என்ன இதெல்லாம்? 5 கான்ட்ராக்டர்களுக்கு ‘ஃபைன்’ போட்ட சென்னை மாநகராட்சி.. இனியும் நடந்தா அவ்ளோதான்!
சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால் நடைபெறும் இடங்களில் முறையான பாதுகாப்பு அம்சங்களை மேற்கொள்ளாத 5 ஒப்பந்ததாரர்களுக்கு தலா ரூ.20,000 அபராதம் விதித்து, விளக்கம் கேட்டு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மீண்டும் விதிகளை மீறினால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கிறது. எனினும் பருவமழை தொடங்குவதற்கு முன்னரே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மழைக்காலம் தொடங்கிவிட்டால் கழிவுநீர் கால்வாய்களில் தண்ணீர் அடைத்து சாலைகளில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்படும். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழை வெள்ள காலங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பின்றி போக்குவரத்திற்கு இடையூறு இன்றி செல்லும் வகையில் மழைநீரானது சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்காமல் வடிந்து செல்லும் வகையில் , மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஆலந்தூர்,பெருங்குடி ,சோழிங்கநல்லூர் மண்டலங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன.இப்பணிகள் காரணமாக பல்வேறு சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதற்கிடையே இடை இடையில் மழை பெய்வதால் வடிகாலுக்காக தோண்டப்பட்ட குழிகளில் தண்ணீர் தேங்குகிறது.

அண்மையில், நங்கநல்லூரில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவர் மழைநீர் வடிகால்வாயில் விருந்து உயிரிழந்தார். இந்நிலையில், மழைநீர் வடிகால் பணிகளை குறித்த காலத்திற்குள் தரமாக முடிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்ததாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில் சென்னையில் மழைநீர் வடிகால் நடைபெறும் இடங்களில் முறையான பாதுகாப்பு அம்சங்களை மேற்கொள்ளாத 5 ஒப்பந்ததாரர்களுக்கு தலா ரூ.20,000 அபராதம் விதித்துள்ளதோடு, விளக்கம் கேட்டு சென்னை மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மீண்டும் விதிகளை மீறினால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications