உயிர்ப் பிரச்சனை.. உரிமைப் பிரச்சனை.. ஒன்றுபட்டு போராடுவோம்.. அழைப்பு விடுத்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: "தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!" எனப் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். தமிழ்நாடு தனது உயிர்ப்பிரச்சனையான மொழிப்போரையும், உரிமைப் பிரச்சனையான தொகுதி மறுசீரமைப்பையும் எதிர்க்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு ஆகியவற்றில் ஒன்றிய பாஜக அரசின் உண்மையான நோக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்பது நம் மாநிலத்தின் சுயமரியாதை, சமூக நீதி, சமூக நலத்திட்டங்களை பெரிதும் பாதிக்கும்." என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"இந்தியை திணிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டே அதற்கான எல்லா முன்னெடுப்புகளையும் எடுத்து வருகிறது ஒன்றிய அரசு!" என தனது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
"இந்தியாவுக்கே வழிகாட்டியாக நாம் போராட்டத்தை தொடங்க வேண்டும்; தமிழ்நாட்டின் நலனுக்காக யாருக்கும் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டோம். தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்.
மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை எனக் கூறிவிட்டு அதற்கான வேலையை தொடங்கிவிட்டது. மும்மொழிக் கொள்கையை ஏற்காத காரணத்தால் தமிழ்நாட்டிற்கான நிதி வழங்கவில்லை.
மறுசீரமைப்பால் தமிழ்நாட்டில் தொகுதி குறைக்கப்படாது என மத்திய அரசு சொல்கிறது ஆனால் மற்ற மாநில தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மாட்டோம் என சொல்லவில்லை. நாட்டின் நலனுக்காக மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழகத்தை வஞ்சிக்கக் கூடாது.

மொழிப்போர், தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனைகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் தமிழ்நாட்டைக் காக்க ஒவ்வொருவரும் எழுந்து நிற்க வேண்டும். தமிழையும் தமிழர்களின் உரிமைகளையும் பாதுகாக்க, திமுக ஒரு போராட்டத்தைக் கையில் எடுத்தால் இந்தியாவை ஆட்சி செய்பவர்கள் அஞ்சுகிறார்கள், அலறுகிறார்கள். நம்மை நோக்கி தேசவிரோதிகள் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்திய ஒன்றியத்தின் பன்முகத் தன்மையையும் மொழிவழிப் பண்பாடுகளையும் சிதைத்து, ஒற்றுமையைக் குலைப்பவர்கள்தான் உண்மையான தேசவிரோதிகள்.
இந்தியும் தமிழைப் போல ஒரு மொழிதானே, கற்றுக்கொள்ளக் கூடாதா என்று கரிசனத்துடன் பேசுகிறவர்களிடம், "சமஸ்கிருதத்திற்குப் பதில் தமிழிலேயே கோயில்களில் அர்ச்சனை செய்யலாமா? தமிழும் செம்மையான மொழிதானே?" என்று கேட்டுப் பாருங்கள். அவர்களின் உண்மையான நோக்கமும், அடையாளமும் அம்பலமாகிவிடும்! அதனால்தான் இந்தித் திணிப்பை எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறோம்." என அந்த வீடியோவில் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications