81 பில்லர்கள் பொருத்தப்பட்ட பின்.. அண்ணா சாலை மேம்பாலப் பணியில் எங்கே சிக்கல் ஏற்பட்டது? பின்னணி
சென்னை: சென்னையின் மிக முக்கிய சாலையாக விளங்கும் அண்ணா சாலையில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ.621 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்ட மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 3.2 கி.மீ தொலைவுக்கு அமையவுள்ள இந்த மேம்பாலத் திட்டத்தில், சுமார் 70 சதவீதப் பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது கட்டுமான வடிவமைப்பில் பெரும் மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் நெடுஞ்சாலைத் துறைக்கு ஏற்பட்டுள்ளது.

திடீர் சிக்கலுக்கு என்ன காரணம்?
சுமார் 81 தூண்கள், 50 ஸ்பேன்கள் மற்றும் கர்டர்கள் சைதாப்பேட்டை - நந்தனம் பகுதியில் அமைக்கப்பட்டுவிட்டன. இந்நிலையில், நந்தனம் முதல் தேனாம்பேட்டை வரையிலான பகுதியில் சிக்கல் உருவானது.
இந்த மேம்பாலத்தை அமைக்கும்போது, ஏற்கனவே பூமிக்கடியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களின் கான்கிரீட் அடித்தளங்களையே (Metro foundations) மேம்பாலத்தின் மையத் தூண்களுக்கும் (Central pillars) பயன்படுத்த ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், களப்பணியின்போது மெட்ரோ ரயில் அடித்தளங்கள் நேர்கோட்டில் அமையாமல் இருப்பது தெரியவந்தது. அந்த அடித்தளத்தின் மீது அப்படியே தூண்களை எழுப்பினால், மேம்பாலம் திட்டமிட்ட நேர்கோட்டுப் பாதையை விட்டு விலகி, தேவையற்ற வளைவை உருவாக்கும் நிலை ஏற்பட்டது.
பூமிக்கடியில் ஓடும் மெட்ரோ ரயில்: பொறியியல் சவால்
அண்ணா சாலையில் மேம்பாலம் அமைப்பது மற்ற சாலைகளைப் போன்றதல்ல. 3.2 கி.மீ நீளப் பாலத்தில், 2.4 கி.மீ பகுதி பூமிக்கு அடியில் ஓடும் மெட்ரோ சுரங்கப் பாதைக்கு மேலேயே செல்கிறது. மேலும் 460 மீட்டர் தூரம் தேனாம்பேட்டை மற்றும் நந்தனம் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு நேரடியாக மேல் அமையவுள்ளது.
பூமிக்கடியில் 14 முதல் 15 மீட்டர் ஆழத்தில் மெட்ரோ சுரங்கங்கள் இயங்கி வருகின்றன. ஓடும் ரயில்களுக்கும் பயணிகளுக்கும் எந்தப் பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதற்காக, மேம்பாலத்திற்கான அடித்தளப் பணிகளைச் சாலையிலிருந்து வெறும் 7 மீட்டர் ஆழம் வரை மட்டுமே மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மெட்ரோ பாதையைச் சேதப்படுத்தாமல் பாலத்தைக் கட்டுவது பொறியாளர்களுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
அறிமுகமாகும் புதிய போர்டல் தூண்கள் திட்டம்
இச்சிக்கலைத் தீர்க்க, மாநில நெடுஞ்சாலைத் துறை வடிவமைப்பில் மாற்றங்களைச் செய்து புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, சாலையின் நடுவே ஒற்றைத் தூண் அமைக்கும் முறைக்குப் பதிலாக, போர்டல் தூண்கள் அதாவது சாலையின் இருபுறமும் தூண்கள் அமைத்து இணைக்கும் முறையில் கட்டப்படவுள்ளன. தேனாம்பேட்டை மற்றும் நந்தனம் மெட்ரோ நிலையப் பகுதிகளில் சுமார் 45 தூண்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது மெட்ரோ நிலைய சுவர்கள் மூலம் கூடுதல் அடித்தள ஆதரவை வழங்குகிறது.
சாலையின் அகலமும் பகுதிக்குப் பகுதி மாறுபடுகிறது. சைதாப்பேட்டையில் 40 மீட்டராகவும், டி.எம்.எஸ் பகுதியில் 36 மீட்டராகவும் இருக்கும் அண்ணா சாலை, அறிவாலயம் அருகே 32 மீட்டராகவும், சீனோடாப் சாலை அருகே 28 மீட்டராகவும் குறுகுகிறது. குறுகலான இந்த இடங்களில் மையத் தூண்களை அமைத்தால் கீழ் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதையும் கணக்கில் கொண்டே இந்த போர்டல் வடிவமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தாமதமாகும் காலக்கெடு: வாகன ஓட்டிகள் காத்திருப்பு
2024 ஜனவரியில் தொடங்கிய இத்திட்டம், முதலில் 2026 செப்டம்பரில் முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள வடிவமைப்பு மாற்றத்தால் திட்டத்தின் காலக்கெடு 2027 பிப்ரவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய வடிவமைப்பின்படி கட்டுமானத்தை மாற்றியமைக்க கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால், இந்த புதிய தேதியிலும் பணி நிறைவேறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
திட்டச் செலவு ₹621 கோடியைத் தாண்டாமல் முடிக்க அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். இருப்பினும், பணிகள் முடியும் வரை அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றங்களும் நெரிசலும் தொடரவே செய்யும்.


Click it and Unblock the Notifications
