நாட்டிலேயே சென்னையில் தான் சொத்துவரி குறைவு! மும்பை-பெங்களூர்-கொல்கத்தா நகரங்களில் எவ்வளவு தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் சொத்துவரி உயர்த்தப்பட்டிருப்பது கடந்த 2 நாட்களாக மக்கள் மத்தியில் மிகுந்த பேசு பொருளாக திகழ்கிறது.
திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கூட, சொத்து வரி உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினை கேட்டுக்கொண்டுள்ளது.
இதனிடையே பெங்களூரு, கொல்கத்தா, புனே உள்ளிட்ட பெரு மாநகரங்களுடன் ஒப்பிடும் போது சென்னையில் தான் சொத்துவரி மிக குறைவு என்ற புள்ளிவிவரம் ஒன்று வெளியாகியுள்ளது.

சொத்து வரி
தமிழகத்தில் 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 25 சதவீதமும், 601 முதல் 1200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் 1201 முதல் 1800 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதமும் 1800 சதுர அடிக்கு அதிகமாக பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு100 சதவீதமும் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது.

விளக்கப்படம்
இதற்கு அதிமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் பெங்களூரு, கொல்கத்தா, புனே உள்ளிட்ட பெரு மாநகரங்களுடன் சொத்துவரியை ஒப்பிட்டு விவரங்களுடன் கூடிய படங்கள் வெளியாகியுள்ளன. அதில் 600 சதுர அடிக்குள் வரும் குடியிருப்புக்கு அதிகபட்ச வருடாந்திர சொத்து வரி மும்பையில் 84 ஆயிரத்து 583 ரூபாய், புனேயில் 17 ஆயிரத்து 112 ரூபாய், கொல்கத்தாவில் 15 ஆயிரத்து 984 ரூபாய், பெங்களூரில் 8 ஆயிரத்து 660 ரூபாய், சென்னையில் 4 ஆயிரத்து 860 ரூபாய் என ஒப்பீடு விளக்கம் தரப்பட்டுள்ளது.

1,000 சதுர அடி
மேலும், இதேபோல் 1,000 சதுர அடிக்கு குடியிருப்பு சொத்துக்களுக்கான அதிகபட்ச வருடாந்திர சொத்துவரியை பொறுத்தவரை மும்பையில் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 973 ரூபாய், புனேயில் 28 ஆயிரத்து 521 ரூபாய், கொல்கத்தாவில் 26 ஆயிரத்து 640, பெங்களூரில் 14 ஆயிரத்து 433, என்ற அளவில் உள்ள நிலையில் சென்னையில் மட்டுமே 9 ஆயிரத்து 450 ரூபாய் சொத்து வரி உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே குறைவு
இதன் மூலம் நாட்டிலேயே சென்னையில் தான் சொத்துவரி மிக குறைவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்தும் அதனை ஏற்க மறுத்த அதிமுக, சொத்து வரி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications