அடி மேல் அடி.. பொன்முடி மகன் கவுதமசிகாமணிக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு.. தேதி குறித்த கோர்ட்!
சென்னை: சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி எம்.பி.யுமான கவுதம சிகாமணி எதிராக ஜனவரி 4ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் பொன்முடி, கடந்த 2006-2011ஆம் ஆண்டுகளில், தமிழக அரசின் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண் குவாரியில் அதிகளவில் செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது, 2012ல் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது. விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறையினர், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி தொடர்புடைய இடங்களில் கடந்த ஜூலை மாதம் சோதனை நடத்தினர். சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனைகளை தொடர்ந்து, அமைச்சர் பொன்முடியும், சென்னையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
செம்மண் முறைகேடு தொடர்பாக கிடைத்த பெருந்தொகை ஹவாலா பரிவர்த்தனைகள் மூலம் வெளிநாடுகளில் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும், சோதனையின் முடிவில், முக்கிய ஆவணங்களும், 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரிட்டன் பவுண்ட்கள் உள்பட 81 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 41 கோடியே 90 லட்சம் ரூபாய் வங்கி நிரந்தர வைப்பீடு முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.
பொன்முடி வீட்டில் இருந்த போர்டு.. “நானே வந்து அகற்றுவேன்”.. சவால் விட்ட பாஜக நிர்வாகி.. உடனே மாயம்!
இந்தச் சூழ்நிலையில், இந்த சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு தொடர்பாக, அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி திமுக எம்.பி.யுமான கவுதம சிகாமணி, கே.எஸ். ராஜ மகேந்திரன், வி.ஜெயசந்திரன், கே. சதானந்தம், கோபிநாத் மற்றும் கே.எஸ் பிஸ்னஸ் கவுஸ் நிறுவனம் உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக அமலாக்கத் துறை சார்பில் ஆகஸ்ட் மாதம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 90 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சென்னை 12 ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 24ஆம் தேதி கவுதம சிகாமணி எம்.பி, கே.எஸ். ராஜ மகேந்திரன், வி.ஜெயசந்திரன், கே.சதானந்தம், கோபிநாத் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி இருந்தனர். அவர்களுக்கு குற்றபத்திரிக்கை நகல்கள் அன்று வழங்கப்பட்டன.
குற்றச்சாட்டுகள் பதிவிற்காக இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கௌதம சிகாமணி நேரில் ஆஜராகவில்லை. அப்போது அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விசாரணை அடுத்த மாதம் தள்ளிவைக்க வேண்டும் என கோரினார். அப்போது நீதிபதி நீண்ட நாள் விசாரணை தள்ளிவைக்க முடியாது என தெரிவித்தார்.
பின்னர் விசாரணை ஜனவரி 4 தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி அன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என தெரிவித்தார். குற்றச்சாட்டுகள் பதிவிற்கு, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் அன்றைய தினம் நேரில் ஆஜாராக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications