செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி ஊருக்குள் புகுந்த வெள்ளம்.. தண்ணீரில் தத்தளிக்கும் நந்தம்பாக்கம் மக்கள்!
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி, குன்றத்தூரை அடுத்த நந்தம்பாக்கம் அம்பேத்கர் நகர் பகுதியில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. வழக்கத்திற்கு மாறாக ஏரி நீர் ஊருக்குள் புகுந்ததால் மக்கள் வேதனையடைந்துள்ளனர். வெள்ள நீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கியது. தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. சென்னைக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்தது.

இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கனமழை காரணமாக ஏரிக்கான நீர்வரத்து 1, 300 கன அடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் மீண்டும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. வட கிழக்கு பருவ மழையால் ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால், சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய நீராதாரங்களுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது.
இதனையடுத்து, ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்ட நீரின் அளவு விநாடிக்கு 250 கன அடியாக இருந்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (டிச. 16) மாலை 4 மணியிலிருந்து ஏரியிலிருந்து விநாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது.
சென்னையைப் பொறுத்தவரை இன்று நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம். இதனால் ஏரியிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியில் முழு கொள்ளளவில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால், ஏரிக்கரையை ஒட்டிய நந்தம்பாக்கம் அம்பேத்கர் நகர் பகுதியில் குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. எப்போதும் இங்கு வெள்ள நீர் வராது என்றும் வழக்கத்திற்கு மாறாக ஏரி நீர் ஊருக்குள் புகுந்துள்ளது என்றும் மக்கள் வேதனையடைந்துள்ளனர். ஏரியில் இருந்து தண்ணீரை குறைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications