சென்னை ஈசிஆர் கார் சேஸிங் வழக்கில் சந்துருவுக்கு 15 நாட்கள் சிறை.. பழைய ரெக்கார்டை தோண்டிய போலீஸ்!
சென்னை: சென்னை ஈசிஆரில் பெண்கள் சென்ற காரை துரத்தி அச்சுறுத்திய வழக்கில் கைதான முக்கிய குற்றவாளியான சந்துருவை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நள்ளிரவில் இளம்பெண்கள் உள்ளிட்ட 4 பேர் சென்ற காரை, கட்சிக் கொடி பொருத்திய காரில் இளைஞர்கள் துரத்திச் சென்று காரை குறுக்கே நிறுத்தி மறித்து அச்சுறுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கடந்த ஜனவரி 25 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில், 7 பேருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்ததையடுத்து, சந்தோஷ், தமிழ் குமரன், அஸ்வின் மற்றும் விஷ்வேஸ்வரன் ஆகிய 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த 3 பேரை போலீசார் தேடிவந்த நிலையில், வழக்கில் முக்கிய குற்றவாளியான சந்துருவை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
சென்னை தேனாம்பேட்டையில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த சந்துருவை அதிரடியாக கைது செய்த போலீசார், ஈசிஆரில் உள்ள விடுதியில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். கைதான சந்துரு, சோழிங்கநல்லூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டார். இந்த வழக்கில் அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, பிப்ரவரி 14 ஆம் தேதி வரை சிறையில் அடைக்கப்படுகிறார்.
முக்கிய குற்றவாளி சந்துரு கைது குறித்து விளக்கம் அளித்த பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன், சந்துரு மீது ஏற்கனவே கடத்தல் மற்றும் பணமோசடி ஆகிய 2 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவித்தார்.
சந்துரு, கன்னியாகுமரியைச் சேர்ந்த அனிஷ் என்பவருக்கு சொந்தமான காரை வாங்கி ஓட்டி வந்துள்ளார். சம்பவத்தன்று சந்துரு, கைது செய்யப்பட்ட சந்தோஷ் உள்ளிட்டோர் 2 கார்களில் ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியை சுற்றி பார்க்க வந்துள்ளனர். அவர்களிடம் வேறு எந்த நோக்கமும் இருந்ததாகத் தெரியவில்லை எனத் தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரில் 5 பேர் காட்டாங்கொளத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கின்றனர். ஒருவர் வெளி மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கிறார். ஒரு நபர் தனியாக தொழில் செய்து வருகிறார். வழக்குப் பதிவில் எந்த தாமதமும் ஏற்படவில்லை. இந்த வழக்கில் காவல்துறை நடுநிலைமையுடன், நேர்மையுடன் விசாரணை செய்கிறது எனத் தெரிவித்தார்.
மேலும், இந்தச் சம்பவத்தையடுத்து கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முட்டுக்காடு பகுதியில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. காவல்துறையினரின் ரோந்து பணி மேலும் தீவிரப்படுத்தப்பட உள்ளது என துணை ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழ்நாட்டில் எங்கு குற்றம் நடந்தாலும், அதனை திமுகவுடன் தொடர்புபடுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை பூதாகரமாக்க முயற்சித்தார்கள். ஆனால் அதற்கு காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்துவிட்டது.
சென்னை ஈசிஆரில் நடந்த சம்பவத்தையும் திமுகவுடன் தொடர்புபடுத்தி பேசி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. திமுக கொடியுடன் சென்றால், குற்றம் செய்வதற்கு லைசென்ஸா என்று கீழ்த்தரமாகப் பேசி இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கைது செய்யப்பட்டுள்ள சந்துரு என்பவர் அதிமுகவைச் சேர்ந்தவர்.
அந்த வீடியோவில் இருந்த கார் ஒன்று, நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளரின் சகோதரர் மகனுக்கு சொந்தமானது. அந்த காரை பயன்படுத்தியவர்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். அதிமுகவினர் செய்யும் குற்றங்களுக்கு கூட திமுக மீது பழி சுமத்துகிறார். கடந்த ஓராண்டில் மட்டும் அதிமுகவினர் செய்த குற்றங்கள் ஏராளம். திமுகவின் கொடியை கட்டிக்கொண்டு அதிமுகவினர் குற்றத்தில் ஈடுபடுகிறார்கள்" எனக் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications