Exclusive: தயிர்சாதம் கெட்டுவிடும் என்பதால் அதை வேண்டாம் என்றார் CM... விவரிக்கும் ககன் தீப் சிங்..!
சென்னை: கடந்த 4 நாட்களாக மழைவெள்ள நிவாரணப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு பம்பரமாக சுழன்று வருகிறார் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி.
நாளொன்றுக்கு 70 சதுர கிலோ மீட்டர்களுக்கு மேல் பயணித்து சென்னை மாநகரை வெள்ளத்தில் இருந்து மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டு வருகிறார்.

இந்நிலையில் மழை வெள்ள நிவாரணப் பணிகளில் சென்னை மாநகராட்சி எதிர்கொண்ட சவால்கள் உள்ளிட்ட இன்னும் பல தகவல்களை அறிந்துகொள்வதற்காக நாம் அவரிடம் பேசினோம்.
அப்போது அவர் ஒன் இந்தியா தமிழிடம் பகிர்ந்துகொண்ட விவரம் பின்வருமாறு;
கேள்வி: நிவாரணப் பணிகளிலும், மீட்பு நடவடிக்கைகளிலும் என்னென்ன சவால்களை சந்தித்தீர்கள்..?
பதில்: சென்னையை பொறுத்தவரை 496 சதுர கிலோமீட்டர் நீளமுடையது. 85 லட்சத்திற்கும் அதிகமானோர் வாழக்கூடிய ஒரு மிகப்பரந்த நிலப்பரப்பு இது. இதனால் இங்கு மழை வெள்ள பாதிப்பை சீர் செய்யும் பணிகளில் சவால்கள் இல்லை என்று கூறமாட்டேன். சில இடங்களில் வடிகால் பகுதியை கண்டறிவது எங்களுக்கு மிகுந்த சவாலாக இருந்தது. சென்னையை பொறுத்தவரை தற்போது 3 அல்லது 4 இடங்களில் மட்டும் தான் தண்ணீர் வடியவில்லை. மற்ற அனைத்துப் பகுதிகளிலும் தேங்கி நின்ற மழை அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
கேள்வி: சென்னையில் எந்தெந்த பகுதிகளில் இன்னும் தண்ணீர் வடியவில்லை, அதற்கான காரணம் என்ன?
பதில்: பெரம்பூர் பேரக்ஸ் சாலை, வீனஸ் காலனி, அஜீஸ் நகர் என குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் தான் இன்னும் தண்ணீர் வடியவில்லை. வடிகால் ஏற்படுத்தி தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கையை மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். ரொம்பவும் தாழ்வான பகுதிகளாக இருக்கும் இடங்களில் மட்டும் இந்த சிக்கல் உள்ளது.
கேள்வி: சென்னை மாநகராட்சி தரப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி சொல்லுங்க..?
பதில்: இன்று சென்னையில் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் 46 இடங்களில் படகுகளுடன் மீனவர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். படகுகளையும், மீனவர்களையும் பயன்படுத்துகிறோமோ இல்லையோ, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செய்ய வேண்டியது எங்கள் பொறுப்பு. இதேபோல் 169 சிறப்பு முகாம்கள் தயார் நிலையில் இருக்கின்றன. இன்று மேலும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், எல்லா வார்டுகளுக்கும் முன்பணமாக ரூ.2 லட்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பணம் இந்நேரம் வார்டு வாரியாக உரிய அலுவலர்களுக்கு சென்று சேர்ந்திருக்கும். மோட்டாருக்கு டீசல் வாங்க, உணவு வாங்க என பணமின்றி தடுமாற்றம் வரக் கூடாது என்பதால் வார்டு வாரியாக ரொக்கமாக 2 லட்சம் முன் பணம் கொடுத்திருக்கிறோம்.
கேள்வி: சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு என்ன வகையான உணவு கொடுக்கப்படுகிறது?
பதில்: காலை, மதியம், இரவு என வேளை ஒன்றுக்கு இரண்டரை லட்சம் உணவு பொட்டலங்கள் தயார் செய்து கொடுத்து வருகிறோம். காலையில் பொங்கல் கொடுக்கிறோம், மதியம் சாப்பாடு கொடுக்கிறோம், இரவு 7 மணிக்கெல்லாம் புளி சாதம், லெமன் சாதம், உள்ளிட்ட இன்னும் சில கலவை சாதங்கள் தருகிறோம். தயிர்சாதம் விரைவில் கெட்டுவிடும் என்பதாலும், மழைக்காலம் என்பதாலும் தயிர்சாதம் கொடுக்க வேண்டாம் என முதலமைச்சர் எங்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். இன்னும் ஒரு சாதம் பெயர் எனக்கு நினைவில் வரவில்லை, அதுவும் விரைந்து கெட்டுப்போகும் என்பதால் அதையும் கொடுக்க வேண்டாம் என சி.எம். சொல்லிட்டார். மேலும், முகாம்களில் உள்ள மக்களுக்கு தேவையானதை அருகில் இருந்து கவனித்து செய்துகொடுக்கவும் உத்தரவிட்டுள்ளார். இதனால் எல்லா மண்டலங்களுக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
கேள்வி: தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற மாநகராட்சியில் போதிய மோட்டார் இல்லை எனக் கூறப்படுகிறதே..?
பதில்: சென்னை மாநகராட்சி வசம் தற்போது 570 சிறிய மோட்டார்களும் 162 பெரிய ராட்சத மோட்டர்களும் உள்ளன. இதனைக் கொண்டு நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும், 60 ராட்சத மோட்டார்களை வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கேள்வி: சென்னை மாநகராட்சி உதவி எண்கள் வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே..?
பதில்: இல்லை நீங்கள் சொல்வது தொடக்கத்தில் இருந்திருக்கும், இப்போது நீங்கள் அழைத்துப் பாருங்கள், எல்லா எண்களிலும் இணைப்பை பெற முடியும். பொதுமக்களின் புகார்களை மிக கவனமுடன் கையாள்கிறோம்.












Click it and Unblock the Notifications