2 ரூட்களில் மட்டும் பஸ்களை இயக்கும் ஒருவர் எப்படி வெற்றி பயணத் திட்டத்தை எதிர்க்கலாம்? நீதிபதிகள்
சென்னை: மகளிருக்கான வெற்றி பயணம் மூலம் விரைவு பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற தமிழக அரசின் திட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்கக் கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்த போதே வாபஸ் பெறப்பட்டது.
தமிழகத்தில் ஏற்கெனவே நகரங்களுக்குள் செயல்பட்டு வந்த விடியல் பயணமானது தவெக ஆட்சி வந்ததும் மாவட்டத்திற்கு மாவட்டத்திற்கு இலவசம் என விரிவுப்படுத்தியது. அரசு விரைவு பேருந்து, எல்எஸ்எஸ், டீலக்ஸ் ஆகிய பேருந்துகளில் மகளிருக்கு இலவசம் என அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தை அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். கோயம்பேட்டில் சென்னை டூ காஞ்சிபுரம் வரை செல்லும் பேருந்தில் விஜய் ஏறி, பெண்களுக்கு பூஜ்ஜியம் என குறிப்பிடப்பட்டிருக்கும் டிக்கெட்டை வழங்கினார்.
இந்த இலவச பயணம் தமிழகம் முழுவதும் காந்தி ஜெயந்தி அன்று தொடங்கி வைக்கப்பட்டது. சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் இறங்கி இலவசமாக செல்லலாம் என்பதால் பெண்கள் அதிகம் பேர் இந்த இலவச பேருந்து பயணத்தை பயன்படுத்துகிறார்கள். இதனால் தனியார் பேருந்துகளில் கூட்டம் குறைந்துள்ளது. இதனால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் பெரும் நிதி இழப்பை சந்தித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் ஈரோட்டைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் கலாமணி என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் முந்தைய ஆட்சியில் "விடியல் பயணம்" என்றிருந்த திட்டம் வெற்றி பயணம் என விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தால் தனியார் பேருந்துகளில் பெண்கள் கூட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இருக்கும் சொட்சம் பேரை வைத்துக் கொண்டு பேருந்தை இயக்க முடியாத நிலை உள்ளது.
இந்த திட்டத்திற்காக அரசு ஆண்டுக்கு ரூ 6000 கோடி மானியம் ஒதுக்கும் நிலையில் தனியார் பேருந்துகளுக்கும் இந்த தொகையை வழங்கி திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும் என கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை அறிவிப்பின்படி செயல்படுத்தப்படும் இந்த திட்டத்திற்கு முறையான அரசாணை எதுவும் பிறப்பிக்கவில்லை. பெண் பயணிகளிடம் மட்டும் கட்டணம் வசூலிக்காமல் இருப்பது அரசியலமைப்பின் சம உரிமைக்கு எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கின் மீது இன்றைய தினம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பு, "சட்டசபையில் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில்தான் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. எனவே இந்த திட்டத்தை நிறுத்த உத்தரவிடக் கூடாது. இதனால் ஏழை எளிய மக்கள் பயனடைகிறார்கள் என வாதம் செய்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 2 வழித்தடங்களில் மட்டும் பேருந்துகளை இயக்கும் கலாமணி எப்படி தமிழ்நாடு முழுவதும் வெற்றிப் பயணத்திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர முடியும்? ஒட்டுமொத்த திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்துள்ள வழக்கை பொது நல வழக்காக கருதமுடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர். அப்போது கலாமணி, வழக்கை தானே வாபஸ் பெற்றுக் கொள்வதாக தெரிவித்ததை அடுத்து அந்த மனு வாபஸ் பெறப்பட்டது.


Click it and Unblock the Notifications
