ஊழல் அதிகாரிகளின் சொத்துகளை முடக்குங்க! புகாருக்கு தனி தொலைபேசி எண் கொடுங்க! ஹைகோர்ட் அதிரடி
சென்னை: தமிழ்நாட்டில் ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளின் சொத்துகளை தேவைப்பட்டால் தற்காலிகமாக முடக்கம் செய்ய வேண்டும் என போலீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக அறிவுரை வழங்கி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சிவந்தங்கலைச் சேர்ந்த விஏஓ ராஜேந்திரன். இவர் தனது பெயர் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர்களில் முறைகேடாக ஸ்ரீபெரும்புதூரில் ரூ.11.50 கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் சதுர அடி நிலத்தை ரூ.10 லட்சத்திற்கு வாங்கியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ராஜேந்திரன் மீது காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி ராஜேந்திரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு கடந்த 2010ம் ஆண்டு செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்தது. இன்று இந்த வழக்கில் நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியம் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக சாட்சி விசாரணை தொடங்கி உள்ளது. இதனால் வழக்கை ரத்து செய்ய முடியாது என கூறினார். மேலும் இந்த வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் நீதிமன்றத்துக்கு அவர் உத்தரவிட்டார்.
இதுதவிர வழக்கு தொடர்பாக தமிழகம் முழுவதும் காவல்துறை அதிகாரிகள் சமர்ப்பித்த சொத்து விவரங்களை ஆய்வு செய்யவும், குறைகள் இருப்பின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சொத்துகளை முடக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக டிஜிபி, தலைமை செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும் அரசு துறைகளில் இருக்கும் ஊழல் குறித்து பொதுமக்கள் புகாரளிக்க தனி ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக தனி தொலைபேசி எண், வாட்ஸ்அப் எண்களை அறிமுகம் செய்ய வேண்டும். ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை அனைத்து ஊழல் வழக்குகளிலும் பின்பற்ற வேண்டும். தேவைப்பட்டால் தற்காலிகமாக சொத்துக்களை முடக்கம் செய்ய வேண்டும்.
நாட்டில் ஊழலை கட்டுப்படுத்துவதற்கு தற்போது இருக்கும் சட்டங்கள் போதுமானவை அல்ல. மேலும் அரசு துறைகளில் பெருகி வரும் ஊழலை கருத்தில் கொண்டு அடுத்த நடவடிக்கை தேவையானதாக உள்ளது. அதன்படி ஊழல் அரசு ஊழியர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வது தொடர்பாக 1999ல் அறிமுகமாகி 24 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள சட்ட மசோதாவை நிறைவேற்றுவது குறித்து நாடாளுமன்றம் சிந்திக்க வேண்டும் எனவும் நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியம் தனது உத்தரவில் தெரிவித்து இருந்தார்.












Click it and Unblock the Notifications