பாலியல் வன்கொடுமை! மாற்றுத்திறனாளி பெண்ணின் 4 மாத கருவை கலைக்க ஹைகோர்ட் அனுமதி
சென்னை: பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 80 சதவீத மாற்றுத்திறனாளி பெண்ணின் 28 வார கருவை மருத்துவ ஆய்வுக்குப் பின் அகற்ற அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 80 சதவீத மாற்றுத்திறனாளியான 27 வயது பெண்ணை பக்கத்து வீட்டுக்காரர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன் காரணமாக அப்பெண் கருவுற்றுள்ளார். அதன் பிறகு விவரம் அறிந்த பெண்ணின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் பக்கத்து வீட்டுக்காரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது.
இந்நிலையில் கருவை கலைக்க செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அணுகிய போது, 28 வார கருவை கலைக்க மருத்துவமனை மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து கருவை கலைக்க உத்தரவிட கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி, அனுமதிக்கத்தக்க காலக்கெடுவான 24 வாரத்தை கடந்துவிட்ட போதிலும், பாதிக்கப்பட்ட பெண் 80 சதவீதம் மாற்றுத்திறனாளி என்பதை கருத்தில் கொண்டு, கருவை கலைக்கலாம் என உத்தரவிட்டுள்ளார்.
உடனடியாக மருத்துவக் குழுவை அமைத்து, பாதிக்கப்பட்ட பெண்ணை ஆய்வு செய்து, கருவை கலைக்கலாம் என்றால் உடனடியாக கலைக்க நடவடிக்கை எடுக்க செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இதற்கு மேல் கலைக்க முடியாது என்றால், அந்த தகவலை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications