சக்கரம் 'அக்வான் ' அப்டேட்.. கைவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது.. தமிழ்நாடு வெதர்மேன் பதிவு
சென்னை: தனியார் வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேப் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் கூறுகையில், "தமிழ்நாடு எதிர்பார்ப்புகளைக் குறைவாகவே வைத்துக்கொள்வோம்; ஏனெனில், இந்த வானிலை அமைப்பு வட ஆந்திரா/ஒடிசா முதல் தெற்கு ஆந்திரா வரை செல்லக்கூடும் என்று வெவ்வேறு கணிப்புகள் உள்ளன. 'அர்னாப்' மற்றும் 'முரசு' ஆகிய புயல்களை போலவே, இதுவும் ஆந்திராவை நோக்கிச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்" என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிரதீப் ஜான் மேலும் கூறுகையில், "இந்த அமைப்பு ஆந்திராவை நோக்கிச் சென்றாலும், 19-ஆம் தேதியவாக்கில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் (KTCC) இயல்பான மழை பெய்யக்கூடும். 'முரசு' புயலின் போது கிடைத்தது போன்ற மழையே கிடைத்தாலும், அது சென்னைக்கு நல்ல விஷயம்தான். ஆனால், இந்த அமைப்பு மசூலிப்பட்டினம் அல்லது காக்கிநாடாவை நோக்கி நகர்ந்தால், சென்னையில் மழை பெய்யும் வாய்ப்பே இல்லாமல் போகக்கூடும்.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் மழைக்கான வாய்ப்புகள்
நெல்லூர் மற்றும் அதற்குத் தெற்கே புயல் கரையை கடந்தால் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது, ஆனால் இந்த பாதையில் புயல் கடப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. நெல்லூருக்கு வடக்கே மசூலிப்பட்டினம் / காக்கிநாடா வரையிலான பகுதியில் அக்வான் புயலின் அமைப்பு நகர்ந்தால், கனமழை கிடைப்பதற்கான வாய்ப்பு குறைந்து, இயல்பான மழை மட்டுமே கிடைக்கக்கூடும். தற்போதைய நிலவரப்படி, இந்தச் சூழல் ஏற்படுவதற்கே அதிக வாய்ப்புள்ளது" இவ்வாறு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
நாளை தெரியும்
'அர்னாப்' மற்றும் 'முரசு' ஆகிய புயல்களைபோலவே அக்வான் புயலும் ஆந்திராவை நோக்கியே நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வாளர்கள் மற்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நாளை அல்லது நாளை மறுநாளில் மிக துல்லியமாக புயலின் பாதை தெரியவரும் போது தான், சென்னைக்கான மழை வாய்ப்பு எப்படி என்பதை அறிய முடியும். தற்போதைய சூழலில் வரும் நாட்களில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்பது தான் வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பாக உள்ளது. இதுவே வானிலை ஆய்வாளர்களின் கணிப்பாக உள்ளது. மிக கனமழை அல்லது அதிகனமழையை பொறுத்தவரை இன்னும் ஒரு நாள் கழித்தே முழுமையாக தெரியவரும்.
டெல்டா வெதர்மேன் ஹேமசந்தர்
டெல்டா வெதர்மேன் ஹேமசந்தர் வெளியிட்டிருந்த பதிவில் கூறுகையில், தென்மேற்கு வங்கக்கடலில் தொடர்ந்து வலுப்பெறும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்! காற்றழுத்த வெட்டு, வறண்ட காற்றால் புயலாக மாறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அடுத்த 12 மணி நேரத்தில் இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு, அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த வெட்டு குறையத் தொடங்கினால், இது 'அக்வான்' (Akvan) என்ற பெயரிலான தீவிரப் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலின் நகர்வைத் தீர்மானிப்பதில் மேற்கத்திய காற்றுப் பள்ளம், இந்தோ-பசிபிக் உயர் அழுத்தப் பகுதி , இந்தோ-அரேபிய உயர் அழுத்தப் பகுதி ஆகியவற்றுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
வானிலை கணிப்புகள்
ஏஐ அடிப்படையிலான வானிலை மாதிரிகள் அரேபிய உயர் அழுத்தப் பகுதியின் வலிமை குறைந்துள்ளதாகக் காட்டுகின்றன. இதனால் மேற்கத்திய காற்றுப் பள்ளம் மற்றும் இந்தோ-பசிபிக் உயர் அழுத்தப் பகுதியின் ஆதிக்கம் அதிகரித்து, புயல் மேற்கு நோக்கி நகர்வதற்கான வாய்ப்பு கணிசமாகக் குறைந்து, வடக்கு நோக்கி நேரடியாக நகரும் பாதையை எடுத்துள்ளதாக அந்த மாதிரிகள் தெரிவிக்கின்றன. ஆனால், மற்றொரு புறம் வழக்கமான கணிதக் கணிப்பு மாதிரிகள் தொடர்ந்து மேற்கு நோக்கிய நகர்வைக் காட்டுகின்றன. இதனால் வடதமிழகப் பகுதிகளும் புயலின் தாக்கத்துக்கான கண்காணிப்பு வளையத்தில் நீடிக்கின்றன.
AI மாதிரிகள் இவ்வளவு திடீரென கணிப்புகளை மாற்றுவது அரிது. தற்போதைய அதிக காற்றழுத்த வெட்டு மற்றும் வறண்ட காற்றின் ஊடுருவல் ஆகியவை புயலின் வலுப்பெறும் தன்மையை எவ்வாறு பாதிக்கின்றன என்பது உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட வேண்டும" என்று கூறியுள்ளார்.




Click it and Unblock the Notifications
