தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்!
சென்னை: சென்னை மாவட்டத்தில் மொத்தமுள்ள 16 தொகுதிகளில் ஒரு தொகுதியை மட்டும் கூட்டணிக் கட்சிக்கு விட்டுக் கொடுத்து 15 தொகுதிகளில் திமுக நேரடியாகப் போட்டியிடுகிறது. கடந்த முறையைப் போலவே சென்னையில் வேளச்சேரி தொகுதியில் மட்டும் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
சென்னையில் மொத்தம் 16 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. சென்னை மாவட்டத்தில் மட்டும் சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர், இவர்களே எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பதைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பார்கள்.

2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், இந்த 16 தொகுதிகளையும் தி.மு.க தலைமையிலான கூட்டணி முழுமையாகக் கைப்பற்றியது. 2021 தேர்தலில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 15-ல் திமுகவும், ஒரு தொகுதியில் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸும் வெற்றி பெற்றன. அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்.கே.நகர் ஜே.ஜே. எபினேசர் (திமுக), பெரம்பூர் ஆர்.டி. சேகர் (திமுக), கொளத்தூர் மு.க. ஸ்டாலின் (திமுக) வில்லிவாக்கம் அ. வெற்றியழகன் (திமுக), திரு.வி.க. நகர் (தனி) பி. சிவகுமார் (திமுக), எழும்பூர் (தனி) இ. பரந்தாமன் (திமுக), இராயபுரம் ஆர். மூர்த்தி (திமுக), துறைமுகம் பி.கே. சேகர்பாபு (திமுக), சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி உதயநிதி ஸ்டாலின் (திமுக), ஆயிரம் விளக்கு டாக்டர் எழிலன் நாகநாதன் (திமுக), அண்ணா நகர் எம்.கே. மோகன் (திமுக), விருகம்பாக்கம் ஏ.எம்.வி. பிரபாகர ராஜா (திமுக), சைதாப்பேட்டை மா. சுப்பிரமணியன் (திமுக), தி. நகர் ஜெ. கருணாநிதி (தி.மு.க) , மயிலாப்பூர் த. வேலு (திமுக), வேளச்சேரி ஹசன் மவுலானா (காங்கிரஸ்) உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில், கடந்த முறை திமுக போட்டியிட்ட 15 தொகுதிகளிலும் மீண்டும் நேரடியாகப் போட்டியிடுகிறது. கடந்த முறையைப் போலவே சென்னையில் வேளச்சேரி தொகுதியில் மட்டும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. தலைநகர் சென்னையில் போட்டியிட சிபிஐஎம், தேமுதிக, விசிக என பல கட்சிகள் விருப்பம் காட்டிய நிலையில், திமுக 15 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
தலைநகர் சென்னையை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் திமுகவே நேரடியாகக் களமிறங்குவதாகத் தெரிகிறது. முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் சென்னையின் கொளத்தூர், சேப்பாக்கம் தொகுதிகளில் முறையே போட்டியிட உள்ளனர்.












Click it and Unblock the Notifications