70 கிமீ சென்னையின் முக்கிய சாலைகளை நெடுஞ்சாலை துறையிடம் தந்த மாநகராட்சி.. பின்னணி என்ன
சென்னை: சென்னையில் உஸ்மான் சாலை, ஆற்காடு சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை உள்ளிட்ட முக்கியச் சாலைகளைப் பராமரிக்கும் பொறுப்பை சென்னை மாநகராட்சி, தமிழக நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டிருப்பதாக மாநகராசி வட்டாரங்கள் தெரவிக்கின்றன. சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 70 கி.மீ. நீளமுள்ள முக்கியச் சாலைகள் மற்றும் அவற்றின் சில பகுதிகளை பார்ப்போம்.
இவற்றில் பெரும்பாலானவை முக்கியப் பேருந்து வழித்தடச் சாலைகளாகவும், நகருக்குள் உள்ள நெடுஞ்சாலைகளுடன் இணைக்கப்பட்ட சாலைகளாகவும் இருக்கின்றன. உதாரணமாக 6.4 கி.மீ. நீளத்திற்கு ஆற்காடு காலை (கோடம்பாக்கம் பிரதான சாலை), டாக்டர் எம்.ஜி.ஆர். சாலை - ஆற்காடு சாலையில் 5.4 கி.மீ. தூரம், கொன்னூர் நெடுஞ்சாலையில் 5.2 கி.மீ. தூரம், நியூ ஆவடி சாலை முழுமையாக, தண்டையார்பேட்டை சாலை 4.8 கிமீ உள்ளிட்ட சுமார் 70 கிமீ நீளமுள்ள சாலைகள் மாநில நெடுஞ்சாலை வசம் ஒப்படைக்கப்படுகின்றன

உஸ்மான் சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை, மாதவரம் பால் பண்ணை சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, வெங்கடநாராயணா சாலை, துரைசாமி சாலை. பூந்தமல்லி நெடுஞ்சாலை போன்றவையும் மாநகராட்சியிடம் இருந்து மாநில நெடுஞ்சாலை துறை வசம் ஒப்படைக்கப்படுகின்றன.
இந்த முக்கியமான சென்னையில் மேற்கண்ட நெடுஞ்சாலைகளில் சாலைப் பராமரிப்பு பணிகளை மாநில நெடுஞ்சாலை துறை மேற்கொள்ளும். எனவே சாலையின் தரத்தை மேம்படுத்துவதுடன், மழைநீர் வடிகால் பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ள முடியும் என்று அதிகாரிகள் நம்புகிறார்கள். ஏனெனில் இன்றைய சூழலில் ஒரே சாலையின் ஒரு பகுதியை மாநகராட்சியும், மற்றொரு பகுதியை நெடுஞ்சாலைத் துறையும் பராமரிக்கும் நிலை இருக்கிறதாம்.
இந்த பிரச்சனை காரணமாக சாலையின் இரு பகுதிகளிலும் பராமரிப்புத் தரம் மாறுபடுவதாக குற்றச்சாட்டு உள்ளது. அதேபோல் வேறு வேறு துறை என்பதால், மழைநீர் வடிகால்களின் அகலம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்றும் புகார்கள் அதிகரித்தது. அதேபோல் அகலமான வடிகால், குறுகிய வடிகாலைச் சந்திக்கும் இடங்களில் தண்ணீர் வெளியேறுவதில் தடைகள் ஏற்பட்டு வெள்ள அபாயம் ஏற்படுகிறது. குறிப்பாக வெள்ள பாதிப்பு அதிகமாகும் போது, இந்த பாதிப்பு பல இடங்களில் ஏற்படுகிறது. எனவே ஒரே துறையிடம் முழுச் சாலையையும் ஒப்படைத்தால் பராமரிப்பு மற்றும் மழைநீர் வடிகால் பணிகளை ஒருங்கிணைக்க முடியும் என்று தமிழக அரசு நம்புகிறது.
இதுபற்றி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், சாலைகளின் மேற்பரப்பைச் சீரமைக்கும் பணி, . சேதமடைந்த சாலைகளைப் புதுப்பிக்கும் பணிகள், மழைநீர் வடிகால்களை அமைப்பது, ஐந்து ஆண்டுகளுக்கான செயல்திறன் அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தம் அறிமுகப்படுத்துவது போன்ற பணிகளை இனி போன்றவற்றை நெடுஞ்சாலை துறையே இனி மேற்கொள்ளும் . குறிப்பாக சாலையைச் சீரமைக்கும் ஒப்பந்ததாரரே அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அதன் பராமரிப்பையும் மேற்கொள்ளும் வகையில் மாநில நெடுஞ்சாலை ஒப்பந்தங்களை செயல்படுத்த போகிறது என்று கூறினார்.
அதேநேரம் 70 கிமீ தூரத்திற்கு சாலைகளை ஒப்படைக்கும் மாநகராட்சியின் வசம், மாநில நெடுஞ்சாலையின் சாலைகள் இனி கிடைக்காது. சாலைகளை முன்பு பரிமாறிக்கொள்வார்கள். இனி அதற்கு வாய்ப்பே கிடையாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மாநகராட்சி சாலைகள் மாநில நெடுஞ்சாலை வசம் மாற்றப்படுவது இது முதல் முறையல்ல.. 2023ஆம் ஆண்டு 35 கி.மீ. நீளமுள்ள 19 சாலைகள் நெடுஞ்சாலைத் துறையிடமிருந்து மாநகராட்சிக்கு மாற்றப்பட்டன. அதற்குப் பதிலாக 7.5 கி.மீ. நீளமுள்ள ஆறு பேருந்து வழித்தடச் சாலைகள் நெடுஞ்சாலைத் துறைக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இனிமேல் அப்படி வழங்கப்பட வாய்ப்பே இல்லை.
அதேநேரம் சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் சாலைகள் இருந்தால் கவுன்சிலர், மேயர் போன்ற மக்கள் பிரதிநிதிகளிடம் பொதுமக்கள் புகார் அளித்து சாலையை மாற்ற வைக்க முடியும். ஆனால் நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்றப்பட்டால் அதிகாரிகளை அணுகுவது சிரமம் ஏற்படும் என்று கவலைகளை சிலர் தெரிவித்துள்ளனர்.




Click it and Unblock the Notifications
