தினகரன் உண்ணாவிரதத்துக்கு போலீஸ் மறுப்பு.. கோர்ட்டை நாடிய அமமுக.. இறுதியில் அனுமதி அளித்த கோர்ட்
Recommended Video

சென்னை: சென்னை மகாகவி பாரதியார் நகரில் டிடிவி தினகரன் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதிகளில் மக்கள் நலப் பணிகள் செய்யப்படாததை கண்டித்து தினகரன் தலைமையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் உண்ணாவிரத பேராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆண்டிப்பட்டியில் தங்கதமிழ்செல்வன் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

இந்நிலையில் சென்னை மகாகவி பாரதி நகரில் வரும் 17-ஆம் தேதி டிடிவி தினகரன் பங்கேற்கும் உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர். ஆனால் காவல் துறையினர் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில், அமமுக வடசென்னை மாவட்டச் செயலாளர் வெற்றிவேல் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதைக் கண்டித்து, எங்களது கட்சி சார்பில் வரும் 17-இல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டோம்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொள்கிறார். இதற்கு அனுமதி கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தோம். காவல் துறையினர் அனுமதி அளிக்க மறுத்து விட்டனர். எனவே, போராட்டத்துக்கு அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி, ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் போராட்டத்துக்கு அனுமதி கோரிய இடத்தில் 300 பேருக்கு மேல் கலந்து கொள்வதை அனுமதிக்க முடியாது என வாதிடப்பட்டது.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, 300 பேருக்கு மேல் போராட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம், சட்டம் ஒழுங்குக்கு எந்தவிதமான குந்தகமும் ஏற்படுத்த மாட்டோம் என உத்தரவாதம் அளித்து புதிதாக மனு தாக்கல் செய்யும் நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications