தமிழ்நாட்டில் மழை, வெள்ளம்.. முதல்வர் ஸ்டாலினிடம் போனில் ஆலோசித்த ஆளுநர் ஆர்.என் ரவி.. பேசியது என்ன?
சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும், சென்னையிலும் கனமழை பெய்து வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலினுடன் ஆளுநர் ஆர்.என் ரவி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை காரைக்கால் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சேலம், வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, ராணிபேட்டை, திருவண்ணாமலை , கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருவண்ணாமலை, தூத்துக்குடி, வில்லிபுரம், திருநெல்வேலி, நாகப்பட்டினம், கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிகாலையில் இருந்து விடாமல் கனமழை பெய்து வருகிறது.

மீட்டிங்
மழையை தொடர்ந்து சென்னையில் 3 நாட்களாக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வந்தார். மக்களை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்கினார். இதையடுத்து இன்று அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தினார். அமைச்சர்கள் துரைமுருகன், எம்.ஆர் கே பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் இறையன்பு, பேரிடர் மீட்பு குழு நிர்வாகிகள் பலர் ஆலோசனையில் கலந்து கொண்டனர்.

உத்தரவு
இந்த ஆலோசனையை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேரில் ஆய்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் நேரில் பார்வையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வெள்ள நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார்.

டெல்டா
மேலும் மழை வெள்ளம் பாதித்த டெல்டா மாவட்டங்களில் பயிர் சேத விவரங்களைப் பார்வையிட்டு அறிக்கை அளிக்க, மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமி தலைமையில் முதல்வர் ஸ்டாலின் குழு அமைத்துள்ளார். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பெரிய கருப்பன், அன்பில் மகேஷ், எஸ் ரகுபதி, சக்ரபாணி ஆகியோர் அடங்கிய குழு அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வருடன் ஆளுநர் ஆலோசனை
இந்த நிலையில்தான் மழை, வெள்ளத்தை தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுடன் ஆளுநர் ஆர். என் ரவி ஆலோசனை நடத்தி உள்ளார். மழை வெள்ள பாதிப்பு குறித்து முதல்வருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழ்நாடு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் நேரில் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

ஆளுநர்
மழை நிலவரம் என்ன, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எப்படி எடுக்கப்பட்டது, தற்போதைய நிலவரம் என்ன என்று ஆளுநர் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. சுமார் 15 நிமிடங்கள் இந்த உரையாடல் நடைபெற்றது.

பாராட்டு
முன்னதாக தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளை ஆளுநர் பாராட்டியதாக தகவல்கள் வந்தன. முதல்வர் ஸ்டாலின் களத்தில் இறங்கி நேரடியாக பணிகளை கவனித்ததையும். நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்டதையும் ஆளுநர் ஆர். என் ரவி பாராட்டியதாக செய்திகள் வந்தன. இந்த நிலையில்தான் இரண்டு பேரும் இன்று ஆலோசனையில் ஈடுப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications