக்கறிஞர் அருள் என்பவர்தான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கான மூளையாகச் செயல்பட்டவர் என்று காவல்துறை சந்தேகித்துள்ளது. ஆற்காடு சுரேஷுன் கடந்த 10 ஆண்டுகளாக நெருங்கிய தொடர்பிலிருந்துவந்துள்ளார். இவர் சுரேஷூக்கு மைத்துனர் என்று ஒரு தகவல் கிடைத்துள்ளது. இதே திருநின்றவூரை சேர்ந்த சதீஷ், நரேஷ், சீனிவாசன் ஆகிய மூவரையும் கைது செய்த போலீஸார் செம்பியன் காவல்நிலையத்தில் வைத்து முறையாக விசாரித்து வருகின்றனர்.
இந்தக் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள குற்றவாளிகள் சிலர் அங்கிருந்தபடியே கையளவு செல்போன் மூலம் வெளியில் யாருக்கோ தகவல் கொடுத்து வந்துள்ளனர். அந்த குட்டி போனை கையகப்படுத்திய போலீஸார் வழக்கறிஞர் அருளைக் கைது செய்துள்ளனர். இந்த வழக்கறிஞர் அருள்தான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்யும் போது ரத்தம் அதிகமாக வெளியேறும் நரம்புகளைப் பார்த்து குறியாகப் பார்த்து வெட்ட வேண்டும் என்று ஸ்கெட்சி போட்டுக் கொடுத்துள்ளார்.
அதனடிப்படையில் இந்த கொலையில் மிக முக்கியமான ஒரு நபரை காவல்துறை சாமர்த்தியமாக நெருங்கியுள்ளது. அடுத்த கட்டமாக மேலும் பல திடுக்கிடும் சம்பவம் வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications