வீட்டு வசதித்துறை வெப்சைட்டில் மாற்றம்! 22 மொழிகளில் மத்திய அரசு திட்டங்களை படிக்கும் AI பாஷினி வசதி
சென்னை: மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமானது, இதுவரை இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் மட்டுமே தகவல்களை வழங்கி வந்தது. இதன் காரணமாக, மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் அரசாணைகளைத் தமிழில் நேரடியாகப் பெற முடியாமல் பொதுமக்களும், மாநில அரசுகளும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டன. இதற்கெல்லாம் தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.. தமிழ் உட்பட 22 இந்திய மொழிகளில் இந்த இணையதளத்தைப் பார்வையிடும் புதிய வசதி தொழில்நுட்ப உதவியுடன் அதிகாரப்பூர்வமாக தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டானது, இதுவரை இந்திய மத்திய அரசின் அலுவல் பூர்வ மொழிகளான ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய 2 மொழிகளில் மட்டுமே முழுமையாக டிசைன் செய்யப்பட்டிருக்கும்

மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்
இந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்தின் வலது மேல் மூலையில், மொழி மாற்றி அமைக்கும் வசதி (Language toggle) தரப்பட்டுள்ளது.. இதனை பயன்படுத்தி, பயனாளிகள் தங்களுக்கு தேவையான மொழியை தேர்ந்தெடுத்து பக்கங்களை வாசிக்க முடியும்.. ஆனாலும், வீட்டு வசதித்துறை சார்ந்த திட்டங்களின் வழிகாட்டு நெறிமுறைகள், அரசாணைகள், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், சுற்றறிக்கைகள் போன்றவற்றை டவுன்லோடு செய்யக்கூடிய முக்கிய ஆவணங்கள் அனைத்தும் பெரும்பாலும் ஆங்கில வடிவிலேயே பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தன.
மாநில அரசுகள் தங்களின் பிராந்திய மொழிகளில், குறிப்பாக தமிழில் இது போன்ற திட்டங்களைச் செயல்படுத்தும்போது மட்டுமே, அந்தந்த மாநில வீட்டு வசதி வாரிய வெப்சைட்களில் உள்ளூர் மொழிகளில் அரசாணைகளை வெளியிடுகிறார்களே தவிர, இந்த முதன்மை மத்திய அரசு இணையதளத்தில் தமிழ் போன்ற பிற மாநில மொழிகளில் தகவல்களை நேரடியாக பெற இயலாத நிலைமை நீடித்தது.
மத்திய அரசின் நலத்திட்டங்கள்
மத்திய அரசின் பல்வேறு முக்கிய அறிவிப்புகள், நலத்திட்டங்கள் மற்றும் அரசாணைகள் வெளியாகும் இந்த முதன்மை இணையதளம், இதுவரை இந்தி மொழியை முதன்மையாகவும், விருப்ப மொழியாக ஆங்கிலத்தையும் மட்டுமே கொண்டிருந்தது.. இதனால் பொதுமக்கள் பலராலும் அதனை எளிதாகப் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.. இந்தி பேசாத மாநில மக்கள் மற்றும் சாதாரண பொதுமக்களுக்கு இதனால் ஏற்பட்ட சிரமங்கள் குறித்து பல்வேறு தரப்பிலும் தொடர்ந்து ஆட்சேபங்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன.
இதற்கு சென்னை உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து எதிர்ப்புகள் வலுத்தன.. தொடர் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.. இதையடுத்து மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக இணையதளத்தை இப்போது தமிழ் மற்றும் ஆங்கிலம் உட்பட 22 மொழிகளில் நேரடியாக பார்க்கும் வசதி புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பாஷினி - 22 மொழிகள்
இதன்மூலம் இப்போது, தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் மட்டுமன்றி, பிராந்திய மொழிகளையும் கடந்து சமஸ்கிருதம், உருது மற்றும் நேபாளி உள்ளிட்ட 22 இந்திய மொழிகளிலும் மக்கள் இந்த வெப்சைட்டை பார்வையிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, தேசிய மொழிபெயர்ப்பு இயக்ககத்தின் "பாஷினி" எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த மாற்றம் சாத்தியமாக்கப்பட்டுள்ளது... வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறையை தொடர்ந்து, மத்திய அரசின் பிற முக்கிய அமைச்சகங்களின் இணையதளங்களையும் மக்கள் தங்களின் தாய் மொழியிலேயே மிக எளிதாகப் பார்வையிடும் வகையில் நடவடிக்கைகள் இப்போது தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் சாதாரண பாமர மக்களும் டெல்லியில் உள்ள மத்திய அரசின் திட்டங்களை தங்களின் சொந்த மொழியிலேயே படித்து, முழுமையாகப் புரிந்துகொண்டு பயன்பெற முடியும்...!!!


Click it and Unblock the Notifications
