கொரோனா ஹாட் ஸ்பாட்.. சென்னை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கிளையை மூட திடீர் உத்தரவு.. என்ன காரணம்?
சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கிளையை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று தமிழ்நாட்டில் நேற்று 6983 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 22628 ஆக உயர்ந்துள்ளது. இங்கு இதுவரை 2767432 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
36825 பேர் தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். இங்கு தினசரி கேஸ்கள் 1000க்கும் கீழ் போன மாதம் பதிவாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளி முதல் திங்கள் அதிகாலை வரை வார இறுதி நாட்களில் வழிபாட்டு கூடங்கள் மொத்தமாக மூடப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் இரவு நேர லாக்டவுன் அமலுக்கு வந்துள்ளது. மேலும் திரையரங்குகளில் 50 சதவிகிதம் பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இன்னும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை
இந்த நிலையில் சென்னையில் 50 சதவிகித மக்கள் கூட்ட விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்று தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக கூட்டம் இருக்கும் கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து வருகிறார்கள். மாநகராட்சி முழுக்க இதற்காக அதிகாரிகளும் தன்னார்வலர்களும் களமிறக்கப்பட்டு தீவிரமாக சோதனை செய்து வருகிறார்கள். முக்கியமாக வணிக வளாகங்களில் ஏசி இயக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

சரவணா ஸ்டோர்ஸ்
கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கிளையை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குரோம்பேட்டையிலுள்ள சரவணா ஸ்டோர்ஸின் கிளை மூடப்பட்டு உள்ளது. இங்கு மொத்தம் 30 பேருக்கு ஒரே நாளில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அங்கு நேற்று மாலை ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

சென்னை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ்
இதை தொடர்ந்து அங்கே பணியாற்றும் 278 ஊழியர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதில் 30 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிலருக்கு தீவிர கொரோனாவும், சிலருக்கு அறிகுறிகள் இல்லாத கொரோனாவும் ஏற்பட்டு இருந்தது. இதில் பலருக்கு ஓமிக்ரான் அறிகுறிகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த குறிப்பிட்ட சென்னை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கிளையை மூட மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications