புத்தக பிரியர்களே ரெடியா! சென்னை புத்தகக் கண்காட்சி இன்று தொடக்கம்! நுழைவுக் கட்டணம் எவ்வளவு?
சென்னை: 2024 ஆண்டுக்கான சென்னை புத்தக கண்காட்சி இன்று தொடங்கியுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தார். ஜனவரி 21 ஆம் தேதி வரை 19 நாட்கள் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. அந்த வகையில் சென்னையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் புத்தகக் கண்காட்சிக்கு லட்சக்கணக்கான மக்கள் வருகை தந்து புத்தகங்களை வாங்கிச் செல்வார்கள்.

சென்னையில் நடக்கும் புத்தக கண்காட்சி எப்போது என புத்தக பிரியர்கள் காத்திருப்பார்கள். இந்த புத்தக கண்காட்சிதான் அவர்களுக்கு கிறிஸ்துமஸ், ரம்ஜான், புத்தாண்டு, பொங்கல் ஆகியவையாகும். இங்கு கிடைக்கும் புத்தகங்கள் சிறப்பு தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படும்.
இதனால் புத்தக பிரியர்கள் இதை தவறவிடமாட்டார்கள். இந்த கண்காட்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி படிக்கும் கதைகள், நாவல்கள், இலக்கியம் சார்ந்த நூல்கள், ஆங்கில புத்தகங்கள், வாழ்க்கை வரலாறு தொடர்பான புத்தகங்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் உள்ளிட்டவை நிறைந்திருக்கும்.
எதை எடுப்பது எதை விடுவது என்றே தெரியாத அளவுக்கு அத்தனை புத்தகங்களும் வாசிக்க வேண்டியவைகளாகவே இருக்கும். இந்த நிலையில் இந்த புத்தக கண்காட்சி இன்று தொடங்கியுள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 47 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாலை 4.30 மணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஜனவரி 21 ஆம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
புத்தகக் கண்காட்சியை பார்வையிட நுழைவுக் கட்டணமாக ரூ 10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் 1000 அரங்குகள் அமைக்கப்படும். விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் , வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் நடைபெறும்.
இந்த புத்தக கண்காட்சி நடைபெறும் இடத்தில் தினமும் மாலையில் தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்களின் உரை இடம்பெறும். மேலும் புத்தகக் கண்காட்சி தொடக்க விழாவில் 6 படைப்பாளர்களுக்கு கலைஞர் பொற்கிழி விருதும், சிறந்த பதிப்பாளர், நூலகர் உள்ளிட்டோருக்கு விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கவுள்ளார்.












Click it and Unblock the Notifications