மனநலம் பாதித்தவர்களுக்கும்.. தடுப்பூசி முகாம் நடத்துங்க.. சென்னை உயர்நீதிமன்றம் சூப்பர் உத்தரவு!
சென்னை: மனநலம் பாதித்தவர்களுக்கும் முன்னுரிமை அளித்து கொரோனா தடுப்பூசி முகாமை நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடும்பத்தினரால் கைவிடப்பட்டு, தெருக்களில் திரியும் மனநலம் பாதித்தவர்களையும் உரிய முறையில் கவனிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தமிழ்நாட்டில் மனநலம் பாதித்தவர்களுக்கான மாநில அரசின் மனநல கொள்கையை அமல்படுத்தக் கோரியும், வீடில்லா மனநலம் பாதித்தவர்களை மீட்டு, அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட மருத்துவ உதவிகளை வழங்கக் கோரியும், சீர் என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சிறப்பு முகாம்கள்
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்கள் நடத்தியதைப் போல, தங்களை எப்படி பாதுகாக்க வேண்டும் எனத் தெரியாத மனநலம் பாதித்தவர்களுக்கும் முன்னுரிமை அளித்து, சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.

கவனிக்க வேண்டும்
குடும்பத்தினரால் கைவிடப்பட்டு, தெருக்களில் திரியும் மனநலம் பாதித்தவர்களையும் உரிய முறையில் கவனிக்க வேண்டும் எனவும், பூந்தமல்லியில் உள்ள 10.5 ஏக்கர் பரப்பில் உள்ள மறுவாழ்வு மையத்தை பராமரித்து, அந்த வளாகத்தை தடுப்பூசி முகாம் நடத்த பயன்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், இதுசம்பந்தமாக நான்கு வாரங்களில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர். விசாரணையை ஐந்து வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

அவசியம் உள்ளது
தமிழகம் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பலர் தங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் இழந்துள்ளதாகவும், வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் தெரிவித்த நீதிபதிகள், அவர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக வழங்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications