சென்னையில் விமான படை சாகசத்தை பார்க்க சென்ற 5 பேர் அடுத்தடுத்து மரணம்! தீவிர சிகிச்சையில் 30+ பேர்
சென்னை: சென்னையில் மிகச் சிறப்பான வகையில் விமான சாகச நிகழ்ச்சி நடந்து முடிந்தது. இதை சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கண்டு ரசித்தனர். இருப்பினும், நிகழ்ச்சி முடிந்த பிறகு மக்கள் வீடு திரும்ப முடியாமல் டிராபிக் நெரிசலில் சிக்கி அவதிப்பட்டு வருகிறார்கள். இதற்கிடையே வெயிலின் தாக்கத்தால் சாகச நிகழ்ச்சியைப் பார்க்க வந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்திய விமானப் படை 92 ஆண்டுகள் நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில் மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி நடந்தது. இதைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் குவிந்தனர்.

விமான சாகசம்: காலை 11 மணிக்குத் தொடங்கிய விமான சாகச நிகழ்ச்சிகள் மதியம் 1- 1.30 மணி வரை நடந்தது. இதை ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் நேரில் கண்டுகளித்தனர். மெரினாவில் பொதுமக்கள் இதைக் கண்டுகளிக்க 15க்கும் மேற்பட்ட இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
விமானப் படை வீரர்கள் வாவ் போட வைக்கும் வகையில் வானில் பல வர்ண ஜாலங்களை நிகழ்த்தினர். அதைப் பார்த்த மக்கள் வியந்து போனார்கள். அதிலும் வான் சாகசங்களுக்குத் தமிழிலேயே பெயர் வைக்கப்பட்டதும் மக்களைப் பெரியளவில் கவர்ந்தது. சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த சாகச நிகழ்ச்சியை நேரில் கண்டு ரசித்தனர். இது லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸிலும் இடம் பெறுகிறது.
குற்றச்சாட்டு: சாகச நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தாலும் ஏற்பாடுகள் மிக மோசமாக இருந்ததாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். குறிப்பாகப் பல இடங்களில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் கூட இல்லை என்று மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். இது மட்டுமின்றி சாகச நிகழ்ச்சிகள் முடிந்து 4 மணி நேரம் ஆகிவிட்ட போதிலும் பல இடங்களில் இன்னும் டிராபிக் பாதிப்பும் மோசமாகவே இருக்கிறதாம்.
இதற்கிடையே சென்னையில் விமானப் படை சாகச நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்ற 60 வயதான நபர் உயிரிழந்துள்ளார்.. ஜான் என்ற அந்த நபர் மெரினாவில் சாகச நிகழ்ச்சியைப் பார்த்துள்ளார். நிகழ்ச்சி முடிந்த நிலையில், அவர் மயங்கியதை அருகே இருந்தவர்கள் பார்த்துள்ளனர். இருப்பினும், அப்போது அங்கு டிராபிக் மோசமாக இருந்ததால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.
உயிரிழப்பு: அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸுக்கு கால் செய்து, சிறிது நேரத்திற்குப் பின்னரே ஆம்புலன்ஸ் அங்குச் சென்றுள்ளது. மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதிலும் சிரமம் ஏற்பட்டது. மக்கள் கூட்டத்திற்கு இடையே அந்த வாகனம் ஊர்ந்து சென்றே ஓமந்தூரார் மருத்துவமனையை அடைந்தது. அங்கு அந்த நபருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்தார்.
இதற்கிடையே சென்னையில் விமானப் படை சாகச நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்ற மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஐஎன்எஸ் அடையாறு அருகே நின்று வான் சாகச நிகழ்ச்சியைப் பார்த்தவர் மயக்கமடைந்து உயிரிழந்தார். மயக்கமடைந்த நபர் திருவொற்றியூரை சேர்ந்த கார்த்திகேயன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்கா ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும், சிகிச்சை பலன் இல்லாமல் அவர் பலியானார்.
கூட்ட நெரிசல் மற்றும் வெயிலின் தாக்கத்தால் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்ற 93 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 200-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில், 93 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஏற்கனவே ஜான், கார்த்திகேயன் ஆகிய 2 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தினேஷ்குமார் (வயது 37) என்பவர் உயிரிழந்துள்ளார். இதேபோன்று பெருங்களத்தூரை சேர்ந்த சீனிவாசன் என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அருசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சீனிவாசன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். விமான சாகச நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வீட்டுக்கு பைக்கில் வந்துகொண்டிருந்தநிலையில் உடல் நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது சீனிவாசன் உயிரிழந்துள்ளார்.
இதேபோல் சென்னையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்த்துவிட்டு மயக்கமடைந்ததால் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் யார் என்பது தொடர்பாக சென்னை மெரினா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் மூலம் உயிரிழப்பு 5 ஆக அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications