சென்னையில்.. நடத்துனரின் காதை கடித்து துப்பிய இளைஞர்! முன்விரோதத்தால் முற்றிய மோதல்!
சென்னை: வட சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் பேருந்து நிலையத்தில், மாநகரப் பேருந்து நடத்துனர் ஒருவர் மர்ம கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். அவரது காதை இளைஞர் ஒருவர் கடித்து துப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
எப்போவோ நடந்த சம்பவத்தை நினைவில் வைத்துக்கொண்டு, இப்போது எதிர்பாராமல் தாக்கி பழிவாங்குவதில் நம்மாட்கள் கெட்டிக்காரர்கள். ஆனால், இந்த பழிவாங்கும் படலத்தின்போது.. எப்படி தாக்குவது என்று தெரியாமல் எக்குத்தப்பாக தாக்கி, மாட்டிக்கொள்கிறார்கள். வடசென்னையிலும் அப்படித்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

வட சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் பேருந்து நிலையத்தில், மாநகரப் பேருந்து நடத்துனர் நித்திய நாதன் மர்ம கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார்.
சென்னை கொடுங்கையூரில் கடந்த 13-ம் தேதி மாலை சுமார் 5.30 மணியளவில், மத்திய மின்சார பணிமனையைச் சேர்ந்த தடம் எண் 2C பேருந்து கண்ணதாசன் நகர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தைப் பின்னோக்கி எடுப்பதற்காக நடத்துனர் நித்திய நாதன் விசில் ஊதி வழி காட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், முன்விரோதம் காரணமாக நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர் நடத்துனரின் காதைக் கடித்துத் துப்பியுள்ளார்.
இதையடுத்து, அந்த இளைஞரின் நண்பர்களும் அங்கு வந்து நடத்துனரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். மேலும், நடத்துனரின் முதுகில் கத்தியால் கீறிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த நடத்துனர் நித்திய நாதன் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காகச் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது நலமுடன் உள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்துப் பேருந்து ஓட்டுனர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் தொடர்புடைய 2 பேரைக் காவல்துறையினர் ஏற்கனவே கைது செய்துள்ள நிலையில், தப்பியோடிய மற்றவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
