விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்.. ஸ்தம்பித்த ஜிஎஸ்டி சாலை.. கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னை: காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதேபோன்று தொடர் விடுமுறை முடிந்துள்ளதால் சொந்த ஊர் சென்றவர்கள் பலரும் சென்னை நோக்கி வரத் தொடங்கினர். ஒரே நேரத்தில் பலரும் சென்னை நோக்கி வந்துகொண்டிருந்ததால் நேற்று இரவே பெருங்களத்தூர், வண்டலூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இன்று அதிகாலையில் செங்கல்பட்டு சிங்கபெருமாள்கோவிலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு 3 கிமீ தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதேபோன்று இன்று காலையில் பெருங்களத்தூர், தாம்பரத்திலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 27 ஆம் தேதி முதல் பள்ளி, மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டது. இதேபோன்று ஆயுத பூஜை பண்டிகை விடுமுறை காரணமாகவும் வார விடுமுறை காரணமாகவும் பலரும் சொந்த ஊர் சென்றனர். சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
குழந்தைகள், பெரியவர்கள் என பலரும் குடும்பத்துடன் சொந்த ஊர் சென்று பண்டிகைகளை கொண்டாடினர். இன்று காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுகிறது. வேலைக்கு விடுமுறை எடுத்து சென்றவர்களும் இன்று பணிக்கு திரும்புவதால் நேற்று இரவில் இருந்து சொந்த ஊர் சென்ற பலரும் சென்னைக்கு திரும்ப தொடங்கினர்.
ஒரே நாளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பலரும் சென்னை திரும்புவதால் பெங்களத்தூர், தாம்பரம், வண்டலூர் பகுதிகளில் நேற்று இரவே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல கிமீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கார்கள், பஸ்கள், வேன்களில் பலரும் சென்னை நோக்கி பயணித்து வருகின்றனர்.
தாம்பரத்தில் சென்னை நோக்கி செல்லும் ஜிஎஸ்டி சாலையில் குரோம்பேட்டை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்ந்து சென்றன. ஜிஎஸ்டி சாலையில் சுமார் 3 கிலோமீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வாகனங்கள் நகர முடியாமல் நகர்ந்து செல்வதால் அந்த சாலையே ஸ்தம்பித்து இருந்தது. இதனால் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நேற்று இரவு சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்படாமல் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
பஸ், ரயில்கள் என அனைத்திலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்க சிலர் சனிக்கிழமை இரவே சென்னை திரும்பியதையும் பார்க்க முடிந்தது. இதனால் சொந்த வாகனங்களில் பலரும் சென்னைக்கு திரும்பி வருகிறார்கள். இதனால் இன்று அதிகாலையிலும் சென்னை நகரமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு போக்குவரத்து நெரிசல் இருந்தது. காலையிலேயே சென்னை தாம்பரம், பெருங்களத்தூர், சிங்கபெருமாள்கோவில் ஆகிய இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications