சென்னை டூ நாகை... நவம்பரில் ஒரே நாளில் 50 செமீ மழை பெய்ய வாய்ப்பு.. டெல்டா வெதர்மேன்
சென்னை: இந்த ஆண்டு மழையே சரியாக பெய்யவில்லை தமிழ்நாட்டில் .. வரலாறு காணாத அளவிற்கு குறைவான மழை பொழிவு காரணமாக ஆறு, குளங்கள் எல்லாமே வற்றிப்போய் கிடக்கின்றன. இப்படியான சூழல் எங்கே நிலவினாலும், அடுத்து அங்கு மிகப்பெரிய மழை பெய்யும் என்பது இயற்கை நியதி.. இந்த சூழலில் எல்லினோ பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை தமிழ்நாட்டில் இயல்பைவிட 60 செ.மீ அதிக மழை பெய்யலாம் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார். அதேபோல் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் நவம்பர் மாதத்தில் ஒரே நாளில் 50 செ.மீ. மழை கொட்ட வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் குறிப்பிட்டுள்ளார்.
தென்மேற்கு பருவ மழை கடந்த ஆண்டு ஓரளவு நன்றாகவே தமிழ்நாட்டிற்கு இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அப்படி இல்லை. காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு நீர் வழங்கும் மேட்டூர் அணையே நிரம்பவில்லை. அந்த பக்கம் வைகையும் நிரம்பவில்லை.. ஏன் வற்றாத நதியான தாமிரபரணியும் போதிய மழை இல்லாமல் வற்றிப்போய்கிடக்கிறது.

சென்னையை சுற்றியுள்ளள பகுதிகளில் நிலைமையை கேட்க வேண்டாம். கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மட்டும் இல்லை என்றால் குடிநீருக்கு தினமும் சென்னை அல்லாடும் அளவிற்கு நிலைமை ஏற்பட்டிருக்கும். ஏனெனில் சென்னையை சுற்றியுள்ள எந்த ஏரியும் குடிநீருக்கு தண்ணீர் வரத்து போதிய அளவு இல்லை.. கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களிலும் நிலைமை அப்படித்தான் இருக்கிறது. இந்த சூழலில் தென்மேற்கு பருவமழை மெல்ல மெல்ல விலக தொடங்கிவிட்டது. ஆனால் அப்படியே தமிழ்நாட்டுக்கு ஆண்டு மழைப்பொழிவில் அதிக மழையை தரக்கூடிய வடகிழக்கு பருவமழை தொடங்க போகிறது.
தென்மேற்கு பருவமழை ராஜஸ்தான் பகுதியில் விலகத் தொடங்கி உள்ளதால், அக்டோபர் 10 அல்லது 12-ந்தேதிக்குள் முழுமையாக விலகிவிடும் என கூறப்படுகிறது. அதன்பிறகு அப்படியே வடகிழக்கு பருவமழை வரத்தொடங்கும். முன்பு அரபிக்கடல் காரணமாக மழை வந்த நிலையில், இனி வங்ககடல் காரணமாக மழை வரப்போகிறது. அரப்பிக்கடலில் உருவாக்கும் புயல் காரணமாக வரும் மேகங்களை மேற்கு தொடர்ச்சி மலைகள் தடுத்து விடுவதால், கேரளாவிற்கே மழை பெய்கிறது. கேரள எல்லையில் உள்ள மாவட்டங்களில் அதன் தாக்கம் இருக்கிறது. மற்ற மாவட்டங்களில் பெரிய அளவில் இருப்பதே இல்லை. ஆனால் வங்ககடலில் உருவாகும் புயல் மழைகளை தடுக்க எந்த மலையும இல்லை. எனவே கடுமையான மழை தமிழகத்திற்கு வடகிழக்கு பருவ மழை மூலமாகவே கிடைக்கும்.
இந்தநிலையில், வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மழைப்பொழிவை எப்படி கொடுக்கும்? என்பது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் முன்கூட்டிய வானிலை கணிப்பாக கூறியிருக்கிறார். இதுபற்றி அவர்கூறுகையில், "வடகிழக்கு பருவமழை காலத்தில் அதாவது அக்டோபர் 1-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரையிலான 3 மாதங்களில் சராசரியாக 44 செ.மீ. மழை பதிவாக வேண்டும். இது இயல்பான மழை அளவு ஆகும். இந்த ஆண்டு 50 முதல் 60 செ.மீ.க்கு மேல் இயல்பைவிட அதிக மழை பதிவாகும். சூப்பர் எல்நினோ மற்றும் நேர்மறை வானிலை நிகழ்வுகள் வடகிழக்கு பருவமழைக்கு சாதகமான சூழலை ஏற்படுத்த இருக்கிறது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் அதிகமழைக்கும், குறுகியநேரத்தில் அதிக மழைக்கும் வாய்ப்பு உள்ளது. கடலில் 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்தால், வளிமண்டலத்தில் ஈரப்பதம் 7 சதவீதம் அதிகரிக்கும். அதுவே சூப்பர் எல்நினோவின் உச்சத்தில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. அப்படி அதிகரித்தால், வளிமண்டலத்தில் ஈரப்பதம் 28 சதவீதம் இயல்பைவிட கூடும். இந்த நிகழ்வே அதிகமழையை கொடுக்க இருக்கிறது.
வட கடலோரம், காவிரி டெல்டா, தென் கடலோரம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இயல்பைவிட அதிக மழை பதிவாகக்கூடும். சூப்பர் எல்நினோ தாக்கத்தால் மழையை தரக்கூடிய புயல்கள் உருவாக வாய்ப்பு அதிகமாக இருக்கிறது,
வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் தலா ஒரு புயல் உருவாகக்கூடும். இதில் வங்கக்கடலில் உருவாகும் ஒரு புயல், தமிழ்நாட்டில் கரையை கடந்து நல்ல மழையையும் கொடுக்கலாம். அக்டோபர் 20-ந்தேதி முதல் டிசம்பர் 20-ந்தேதி வரையிலான 2 மாதங்கள் வடகிழக்கு பருவமழை 6 சுற்றுகளாக மழைப்பொழிவு கிடைக்கும. நவம்பர் மாதம் பிரதான மழை மாதமாக அமைந்து தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்.
நவம்பர் மாதத்தில் ஒரே நாளில் 50 செ.மீ. மழை சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் கொட்ட வாய்ப்பு இருக்கிறது,
வடகிழக்கு பருவமழை முன்னறிவிப்பு- 2026
— Delta Weatherman (Hemachander R) (@Deltarains) September 24, 2026
சூப்பர் எல் நினோ & நேர்மறை IOD தாக்கம் எப்படி இருக்கும்?
புயல் ஆபத்தா? பெருமழையா?
விரிவான விளக்கம்..#NEM2026 #ChennaiRains #Chennairains pic.twitter.com/GGVBh7enbM
சூப்பர் எல்நினோவின் முதற்கட்ட தாக்கம் மழைப்பொழிவு குறைவு, வறட்சி என்ற நிலையில் இருந்தது. இந்த நிலை அக்டோபர் 15-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதுவரை இல்லாத வகையில், கடல் பரப்பின் வெப்பநிலை இயல்பைவிட 3.04 டிகிரி செல்சியஸ் என்ற அளவை கடந்து இருக்கிறது. இது 4 டிகிரி செல்சியஸ் என்ற அளவு வரை செல்ல உள்ளது. சூப்பர் எல்நினோ வரலாற்றில் இதுவரை இல்லாத கடல் பரப்பு வெப்பநிலை இது ஆகும். 150 ஆண்டுகளுக்கு முன்பு 3 டிகிரி செல்சியஸ் வரை சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது முதற்கட்டம் அடுத்த மாதம் நிறைவு பெற உள்ள நிலையில், அடுத்ததாக சூப்பர் எல்நினோவின் 2-ம் கட்ட தாக்கம், வடகிழக்கு பருவமழையில் அதிக மழையை கொடுக்க இருக்கிறது" இவ்வாறு கூறினார்.


Click it and Unblock the Notifications
