காற்று மாசில் உலக அளவில் டாப்.. மக்களே இது நியாயமா? கொட்டி தீர்க்கும் சென்னைவாசிகள்
சென்னை: தீபாவளி கொண்டாட்டத்தால் தலைநகர் சென்னை காற்று மாசு உச்சம் தொட்டுள்ளது. உலகிலேயே சென்னையில்தான் காற்று மாசு அதிகமாக உள்ளதாக, உலக அளவில் காற்று மாசு குறித்து கண்காணிக்கும் ஏகியுஐ இணையதள தரவுகளின் படி தெரியவந்துள்ளது. சென்னையில் இரவு 9 மணியளவில் காற்றின் தரக்குறியீடானது 1,000 புள்ளிகளை தாண்டியது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இன்று மக்கள் பட்டாசுகளை வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்த நிலையில், மழைக்கு நடுவிலும் பட்டாசுகளை மக்கள் வெடித்து தள்ளினர்.

உலககிலேயே சென்னையில் அதிகம்
குறிப்பாக பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்ட நேரமான இரவு7 முதல் 8 மணி வரையில் சென்னை முழுக்க வானில் வர்ணஜாலமாக காட்சியளித்தது. அதே நேரத்தில் பட்டாசுகள் காரணமாக சென்னையில் காற்றும் மாசும் கடுமையாக அதிகரித்தது. சென்னை முழுக்க புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
உலக அளவில் காற்று மாசு குறித்து கண்காணிக்கும் ஏகியுஐ இணையதள தரவுகளின் படி உலகிலேயே சென்னையில்தான் காற்று மாசு அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இரவு 9 மணியளவில் காற்றின் தரக்குறியீடு 1,000 புள்ளிகளை தாண்டியது. உலகில் காற்று மாசு நிறைந்த 100 நகரங்கள் பட்டியலில் இந்திய நகரங்களே பெரும்பாலான இடத்தை ஆக்கிரமித்து இருந்தன.
மாஸ்க் அணிந்து வெளியில் செல்லுமாறு..
சென்னையில் காற்றின் தரம் ஆபத்தான நிலையில் இருப்பதால் மக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறும் வெளியில் சென்றால், மாஸ்க் அணிந்து செல்லுமாறும் சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டுள்ளனர். பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தரராஜன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், 'காற்றின் தரக்குறியிடு 1,123 -ஐ தாண்டியிருப்பதாக காட்டும் இமேஜை பகிர்ந்து இருந்தார்.

மேலும், சென்னை மக்களே இது நியாயமா? காற்று மாசின் அளவு இவ்வளவு மோசமாக இருந்தால் நீங்கள் 60 சிகரெட் பிடித்தற்கு் சமம். கொடுமை! " என்று பதிவிட்டுள்ளார். சென்னையில் காற்றின் தரம் மோசமாக இருப்பதால் சாலைகளே கண்ணுக்கு தெரியாத அளவுக்கு இருப்பதாக பலரும் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சமூக ஆர்வலர்கள் கவலை
சென்னையில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருப்பது உள்ளிட்ட காரணங்களால், கடந்த ஆண்டு தீபாவளியை விட இந்த ஆண்டு காற்று மாசு கடுமையாக உயர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது. காற்று மாசு அபாய அளவை தாண்டி சென்றுள்ள நிலையில், தொடர்ந்து பட்டாசுகள் வெடிக்கப்படுவதால் நிலமை இன்னும் மோசமாக வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் பலரும் கவலையை வெளிப்படுத்தினர்.





Click it and Unblock the Notifications
