சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கருணாநிதி பெயரில் புதிய ஸ்டேன்ட்.. திறந்து வைக்கும் ஸ்டாலின், தோனி
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் புனரமைப்பு பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைந்துள்ளது. இங்கு மறைந்த தமிழ்நாடு முதல்வர் அண்ணாவின் நினைவாக அமைந்துள்ள அண்ணா பெவிலியன் அமைந்துள்ளது. இங்கு புதிய ஸ்டாண்ட் அமைக்கப்படும் நிலையில் இதற்கு மறைந்த தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட உள்ளதாகவும், இதனை மார்ச் 17 ல் முதல்வர் ஸ்டாலின், எம்எஸ் தோனி ஆகியோர் திறந்து வைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் பிற விளையாட்டு போட்டிகளை காட்டிலும் கிரிக்கெட்டுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். இதனால் நாட்டின் முக்கிய நகரங்களில் கிரிக்கெட் மைதானங்கள் அமைந்துள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் மிகவும் புகழ்பெற்றது.
இந்தியாவில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கட் மைதானத்துக்கு பிறகு சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் தான் பழம்பெருமை வாய்ந்ததாக உள்ளது. இங்கு உள்ளூர் போட்டிகள் முதல் சர்வேதேச போட்டிகள் அனைத்தும் நடத்தப்பட்டு வருகின்றன.

3வது ஒருநாள் போட்டி
குறிப்பாக ஐபிஎல்லில் இந்த மைதானம் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஹோம் கிரவுண்ட்டாக உள்ளது. விரைவில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த போட்டி முடிந்த பிறகு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்க இருக்கிறது.. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மார்ச் 22ல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் நடைபெற உள்ளது.

புனரமைப்பு பணி
இந்நிலையில் தான் தற்போது சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் புனரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் கடந்த 2011ல் ரூ.190 கோடியில் மறுசீரமைப்பு பணிகள் நடந்தது. இதில் அண்ணா பெவிலியன், எம்சிசி பெவிலியனில் பணிகள் நடக்காத நிலையில் தற்போது ரூ.90 கோடியில் புனரமைப்பு பணிகள் நடக்கிறது. இதில் அண்ணா பெவிலியனில் புதிய ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பெவிலியன்களில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி பெயரில் ஸ்டேண்ட்
இந்நிலையில் தான் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்டாண்டிற்கு மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது புனரமைக்கப்பட்ட கிரிக்கெட் மைதான பெவிலியன்கள் திறப்பு விழா மார்ச் 17 ல் நடைபெற உள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

ஸ்டாலின்-எம்எஸ் தோனி
இந்த வேளையில் கருணாநிதி பெயரிலான புதிய ஸ்டாண்டை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்எஸ் தோனி உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளனர். அதன்பிறகு இந்த புதிய ஸ்டாண்டில் மார்ச் 22ல் நடக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கருணாநிதிக்கும் மைதானத்துக்கும் தொடர்பு
மறைந்த முதல்வர் கருணாநிதி ஒரு கிரிக்கெட் ரசிகர் ஆவார். இவர் பலமுறை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேரடியாக கிரிக்கெட் போட்டியை ரசித்துள்ளார். மேலும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ள சேப்பாக்கம் சட்டசபை தொகுதியில் 2001, 2006 தேர்தல்களில் கருணாநிதி போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2006 வெற்றியை தொடர்ந்து அவர் 5வது முறையாக முதல்வரானது குறிப்பிடத்தக்கது.

அண்ணா பெவிலியனை திறந்த கருணாநிதி
முன்னதாக மைதானத்தில் மறைந்த முதல்வர் அண்ணாவின் பெயரில் அமைக்கப்பட்ட பெவிலியனை கருணாநிதி தான் திறந்து வைத்தார். தற்போது கருணாநிதியின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டேண்ட்டை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்த புதிய ஸ்டாண்ட் அமைக்க தொடங்கியது முதல் அதற்கு கருணாநிதியின் பெயர் சூட்டப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி வந்தன நிலையில் அது நிறைவேற உள்ளது. தற்போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications