சென்னை ஐகோர்ட் வளாகத்தில் நாய்கள் தொல்லையா? நாளைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு!
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகம் தூய்மையாகப் பராமரிக்கப்படுகிறதா? சென்னை மாநகராட்சி போதிய ஒத்துழைப்பு அளிக்கிறதா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பதிவாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் திட, திரவ கழிவுகளை முறையாக மேலாண்மையை செய்து குப்பைகள் இல்லாத தூய்மையான வளாகமாக பராமரிக்க கோரி ராஜ்குமார் என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், குமரேஷ் பாபு ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 2021 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பழைய நிலை அறிக்கை நீதிபதிகளிடம் காண்பிக்கப்பட்டது.
அதனை படித்த நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தை தூய்மையாக பாராமரிக்க சென்னை மாநகராட்சி முறையான ஒத்துழைப்பு வழங்குவதில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது குறுக்கிட்ட மனுதாரர், 35 க்கும் மேற்பட்ட நாய்கள் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் சுற்றித் திரிவதாக தெரிவித்தார்.
இதனை கேட்ட நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்ற வளாகம் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா? சென்னை மாநகராட்சி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க போதிய ஒத்துழைப்பு அளிக்கிறதா ? என்பது குறித்து தற்போதைய நிலை அறிக்கையை நாளைக்குள் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூலை 31 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications