"சென்னையில் இனி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாது"! புதிய திட்டத்தை கையில் எடுத்த மாநகராட்சி ஆணையர்
சென்னை: சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான சொத்துகளை பாதுகாக்கும் பொருட்டு ஒரு முக்கிய நடவடிக்கையை எடுக்க உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகள் நடக்காத வண்ணம் இருக்கும்.
சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருந்து வருகிறது. இந்த ஆக்கிரமிப்புளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு அதிரடியாக அகற்றி வருகிறார்கள்.

இது போன்ற ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல், விபத்துகள், இட நெரிசல் உள்ளிட்டவை ஏற்படுகிறது. அதிலும் நடைபாதையை ஆக்கிரமித்து பல வியாபாரிகள் கடைகளை விரித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு திநகர் சிவப்பிரகாசன் தெருவில் உள்ள நடைபாதைகள் இருப்பதே தெரியாத அளவிற்கு ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன.
அது போல் ரங்கநாதன் தெரு, பாண்டிபஜார், சிவபிரகாசன் தெரு, ஜிஎன் செட்டி , வெங்கட் நாராயண சாலை, வடக்கு உஸ்மான் ரோடு, தெற்கு உஸ்மான் ரோடு, தியாகராய நகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
அது போல் சென்னை மாநகாட்சி அதிகாரிகள் பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்த 50-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அப்போது அங்கிருந்த கடைக்காரர்கள் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும் போலீஸார் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
இது போல் சென்னை என்றில்லை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஆக்கிரமிப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டாலும் மீண்டும் அவை ஆக்கிரமிக்கப்படுகின்றன. பெசன்ட் நகரில் உள்ள கடைகளில் சுகாதாரம் இல்லாமலும் தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில் ஆக்கிரமிப்புகள் நடைபெறாத வண்ணம் இருக்க ஆணையர் குமரகுருபரன் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிக்குள்பட்ட நிலங்கள், சொத்துகள் எல்லாம் இரும்பு கிரில் போட்ட சுற்றுச் சுவர் மூலம் பாதுகாக்கப்படும். இந்த மாதிரி படத்தில் உள்ளதை போல் சுற்றுச்சுவர் அமைக்க தேவையான தோராய மதிப்பீட்டை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என்றார்.
இந்த திட்டம் குறித்து நெட்டிசன்கள் கூறுகையில், கோயில் நிலங்கள், நீர் நிலைகளில் எல்லாம் இது போல் ஆக்கிரமிப்புகள் செய்யாத வண்ணம் சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் சிலர் இந்த கேட்கள் மூலம் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் வராததை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications