தலைநிமிருது சென்னை.. இன்றே நடைமுறைக்கு வந்தது போக்குவரத்து மாற்றம்.. ஒரு வருஷத்துக்கு இப்படித்தானாம்
சென்னை: மெட்ரோ ரயில் பணி காரணமாக சென்னையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. ஆயிரம் விளக்கு ஒயிட்ஸ் சாலை பகுதியில் ஒரு வருடத்துக்கு இந்த போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அத்துடன் இந்த போக்குவரத்து மாற்றம் இன்றே நடைமுறைக்கும் வந்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை, மெட்ரோவின் தேவையை தவிர்க்க முடிவதில்லை. அதனால்தான், நாளுக்கு நாள் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே வருகிறது. அதனால்தான், மெட்ரோ நிறுவனமும், பயணிகளின் வசதிகளை கருதி பல்வேறு அதிரடிகளை வெளியிட்டபடியே உள்ளது.

2 வழித்தடங்கள்: தற்போது, 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன.. சென்ட்ரலிலிருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூர் வரை ஒரு வழித்தடமும், சைதாப்பேட்டை ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக இன்னொரு வழித்தடமும் செயல்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் தினசரி 2.60 லட்சம் முதல் 3 லட்சம் பேர் வரை பயணம் செய்கிறார்கள்..
இனிவரும் நாட்களிலும், மெட்ரோ பயன்பாடுகள் அதிகமாகவே இருப்பதால், அதன் சேவையையும், தேவையையும் விரிவுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. விரைவில் இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்துகளில் மாற்றம் செய்யப்பட வேண்டிய நிலைமையும் அவ்வப்போது வந்துவிடுகிறது.
அண்ணாசாலை: அந்தவகையில், சென்னையில் மெட்ரோ ரயில் பணி காரணமாக ஆயிரம் விளக்கு, பகுதியில் ஒயிட்ஸ் சாலையில் செய்யப்பட உள்ள போக்குவரத்து மாற்றம் குறித்து போக்குவரத்து போலீஸார் செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அதில் உள்ளதாவது:
"சென்னை ஒயிட்ஸ் சாலையில் உள்ள ஆயிரம் விளக்கு பகுதிகளில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினரால் 15.03.2024 முதல் 14.03.2025 வரை ஒரு வருட காலத்திற்கு போக்குவரத்து மாற்றங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அடையாளம்: அதன்படி, பட்டுலாஸ் சாலை - ஒயிட்ஸ் சாலை சந்திப்பிலிருந்து ஒயிட்ஸ் சாலை - திரு.வி.க சந்திப்பு வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. அண்ணாசாலை: ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து அண்ணாசாலை நோக்கி ஒயிட்ஸ் சாலையில் வரும் வாகனங்கள் பட்டுலாஸ் சாலை - ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் திரும்பி தங்களது இலக்கை அடையலாம்.
அண்ணாசாலையிலிருந்து ஸ்மித் சாலையில் வரும் வாகனங்கள் ஸ்மித் ரோடு - ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஒயிட்ஸ் சாலை - திரு.வி.க சந்திப்பில் இருந்து பட்டுலாஸ் சாலை - ஒயிட்ஸ் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் இயக்கப்பட்டு ராயப்பேட்டை மணிக்கூண்டிற்கு சென்றடையும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications